கர்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் பாதுகாப்பானதா?!



மகளிர் மட்டும்

இயல்பிலேயே பெண்கள் பாதுகாப்பு உணர்வு மிக்கவர்கள். தாய்மை தன் உடல் சார்ந்தும், குழந்தையின் ஆரோக்கியம் சார்ந்தும் அவர்களின் எச்சரிக்கை உணர்வை அதிகரிக்கச் செய்கிறது.  ஏற்கெனவே பயன்படுத்திய மருந்தோ, உணவோ, குழந்தையின் நலன் கருதி அதை எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் ஒவ்வொரு தாய்க்கும் எழும்.

மருத்துவரை அணுகுவது மற்றும் ஸ்கேன் செய்வது என ஒவ்வொரு கட்டத்திலும் தாய்மை அடைந்த பெண்ணுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்ப்பது அவ்வளவு எளிதில்லை. இதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் கதிரியக்க நிபுணர் விஸ்வாந்த்.கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது பாதுகாப்பானதா?

‘‘பாதுகாப்பானதுதான்... அல்ட்ரா சவுண்ட் கருவுக்கு தீங்கு ஏற்படுத்தும் என்று சொல்லும் ஆய்வுகளும் ஆதாரங்களும் எதுவும் இல்லை. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கில் குழந்தையின் படத்தை நாம் பார்க்க ஒலி அலைகளைப் பயன்படுத்துகிறது. இதில் எந்த விதமான கதிர்வீச்சும் இல்லை.
கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் எத்தனை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் செய்ய வேண்டும்?

‘‘கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் குறைந்தபட்சம் 4 முறை ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் ஆரம்ப கால ஸ்கேன் 6 முதல் 8 வாரங்களில் எடுக்கப்பட வேண்டும். இந்த ஸ்கேன் முக்கியமாக 4 காரணங்களுக்காக எடுக்கப்படுகிறது.

கர்ப்பப் பையில் கரு உருவாகியுள்ளதா, கருப்பைக்கு வெளியில் உருவாகியுள்ளதா… அதாவது இடம் மாறி கருத்தரித்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக முதல் ஸ்கேன் செய்யப்படுகிறது. இதன் மூலம் கருப்பையில் உருவாகியுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியும்.
குழந்தைகளின் இதயத் துடிப்பை (நம்பகத் தன்மையை) கண்டறிய முடியும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சரியான பிரசவ தேதியை தீர்மானிக்க முடியும். நுச்சால் ஒளி ஊடுறுவல் ஸ்கேன் (என்டி) இது 11 முதல் 14 வாரத்தில் எடுக்கப்பட வேண்டும்.

கழுத்தின் முனைப்பகுதி தடிமன் (கருவின் கழுத்தின் பின் புறத்தில் மெல்லிய கருப்புக் கோடு இருக்கும்) மற்றும் நாசி எலும்பு வளர்ச்சி ஆகிய 2 முக்கியமான விஷயங்கள் குறித்துக் கண்டறிய இந்த ஸ்கேன் எடுக்கப்படுகிறது.இந்த இரண்டில் ஏதேனும் ஒரு பிரச்னை இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகளவில் குறைபாடுகள் இருக்கும்.

அடுத்து செய்ய வேண்டியது உடற்கூறியல் ஸ்கேன். இது இலக்கு அல்லது கரு முரண்பாடுகளைக் கண்டறியும் ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கேன் 18 முதல் 22 வாரங்களில் எடுக்கப்பட வேண்டும். பொதுவாக இந்த வாரங்களில் கருவின் உடல் பாகங்கள் நன்கு உருவாகின்றன. இந்த ஸ்கேன் கதிரியக்கவியலாளருக்கு குழந்தையின் குறைபாடுகளை சரி பார்க்க உதவுகிறது.

டிரைமெஸ்டர் ஸ்கேன்/வளர்ச்சி ஸ்கேன் என்பது 28 முதல் 34 வாரங்களில் எடுக்கப்படுகிறது.இந்த ஸ்கேன் கருவின் வளர்ச்சி/ நிலை மற்றும் அம்னோடிக் திரவ அளவை தீர்மானிக்கிறது. இதையொட்டி சிகிச்சை அளிக்கும் மருத்துவர் எப்போது குழந்தை பிறக்கும் என்று முடிவு எடுப்பதற்கு இது உதவுகிறது.

நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கூடுதலாக ஸ்கேன் செய்ய வேண்டுமா?
‘‘இவர்களுக்கு டாப்ளர் கரு கண்காணிப்பு ஸ்கேன் செய்ய வேண்டும். இதனைச் செய்வதன் மூலம் குழந்தைக்கு போதுமான ரத்தம் கிடைக்கிறதா? என்பதைத் தீர்மானிக்க நமக்கு உதவுகிறது. மற்றொன்று கரு எதிரொலி ஸ்கேன் ஆகும். இது இதயத்தின் கட்டமைப்புக் குறைபாடுகளைக் கண்டறிய உதவுகிறது.’’

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

‘‘இது ஆப்பரேட் செய்பவரைப் பொறுத்து மாறுபடும். ஸ்கேன் செய்யும் வகைக்கு ஏற்பவும் நேரம் பிடிக்கும். துவக்க நிலை ஸ்கேன் குறைந்த பட்சம் 10 முதல் 15 நிமிடம் ஆகும். என்டி ஸ்கேன் எடுக்க 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். மேலும் குழந்தை நல்ல நிலையில் இல்லாவிட்டால் அதிக நேரம் ஆக வாய்ப்புள்ளது. உடற்கூறியல் ஸ்கேன் செய்ய 20 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும்.

மேலும் இந்த ஸ்கேன் குழந்தைகளின் நிலையைப் பொறுத்தது ஆகும். குழந்தைகளின் வளர்ச்சி ஸ்கேன் எடுக்க 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும்.’’
கர்ப்பிணிப் பெண்களை ஸ்கேன் செய்வதற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

‘‘மருத்துவருடனான சந்திப்பு நேரங்களை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது காத்திருப்பு அறையில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள முடியும்.ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர் மட்டுமே உடன் வர வேண்டும். காத்திருப்பு அல்லது வரவேற்பு அறையில் 3 அடி இடைவெளி விட்டு அமர வேண்டும்.

அல்ட்ரா சவுண்ட் அறைக்குள் நுழையும்போதும் வெளியே வரும்போதும் முகக் கவசம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும். கைகளில் கண்டிப்பாக சானிட்டைசர் தடவ வேண்டும்.’’

- யாழ் ஸ்ரீதேவி