துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி!மகிழ்ச்சி

சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க 6 மாதத்திற்கு ஒரு தடுப்பூசி மற்றும் மாத்திரை வழங்கப்படவுள்ளது.

சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் 19,576 ஊழியர்கள் களப்பணியில் ஈடுபடுத்தபட்டு வருகின்றனர். இவர்கள் கொசு மருந்து தெளித்தல், கொசு வளராமல் தடுக்க தேவையற்ற பொருட்களை அழித்தல், நீர் நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த பணியின்போது இவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இந்த பணியில் ஏற்படும் தொழிலாளர்கள் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் விதமாக இந்த ஊழியர்களுக்கு தடுப்பூசி மற்றும் மாத்திரைகள் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி Td Vaccine என்ற தடுப்பூசியும், டாக்சிசைக்ளின் என்ற மாத்திரையும் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசியானது 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்படும். இதேபோன்று டாக்சிசைக்ளின் என்ற நோய் தடுப்பு மாத்திரைகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை 5 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு மாத்திரைகள் வீதம் வழங்கப்படுகிறது.

இதற்காக 20 ஆயிரம் தடுப்பூசிகள் மற்றும் 20 ஆயிரம் மாத்திரைகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்திடம் இருந்து வாங்கப்படவுள்ளது. இந்த பணியை சுகாதாரத்துறையில் மண்டல நல அலுவலர் மற்றும் மண்டல மருத்துவ அலுவலர் கண்காணித்து முறையான பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்றும் அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துப்புரவுப் பணியாளர்களின் நலன் காக்கும் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று. இது எப்போதும் தொடர வேண்டும் என்பதுடன் தமிழகம் முழுவதும் இத்திட்டம் பரவலாக்கப்படவும் வேண்டும்!

- ஜி.ஸ்ரீவித்யா