கலப்படத்தைக் கண்டுபிடிக்கலாம்!
நிகழ்வு
நல்ல உணவுதான் தலைசிறந்த மருந்து. அத்தகைய உணவைத் தரமானதாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. உணவுப்பொருட்களில் ஏற்படும் கலப்படமானது நம் பொருளாதாரத்தை மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே, கலப்பட உணவுகளைக் கண்டறிவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு நுகர்வோராகிய நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.
 தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சமீபத்தில் இதற்கென விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில், உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி? தரமான உணவு பொருட்களை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பச்சைப் பட்டாணியை தண்ணீரில் ஊற வைக்கும்போது நீரின் நிறம் பச்சையாக மாறினால் கலப்படம் உள்ளது.
போலி டீத்தூளை நீரில் போடும்போது நீரின் நிறம் மாறினால் அதில் கலப்படம் உள்ளது. டிஸ்யூ பேப்பரில் டீத்தூளுடன் நீர் சேர்க்கும்போது, தாளின் நிறம் மஞ்சளாக மாறினால் கலப்படம் உள்ளது.
வெல்லத்தில் சல்பர் டை ஆக்ஸைடு சேர்ப்பதன் மூலம் கலப்படம் நடக்க வாய்ப்பு உள்ளது. இது வெல்லத்தின் மீது வெள்ளை நிறத்தில் பரவி புதிது போல தோற்றத்தை தரும். எனவே, அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள வெல்லத்தையே வாங்க வேண்டும்.
நீரில் தேனை ஊற்றும்போது, தேன் நீரில் கலந்தால் அதில் சர்க்கரை பாகு சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். நல்ல தேன் நீரில் கரையாது வீழ்படிவாக கீழே தங்கிவிடும். செர்ரி பழம் என்ற பெயரில் நிறமூட்டிகள் சேர்த்து கலாக்காயை விற்பனை செய்கிறார்கள். நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டும்.
நெய்யிலும் கலப்படம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நெய்யுடன் டிங்சர் அயோடின் சேர்க்கும்போது அடர் கருப்பு நிறத்தில் மாறினால் வனஸ்பதி போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளதை அறியலாம்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘உணவு பொருட்கள் விஷயத்தில் விழிப்புணர்வு அவசியம் தேவை. கலப்படம் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதால் உடல் நலக்கோளாறு ஏற்படுவதுடன் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் நிகழ்கிறது. பாக்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருட்களின் தரம், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி போன்றவை குறித்த விவரங்களை சரிபார்த்த பின்பே வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
- ஜி.ஸ்ரீவித்யா
|