ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மீதான தடை நீக்கம்!



Follow Up

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில், மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ரோ குளோரோகுயின் மாத்திரை நல்ல பலனை அளித்ததாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியானது. இதே கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் தெரிவித்தார்.

இதற்கிடையே மலேரியா தடுப்பு மாத்திரை கொரோனா சிகிச்சையில் பலனளிக்கவில்லை. மேலும் சில ஆய்வுகளிலும் மலேரியா தடுப்பு மாத்திரை பலன் அளிக்கவில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். The Lancet மருத்துவ ஆய்வுகள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை பாதுகாப்பானது அல்ல.

இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது’ என்று தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை பயன்படுத்துவதைத் தற்காலிகமாக தடை செய்வதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

உலக சுகாதார மையத்தின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கடும் சர்ச்சையை எழுப்பியது. ‘ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால் கொரோனா நோயாளிகள் குணமாவதாக மருத்துவரீதியாக எந்த நிரூபணமும் இல்லை என்றாலும் கூட, அம்மருந்து நேர்மறையான தீர்வையே தந்து வருகிறது’ என பல தரப்பு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர். இதனால் லான் செட் ஆய்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தனது ஆய்வறிக்கையை திரும்பப் பெறுவதாக அந்த இதழின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதில், ஆய்வு நடத்திய மருத்துவர்கள் அவர்களுக்கு கிடைத்த முதற்கட்ட புள்ளி விவரங்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்த முடியவில்லை’ என்றும் கூறியுள்ளார்கள். இதன் அடிப்படையில் ‘ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மலேரியா மருந்தை கொரோனாவுக்கு எதிராக மருத்துவ பரிசோதனைகள் செய்ய உலக சுகாதார அமைப்பு மீண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

- இந்துமதி