வைராலஜி துறையில் கவனம் செலுத்த வேண்டும்!



சிறப்பு கட்டுரை

‘மனித இனம் தோன்றியது முதலே வைரஸ்களும், அதனால் ஏற்படும் பிரச்னைகளும் இருந்து வருகின்றன. இது உலகளவிலான பிரச்னையாக இருந்து வருகிறது. புதுப்புது வைரஸ்கள் பற்றி அறிவதற்கும், அதனால் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் அத்துறை சார்ந்த ஆராய்ச்சிகளை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்’ என்கிறார் பேராசிரியரும் மருத்துவருமான முத்துச் செல்லக்குமார்.

‘‘வைரஸ்களால் ஓரிடத்தில் அல்லது ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்னைகளை சரியான முறையில் கட்டுப்படுத்தாவிட்டால், அப்பிரச்னை அண்டை நாடுகளுக்குப் பரவுவதோடு, உலகளவில் பரவி பெருமளவு உயிர்களை பலி வாங்கும் நிலைக்கு சென்றுவிடும். இதற்கு கொரோனா சிறந்த எடுத்துக்காட்டாகிவிட்டது.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் ஒருபுறம்... நமக்கு ஏதேனும் நடக்குமோ என்று பதைபதைத்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?!

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லிக்கொண்டு, தான் மட்டுமே உலகில் மாறி  விட்டதாக எண்ணி மனிதன் கனவில் மிதந்து கொண்டிருக்கிறான். அவன் தன்  கண்ணுக்கு முன் இருப்பதையே, நடப்பதையே பார்க்க முடியவில்லை. பிறகு  கண்ணுக்கே தெரியாத நுண்ணிய வைரஸை எப்படி பார்க்கப் போகிறான்?!

உலக வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், தற்போது உலக நாடுகள் பலவற்றில்  இன்று மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த  Covid-19 வைரஸ் போலவே பல வைரஸ்கள் மனித குலத்தை கொடுங்கோலனாக இருந்து  ஆட்டிப் படைத்திருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இதுபோன்ற உலகளாவிய தொற்று  பாதிப்பை Pandemic என்று சொல்கிறோம்.

இனிவரும் காலங்களில் ஏற்படவிருக்கும்  வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு, நாம் கடந்த கால படிப்பினைகளை எண்ணிப்  பார்க்க வேண்டும். ரஷ்ய இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல், ஸ்பானிஷ் ஃப்ளூ  காய்ச்சல், சீன  இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல், ஹாங்காங் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல், எய்ட்ஸ்,  எபோலா என்று இதுவரை உலக வரலாற்றில் பல வைரஸ்கள் மனித இனத்தைக் கடும்  சவால்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் ஆளாக்கியிருக்கிறது.

வந்தது வைரஸ் பாதிப்பு என்று புரிந்துகொள்ளவே நாளாகிறது. அடுத்து எந்த வகை  வைரஸ் என்று தெரிந்து கொள்ளவே காலதாமதம் ஏற்படுகிறது. வந்தது புதிய வைரஸ்  என உறுதிப்படுத்த இன்னும் நாட்களை நரபலி கொடுக்க வேண்டியுள்ளது. அடுத்து  புதிய வைரஸ் மூலக்கூறுகளை கண்டுபிடிக்க கஷ்டப்பட வேண்டியுள்ளது.

பிறகு  அதற்கான பரிசோதனை முறையை உருவாக்க சிரமப்பட வேண்டியுள்ளது. பின்பு இந்த  புதிய வைரஸ் எப்படி உருவானது? எங்கிருந்து உருவானது? எப்படி மனிதர்களுக்கு  பரவியது என்பதை தலையை பிய்த்துக்கொண்டு ஆராய வேண்டியுள்ளது. இப்படி ஒவ்வொரு  கட்டமாக அணுகும் போதே வைரஸ் கட்டம் போட்டு மனிதர்களை கணிசமான அளவு காலி  செய்துவிடுகிறது!

இப்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் 2003-ம் ஆண்டில் சார்ஸ் என்னும்  புதிய வைரஸாக உருவெடுத்து 8000 பேரை பாதித்து, 774 பேர் உயிரிழக்கக்  காரணமாக இருந்தது. இதன் தொடக்கமும் சீனாதான். சீனாவிலிருந்து சுமார் 26  நாடுகளுக்கு பரவியது.

அதேபோல் மெர்ஸ் கொரோனா வைரஸ் (MERS-CoV) சவூதி  அரேபியாவில் ஐக்கிய அரபு நாடுகளில் 2012-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் புதிய  வடிவம் எடுத்தது. இதேபோல் டெங்கு, சிக்கன்குனியா, ஜிகா, மஞ்சள் காய்ச்சல்,  பல்வேறு மூளைக் காய்ச்சல் என்று கொசுக்களும் பல வைரஸ்களைப் பரப்பிக்  கொண்டிருக்கின்றன.இன்னும் இனம், குணம் கண்டறிய முடியாத வைரஸ்களே 10 கோடி எண்ணிக்கையில்  இருக்கின்றன.

இவற்றில் 3,20,000-க்கும் மேற்பட்ட பல்வேறு வைரஸ்கள்  மனிதர்களையும் பாலூட்டி இனங்களையும் தாக்கி நோயை ஏற்படுத்தும் வாய்ப்புகள்  உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதைத் தடுப்பதற்கு வைரஸ்களைப் பற்றி படிக்கும் வைராலஜி துறை சார்ந்த படிப்புகள்,  வைராலஜிஸ்ட்டுகள் மற்றும் அதிநவீன வைரஸ் ஆய்வகங்கள் ஆகியவற்றின்  எண்ணிக்கையை தற்போது அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

வைராலஜி(Virology) துறை சார்ந்த ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனவே, இத்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நபர்களான வைராலஜிஸ்ட்டுகளின்(Virologist) தேவையும் மிக அவசியம். இதை உலகின் ஒவ்வொரு நாடும் உணர வேண்டியதும் காலத்தின் கட்டாயம்!’’

- க.கதிரவன்