குடற்புழு நீக்கம் எல்லோருக்கும் அவசியம்!விழிப்புணர்வு

மனித இனத்தின் ஆரோக்கியத்தில், செரிமான மண்டலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால், நாம் உண்ணும் உணவைச் செரிக்க வைத்து, அனைத்து உறுப்புகளுக்கும் தேவையானதாக மாற்றுவது இதன் வேலை. இத்தகைய தனித்தன்மை வாய்ந்த ஜீரண மண்டலத்தைப் பாதிக்கும்
காரணிகளில் குடற்புழுவும் ஒன்று.

பதினெட்டு வயது நிரம்பியவர்களுக்கு, குடற்புழு நீக்கல் என்பது அத்தியாவசியம் என்கிறது மருத்துவ உலகம். இந்த மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமா? அதற்கான காரணங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளும்முன், குடற்புழு பற்றி அறிமுகமாக தெரிந்துகொள்வோம்.

உடல் நலத்தைப் பாதிக்கிற காரணிகளில் ஒன்றாக உள்ள குடற்புழு, நாடாப்புழு, உருளைப்புழு அல்லது நாக்குப்பூச்சி மற்றும் கொக்கிப்புழு என அடையாளம் காணப்படுகிறது. இவை வயிற்றின் வெளிப்புற பகுதி பாதிப்படைவதற்கு முக்கிய காரணியாக உள்ளன. பொதுவாக, இவ்வகை புழுக்கள் நாம் சாப்பிடுகிற உணவுப்பண்டங்கள் மூலமாக, வயிற்றினுள் சென்று, உடலில் காணப்படுகிற அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களை மெல்லமெல்ல உறிஞ்சத் தொடங்குகின்றன.

மேலும் வயிற்றுப்பகுதியில் இருந்து நுரையீரல், மூளை மற்றும் கண்களுக்குப் பரவுகின்றன. வசிப்பிடம் அல்லது சுற்றுச்சூழல் என்ற கோணத்தில் பார்க்கும்போது, கழிவு நீரை அகற்ற போதுமான வசதி இன்மை, நீர் வளப் பராமரிப்பில் உள்ள பற்றாக்குறை மற்றும் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் போன்ற காரணிகள் வாயிலாகவும் குடற்புழுக்கள் உடலினுள் செல்கின்றன. ஒட்டுண்ணிகளான குடற்புழுக்கள், நாய் போன்ற செல்லப்பிராணிகள் நக்குதல், நன்கு சமைக்கப்படாத இறைச்சியை உண்ணுதல், காலணிகள் அணியாமல் நடத்தல், பராமரிக்கப்படாத நீச்சல் குளத்தை உபயோகப்படுத்தல், எதிர்பாராதவிதமாக, உணவு/தண்ணீர்/மண்ணில் உள்ள லார்வாவை விழுங்கல் மற்றும் சாப்பிடும் முன்னும், பின்னும் கைகளைச் சுத்தம் செய்யாமை போன்றவற்றாலும் உடலுக்குள் ஊடுருவுகின்றன.      
       
ஒருவர் குடற்புழுவால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார் என்பதைக் காய்ச்சல், வயிற்றுவலி, மலக்குடலில் அரிப்பு, உடல் எடை குறைதல், அதிக களைப்பு, ரத்த சோகை, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய அடையாளங்கள் பருவ வயதை எட்டியவர்களின் உற்பத்திதிறனை அழிப்பதோடு, ஊட்டச்சத்து அதிகரிப்பதையும் தடுக்கின்றன. மேலும் இருமல் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன. இவை அனைத்தும் நமது உடலில் குடற்புழுக்கள் எந்த இடத்தில் காணப்படுகின்றன என்பதைப் பொறுத்தே நடைபெறுகின்றன.

தற்போது குழந்தைகளின் உடல்நலன் என்ற அடிப்படையில் குடற்புழு நீக்கம் உலகளவில் கவனத்தில் கொள்ளப்படுகிறது. அதேவேளையில், முதியவர்கள் விஷயத்தில், இப்பிரச்னை பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை. கண்ட இடங்களில் சாப்பிடும் பழக்கம், உடல்நலம் தொடர்புடைய பல விஷயங்களில், நம்மை அக்கறை கொள்ள வைக்கிறது.

அவற்றில் ஒன்றுதான் இந்த குடற்புழு நீக்கம். செரிமான மண்டலம் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், விஸ்வரூபம் எடுத்து வரும் இப்பிரச்னை, இன்றுவரை பெரிதாக கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். உரிய மருத்துவ ஆலோசனை பெற்று எல்லோரும் பின்பற்ற வேண்டியது இந்த குடல் புழு நீக்கம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுவது அவசியமானதும் கூட!

- விஜயகுமார்