ஆட்டிப்படைக்கும் NOMOPHOBIA தப்பிக்கும் ஸ்மார்ட் வழிகள்



விழிப்புணர்வு

‘போபியா’ பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஏதாவது ஒரு உயிரினம், இடம், பொருள் அல்லது ஏதாவதொரு சூழ்நிலையின் காரணமாக ஒரு நபருக்கு ஏற்படுகிற பயத்திற்கு Phobia என்று பெயர் வைத்திருக்கிறது உளவியல் உலகம். இந்த போபியாவில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. தனியே இருக்க பயம், தண்ணீரை பார்த்தால் பயம், உயரம் என்றால் பயம், விலங்குகளைக் கண்டால் பயம் என்று இதில் பலவிதம் உண்டு.

ஸ்மார்ட்போன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் காரணமாக, இந்த போபியா பட்டியலில் Nomophobia என்பதும் புதிதாக இணைந்துள்ளது. அது என்ன நோமோபோபியா? யாருக்கு வரும்? எப்படி தப்பிப்பது உள்பட பல வழிகளைச் சொல்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி...

நோமோபோபியா என்பது என்ன?!
‘‘கரப்பான் பூச்சி, எலி, நாய், பாம்பு போன்ற பிற விலங்குகளைப் பார்த்தாலே பயந்து நடுங்குவது அல்லது உயரமான இடத்திலிருந்து கீழே பார்ப்பதற்கு, பெரிய ராட்டினத்தில் செல்வதற்கு, இருட்டில் தனியாக நடந்து செல்வதற்கு பயப்படுவது என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயம் இருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதைப் போன்றதொரு அச்சக் கோளாறுதான் இந்த நோமோபோபியா.

தொலைபேசி அழைப்புகளை எடுப்பது, எடுத்து பதிலளிப்பது சார்ந்த பயத்திற்கு Telephonophobia என்று பெயர். பொதுவாக தொழில்நுட்பங்கள் மீதான பயத்திற்கு Technophobia என்று பெயர். இதுவே தொழில்நுட்பங்கள் சார்ந்த எல்லா பயத்திற்கும் கொள்ளுத்தாத்தா என்று சொல்லலாம். இதில் குறிப்பாக மொபைல்போன் இல்லாததால் ஏற்படும் பயமானது நோமோபோபியா என்று அழைக்கப்படுகிறது.

No mobile Phobia என்பதன் சுருக்கமே Nomophobia என்று சொல்லப்படுகிறது. நமது மொபைல் போன் நம்மிடம் இல்லை என்றால் ஏற்படும் ஒருவித அச்ச உணர்வுகளின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த கோளாறுகளே நோமோபோபியா என்று சொல்லப்படுகிறது. இந்த வகை பயமானது உங்கள் மொபைல் போன் உங்களிடம் இல்லாத நேரத்தில் ஒருவித தாழ்வு மனப்பான்மையை, பீதியை அல்லது கவலை உணர்வுகளை உருவாக்கும். செல்போன் பேட்டரியின் சார்ஜ் காலி ஆவது, மொபைல் தொலைந்து போவது போன்ற நேரங்களில் ஏற்படுகிற உணர்வுகளும் இதில் அடங்கும்.

நோமோபோபியா அறிகுறிகள்...

‘‘காலையில் எழுந்தவுடன் பல்கூட துலக்காமல் செல்போனை நோண்டுவது, வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ், ஈமெயில், மிஸ்டு கால் என்று அதை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பது, தூங்கச் செல்வதற்கு முன்பு வரை செல்போனை பிரியாமல் இருப்பது, சாப்பிடும்போதும் பிறரிடம் பேசும்போதும்கூட அதை பயன்படுத்துவது, சுற்றியிருக்கும் யாரையும் கண்டுகொள்ளாமல் எங்கு சென்றாலும் செல்போனிலேயே நேரத்தைக் கழிப்பது, குளியலறை மற்றும் கழிப்பறைக்குள்கூட செல்போனை பயன்படுத்துவது, எப்பொழுதும் போனை சுவிட்ச்ஆப் செய்ய முடியாமை, எப்பொழுதுமே அதன் பேட்டரியை முழுமையாக வைத்திருத்தல், செல்போன் இல்லாதபோதும், அதில் நெட்வொர்க் அல்லது சார்ஜ் இல்லாதபோதும் உயிரே போனது போல உணர்வதும் இந்த நோமோபோபியாவின் அறிகுறிகளாக உள்ளது.’’

ஏற்படும் பாதிப்புகள்...

‘‘நோமோபோபியாவின் அறிகுறிகளால் தேவையற்ற பயம், ரத்த அழுத்தம் அதிகரித்தல், செய்யும் செயல்களில் கவனக்குறைவு, செல்போன் வெளிச்சத்தால் கண்ணிற்கு ஏற்படும் பாதிப்பு, கண்களைச் சுற்றி கருவளையம், தூக்கமின்மை, மெலடோனின் சுரப்பில் பிரச்னை, மனிதர்களிடமிருந்து விலகுவது போன்ற பிரச்னைகள் உண்டாகிறது.

தற்போது பலபேர் நேரில் சென்று பார்த்து பேசுவதற்கு வழியிருந்தாலும்கூட நேரமின்மை போன்ற காரணங்களைச் சொல்லி வாழ்த்து தெரிவிப்பது, நன்றி தெரிவிப்பது, சண்டையிட்டு திட்டுவது மட்டுமின்றி நட்பு போன்ற பிற மனித உறவுகளையும் செல்போன் வழியாகவே வளர்க்க விரும்பும் சூழல் உள்ளது. இது மனிதத் தொடர்பியல் மற்றும் மனித உறவுகளின் முக்கியத்துவம் குறைவதற்கு வழிவகுக்கிறது.’’

நோமோபோபியா பற்றி ஆய்வுகள் சொல்வதென்ன?

‘‘நோமோபோபியா பிரச்னையின் அறிகுறிகள் அதிகமான நபர்களிடம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் 1000 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 66 சதவிகித நபர்களிடம் இந்தப் பிரச்னை இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட இதே ஆய்வில் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட நபர்களின் சதவிகிதம் 53 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் ஆய்வின்போது ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதன் பிறகு மேற்கொண்ட ஆய்வில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 18 முதல் 24 வயது வரை உள்ளவர்கள்தான் மொபைல் போனுக்கு அதிகளவு அடிமையானவர்களாக உள்ளனர். இந்த வயதினரில் 77 சதவிகிதம் பேர் சில நிமிடம்கூட போனை பிரிந்திருக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதேபோல 25 முதல் 34 வயது வரை உள்ளவர்களில் 68 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

செல்போன் என்பது ஒரு மாடர்ன் செய்தித்தாள் என்பதால் அதை பாத்ரூமிலும் பயன்படுத்துகிறோம் என்று 75 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதேபோல் இவர்கள் ஒரு நாளைக்கு 34 முறை தங்கள் போனை எடுத்து சும்மாவே பார்த்துவிட்டு வைக்கின்றனர் என்கிறது இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. இது இங்கிலாந்து இளைஞர்களின் நிலை என்றால் இன்றைய நவீன இந்திய இளைஞர்களின் நிலை என்னவென்று மேற்சொன்ன அறிகுறிகளின் அடிப்படையில் நாமே புரிந்து கொள்ளலாம்.’’

நோமோபோபியா யாருக்கு ஏற்படும்?

‘‘தற்போது செல்போன் என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்தவித பாரபட்சமும் இன்றி பயன்படுத்தும் ஒரு பொருளாக மாறிவிட்டது. மக்களின் அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்கள் மட்டுமின்றி அனைத்து விதமான தேவைகளுக்கும் செல்போனை சார்ந்திருக்கும் சூழல் தற்போது அதிகரித்து வருகிறது. செல்போன் என்பது நமது ஆறாவது விரல் என்று சொல்லும் அளவிற்கு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

தற்போதைய நவீனயுக ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் அதில் பயன்படுத்துகிற பல்வேறு வகையான தொழில்நுட்ப வாசிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக அடிமையாகிப் போயுள்ள பலரை நாம் பார்த்திருப்போம். இப்படி செல்போனின் தொழில்நுட்ப வசதிகளுக்கு அடிமையாகிய சூழலில், அது இல்லாமல் ஒரு நாள் அல்ல ஒரு சில மணித்துளிகள்கூட இருக்க முடியாது, அது இல்லை என்றால் என் வாழ்க்கையே இருண்டுவிடும் என்ற எண்ணமுடைய சூழலில் செல்போனுக்கு அடிமையாகிப் போன நபர்கள் பெரும்பாலும் இந்த நோமோபோபியா பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.’’

செல்போனுக்கு அடிமையாவதைத் தடுக்க...

‘‘செல்போனுக்கு அடிமையாவதைத் தடுத்து, நோமோபோபியா ஏற்படாமல் இருக்க பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றலாம். தினசரி செல்போன் பயன்படுத்தும் நேரத்தை படிப்படியாக குறைப்பது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிறிது நேரத்தை செலவழிப்பது, தினசரி அலாரம் வைப்பதற்கு செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்து அலாரக் கடிகாரங்களைப் பயன்படுத்துவது போன்ற பிற அளவுக்கு அதிகமான செல்போன் பயன்பாடுகளையும் குறைக்க வேண்டும்.

செல்போனை சரியான முறையில் அளவோடு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிப்பதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளைக் குறைக்கலாம். செல்போன் பயன்படுத்தும் கால அளவினை சிறிது சிறிதாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குளியலறை, கழிவறை, படுக்கையறை, சாப்பிடும் அறை, பூஜையறை போன்ற பகுதிகளில் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, அதை கட்டாயம் கடைபிடிக்கும்படி பழக்கப்படுத்த வேண்டும்.’’

ஸ்மார்ட் போன்களை ஸ்மார்ட்டாகக் கையாள வழிகள் என்ன?

‘‘நோமோபோபியாவுக்கான காரணமே இந்த ஸ்மார்ட்போன்கள்தான். எனவே ஆண்ட்ராய்டு போன்ற தொழில்நுட்பம் மற்றும் இணைய வசதியுள்ள அதிநவீன செல்போன்களின் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இத்தகைய போன்களைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைத்து, இணையம் சார்ந்த வசதிகளற்ற சாதாரண போன்களைப் (Basic model phone) பயன்படுத்தும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து வைப்பதை பழக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் நோமோபோபியாவால் ஏற்படுகிற தூக்கப் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வண்ணம் அதில் நினைவூட்டல்(Reminder) மற்றும் எச்சரிக்கை(Warning) சார்ந்த அமைப்புகளை செயல்பாட்டில் வைக்க வேண்டும். செல்போனில் ஈமெயில், வாட்ஸ்ஆப், மெசேஜ் போன்ற எல்லா பயன்பாடுகளுக்கும் Beep sound, Alert tone போன்ற ஏதாவதொரு அறிவிப்பு செய்கிற ஒலியினை (Notification sound) நாம் வைத்திருப்போம். அதிக முக்கியத்துவமற்ற, பொழுதுபோக்கு சார்ந்த எல்லாவிதமான பயன்பாடுகளுக்கும் அறிவிப்பு ஒலி வைத்திருப்பதைத் தவிர்த்து, மிகவும் தேவையான பயன்பாட்டிற்கு மட்டும் அதை வைத்துக் கொள்ளலாம். இதனால் அதிக முறை செல்போனை எடுத்து எடுத்து பார்ப்பதைத் தவிர்க்கலாம்.

சிகரெட், மது மற்றும் பிற போதைப் பொருள் பழக்கங்களுக்கு அடிமையாவதைப் போன்றே, செல்போன் போன்ற பிற தொழில்நுட்பங்களுக்கும் சிலர் அடிமையாகிவிடுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை அணுகுவதே மிகக் குறைவாக இருக்கிறது. எனவே, மேற்சொன்ன நோமோபோபியா அறிகுறிகளோடு நடத்தை மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால், மனநல மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தடுக்கலாம்.’’

பாதிப்பு விகிதம் மாணவர்களிடம் அதிகம்

செல்போன் பயன்பாட்டால் கண் பார்வை பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக செல்போன் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்டது. குறிப்பாக வளரிளம் பருவத்தினர் அதிகளவில் செல்போன்களை உபயோகிக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை ஏறத்தாழ 95 சதவீத இளைஞர்கள் செல்போன் மற்றும் கணினியில் அதிக நேரம் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் எதிரொலியாக கண் நலன் மற்றும் மன நல பாதிப்புகளுக்கு ஆளாவதாகவும் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாவதாகத் தெரிகிறது. இதை உறுதிபடுத்தும்விதமாக அண்மைக்காலமாக பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்திருப்பதும் மருத்துவத் தரவுகளில் தெரிய வந்துள்ளது.
டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பதால் கண் அழுத்த பாதிப்புகள் ஏற்படும்.

தொடர்ந்து கண்களில் எரிச்சல் ஏற்படும். மங்கலான பார்வை, கவனக் குறைபாடு உள்ளிட்டவற்றுக்கும் இது வித்திடும். இத்தோடு நிற்காமல் தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி மற்றும் தூக்கப் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். எனவே இதுகுறித்து உரிய விழிப்புணர்வு அவசியம்.

- க.கதிரவன், அ.வின்சென்ட்