மீண்டும் ஃபார்முக்கு வந்த சானியா!



மகளிர் மட்டும்

பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் பழைய உடலமைப்பைப் பெறுவது பலருக்கும் போராட்டமாகவே இருக்கிறது. சானியா மிர்சாவும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால், விடாமுயற்சியோடு 5 மாதங்களில் 22 கிலோ எடையைக் குறைத்து புதிய அம்மாக்களுக்கு நம்பிக்கையை மெசேஜாக சொல்லியிருக்கிறார். தன்னுடைய பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சானியா, 89 கிலோவிலிருந்து 63 கிலோவிற்கு எப்படி மாறினார் என்பதையும் விவரித்துள்ளார்.

‘என்னால் முடிந்தது என்றால், யாராலும் முடியும்’ என்று பின்குறிப்போடு தன் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது, அவரது உடலமைப்பைப்பற்றி முன்னர் விமர்சித்தவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துள்ளது.‘எனக்கு எடையோடு போராடுவது என்பது எளிதான விஷயமாக இருக்கவில்லை. எல்லா பெண்களுக்குமே பிரசவத்திற்குப் பிறகு, நம்மையும் கவனித்துக் கொண்டு, பிறந்த குழந்தையையும் கவனித்துக் கொள்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதிலும், விளையாட்டுத்துறையில இருக்கும் என் போன்றவர்களுக்கு கூடுதல் நெருக்கடி.

கர்ப்பமாக இருந்தபோதும் குழந்தை பெற்ற பிறகும், எப்போதும் என்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டதே, இந்த குறிக்கோளை அடைய உதவியது. விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை ஜிம்முக்குச் செல்வது கட்டாயமான ஒன்றாக இருந்தாலும், மகப்பேறுக்கு உதவக்கூடிய யோகாசனங்களையும், சில எளிய உடற்பயிற்சிகளையும் கர்ப்ப காலத்திலேயே செய்யத் தொடங்கினேன். ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த 15 நாட்களிலேயே முழு உடற்பயிற்சிகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.

அதற்காக சானியா சாப்பாட்டை வெறுக்கிறவரெல்லாம் இல்லை. நன்றாக சாப்பிடக் கூடியவர்தான். தனக்குப் பிடித்த உணவுகளை எப்போதும் குறைத்துக் கொள்ள மாட்டார். ஆனால், தன் குழந்தையின் பிறப்பு ஆரோக்கியமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பியவர், சுவைக்கு அடிமையாகாமல் கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்திற்குப் பிறகும் சரி தனக்கும், தன் குழந்தைக்கும் ஆரோக்கியம் தரும் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதில் திடமான கொள்கையோடு இருந்தார் என்கிறார்கள் அவரது எடை இழப்பு பற்றி குறிப்பிடும் மருத்துவர்கள்.  

‘குழந்தை பெற்றதனாலேயே இனிமேல் நமக்கு எல்லாம் முடிந்துவிட்டது என்ற எண்ணம் புதுத் தாய்மார்களுக்கு வரக்கூடாது. முன்பைவிட இன்னும் ஃபிட்டாக இருக்க முடியும், ஒரு தாயாக ஒரு புது வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது என்ற எண்ணம் எல்லா பெண்களுக்கும் வரவேண்டும்’ என்பதே தன்னுடைய பதிவிற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார் சானியா. கர்ப்பமானாலே ஓய்வும் பிடித்தமான உணவுகளும் என்ற எண்ணத்தில் சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு, சானியாவின் கர்ப்பகால மற்றும் பிரசவத்திற்குப்பின்னான மாற்றம் நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்!

- இந்துமதி