திருப்பதிக்கு முதல் இடம்... டெல்லிக்கு கடைசி இடம்!



தகவல்

நாடு முழுவதும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 110 இடங்களில் காற்று கண்காணிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு காற்றின் தரத்தினை பொறுத்து 6 வகைகளாக பிரிக்கப்பட்டு மாசின் அளவு அறிவிக்கப்படுகிறது. அவை நல்ல நிலையிலான காற்று, ஏற்றுக்கொள்ளும் வகை, இயல்பான நிலை, மோசம், மிகவும் மோசமான நிலை, கடுமையான நிலை என்று வகைப்படுத்தப்படுகிறது.

நல்ல நிலையிலான காற்று குறைவான பாதிப்புகளையும்; ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ள காற்றினால் சுவாசம் சம்பந்தமான பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு லேசான பாதிப்பும் ஏற்படக்கூடும். இயல்பான நிலையில் உள்ள காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல், ஆஸ்துமா, இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். மோசமான காற்றை நீண்ட நாட்களுக்கு சுவாசிக்கும்போது ஏராளமானோருக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்னை ஏற்படக்கூடும்.

அதன்படி நல்ல நிலையிலான காற்று திருப்பதியில் உள்ளது. திருப்பதியில் காற்றின் தரம் 50 AQI என்று தெரிய வந்துள்ளது. (Air Quality Index என்று நிர்ணயிக்கப்படுவதன் சுருக்கமே AQI என்று குறிப்பிடப்படுகிறது.) மோசமான நிலையிலான காற்று டெல்லியில் 225 AQI அளவில் உள்ளது. இயல்பான நிலையிலான காற்று ஆக்ரா - 138AQI, அஜ்மீர் - 106AQI உள்ளிட்ட 48 நகரங்களில் உள்ளது.

இதேபோல் திருப்திகரமான நிலையில் 36 நகரங்கள் இடம்பெறுகின்றன. டெல்லியைப் போல் கிரேட்டர் நொய்டா உள்பட 24 நகரங்களில்  234AQI என மோசமான அளவில் காற்றின் தரம் உள்ளது.

தமிழகத்தில் சென்னையில் 4 இடங்களில் உள்ள காற்று கண்காணிப்பு மையங்களிலும், கோவையில் ஒரு இடத்திலும் காற்றின் தரம் கண்காணிப்பட்டு வருகிறது. இதில் சென்னையில் காற்றின் தரம் 56AQI என்ற அளவிலும், கோவையில் 67AQI என்ற அளவிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
சூழ்நிலையில் உள்ளது.

- இதயா