ஆரோக்கியமா இருந்தா இளமையாகவும் இருக்கலாம்!



Celebrity Fitness

சினிமாவில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் சோனு சூட், நிஜ வாழ்வில் ஹீரோவாகிவிட்டார். கொரோனா ஊரடங்கால் பல மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை, அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல தன்னுடைய சொந்த செலவில் பஸ், விமானங்களை ஏற்பாடு செய்து தருவதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார்.
இதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தி, இலவச அழைப்பு எண்ணையும் அறிமுகம் செய்துள்ளார் சோனு. ‘இந்த நாட்டின் கடைசி புலம்பெயர் தொழிலாளர் அவரது குடும்பத்தோடு இணையும் வரை நான் இந்த முயற்சியை கைவிட மாட்டேன்’ என்றும் சொல்லி இருக்கிறார்.

இதுபோன்ற சமூக சேவையில் மட்டுமல்ல; ஃபிட்னஸ் விஷயத்திலும் சோனுவை குருவாக ஏற்றுக்கொள்ளலாம். 46 வயதிலும், தன் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் ரகசியத்தை மற்றவர்களுக்கும் விளக்குகிறார்.  சோனு ‘தபாங்’ போன்ற பல பிரபல ஹிந்திப் படங்களில் நடித்து பிரபலமானவர். சந்திரமுகி, அருந்ததி, தேவி ஆகிய படங்களின்மூலம் தமிழக மக்களுக்கும் பரிச்சயமானவர்.

‘உடலை ஃபிட்டாக வைத்திருப்பது அழகு சம்பந்தப்பட்டது அல்ல; அது ஆரோக்கியம் தொடர்பானது. உடற்தகுதியை எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளமுடியாது. ஏனெனில் இது நம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியின் அடித்தளம்.செய்யும் வேலையை நேசிக்கும்போதும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைபிடிக்கும்போதும், இளமையாவது இயல்பாக நடக்கும் என்பதை நான் நம்புகிறேன். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஒரே மாதிரியான உடல் அமைப்பை பராமரித்து வருகிறேன்.

ஃபங்ஷனல் ட்ரெயினிங், எடை தூக்குவது, ஓட்டம் மற்றும் கார்டியோ பயிற்சிகள் என கலவையாக எனது ஒர்க் அவுட்டை அமைத்துக் கொள்வேன். எனது ஒர்க் அவுட் சவாலாக இருப்பதை நான் விரும்புகிறேன், ஒவ்வொரு நாளும் ஜிம்மில் ஒரு குறிக்கோள் வகுத்துக் கொண்டு, அதை அடைவதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் எனது உடல் பல்வேறு வகையான ஒர்க் அவுட்டுகளுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு புதிய பயிற்சிகளை பரிசோதிப்பதிலும் முயற்சி செய்வேன்.

கடுமையான படப்பிடிப்பு இருக்கும் நாட்களிலும் உடற்பயிற்சிக்கான நேரத்தை செதுக்கி எடுத்துக் கொள்வேன். சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவதிலும் அக்கறை செலுத்துவேன். இடைவிடாத படப்பிடிப்பு இருக்கும்போதும் ஆற்றலோடு இயங்குவதற்கு நான் செய்யும் உடற்பயிற்சியே உதவுகிறது. ஒரு நடிகனுக்கு உடற்பயிற்சியே பிரதான நிபந்தனையாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி இல்லாமல் ஒரு நடிகன் இயங்க முடியாது’ என்கிற சோனு சூட் ஒரு வெஜிட்டேரியன் என்பதும் வீட்டில் தயாரித்த  எளிமையான உணவே அவருக்குப் பிடிக்கும் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

தன் உணவு விஷயத்தை பற்றி சொல்லும்போது, ‘என் வாழ்நாள் முழுவதும் சைவ உணவை சாப்பிடுபவனாகவே இருந்திருக்கிறேன். எதிர்காலத்திலும் இருப்பேன். அதேபோல வீட்டு உணவையே வலியுறுத்துவேன். சரிவிகித உணவே உங்களுடைய உடற்பயிற்சிக்கான நீண்ட நேர ஆற்றலைத்தரும்’ என்று அறிவுறுத்தும் சோனு, புகைப்பழக்கம், மது போன்ற எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத முழுமையான Teetotaller என்பதும் கவனிக்க வேண்டிய அம்சம்.

‘போதிய உறக்கம், மன அமைதியாக வைத்துக் கொள்ள குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது இவைதான் இளமைக்கான ஃபார்முலா. போலியான உடற்பயிற்சி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம். எப்போதும் வீட்டிற்குள்ளேயே டிஜிட்டல் உலகத்தில் இருக்காமல் கால்பந்து, கிரிக்கெட் மலையேற்றம் என வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவதை வற்புறுத்துவேன்’ என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

- இந்துமதி