முகமூடி அணிந்த டாக்டரைப் பார்த்தால் வரும் ரத்தக்கொதிப்பு...



தேவை அதிக கவனம்

மூன்று வெவ்வேறு நேரங்களில் பரிசோதித்த பிறகே ரத்தக்கொதிப்பு பற்றி முடிவுக்கு வர வேண்டும்.

ரத்த அழுத்தம் என்பது...
ஆச்சரியம் ஆனால் உண்மை! நம் உடலில் உள்ள அனைத்து ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் 60 ஆயிரம் கிலோமீட்டர். இதயமும் ரத்தக் குழாய்களும் துல்லியமாக ஒருங்கிணைந்து வேலை செய்தால்தான் தலை முதல் கால் வரை உள்ள எல்லா அணுக்களுக்கும், உறுப்புகளுக்கும் பிராணவாயு மற்றும் ஊட்டச்சத்து சென்றடைய முடியும்.

ரத்தக் குழாய்களின் உள்பாகத்தில் ரத்த ஓட்டத்தால் ஏற்படும் அழுத்தத்தைதான் ரத்த அழுத்தம் என்கிறோம். ரத்த அழுத்தம் 120/80mmHg என்ற அளவிற்கு உள்ளிருந்தால் நல்லது. அதை நார்மல் (Normal BP) என்கிறோம். 130/80mmHg- க்கு மேல் ரத்த அழுத்தம் இருந்தால் அதை ரத்தக்கொதிப்பு என்று அழைக்கிறோம். முக்கியமாக ரத்தக்கொதிப்பு இருக்கிறதா என்று அறிந்துகொள்ள ஒரு BP கருவியைப் பயன்படுத்துகிறோம்.

இந்த BP கருவி மூலம்தான் நம் ரத்த அழுத்தம் சீராக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா என்று தெரிந்துகொள்ள முடியுமே தவிர தலைசுத்தல், தலைவலி போன்ற அறிகுறிகளால் அல்ல. ஏனென்றால் ரத்தக்கொதிப்பு என்பது எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாக உயிரை எடுக்கக்கூடிய ஒரு நோய்.

நாம் அனைவரும் 20 வயதுக்கு மேல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் BP-யை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்படி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் நம்மைத் தாக்காமல் தடுத்துக் கொள்ளலாம்.

முகமூடி அணிந்த ரத்தக்கொதிப்பு

ரத்தக்கொதிப்பில் Masked Hypertension (முகமூடி அணிந்த ரத்தக்கொதிப்பு), White coat Hypertension (மருத்துவரைக் கண்டால் ஏற்படும் ரத்தக்கொதிப்பு) என்று இரண்டு வகைகள் உள்ளன. மாஸ்க்ட் ஹைபர்டென்ஷன் என்கிற முதல் வகையில் மருத்துவர் எடுக்கும் ரத்த அழுத்த அளவு சீராகவும் அதே நபர் வீட்டில் எடுக்கும் ரத்த அழுத்த அளவு 130/80 க்கு மேலும் இருக்கும்.

அதாவது, அவர்களுக்கு ஒருநாள் முழுவதும் BP அதிகமாக வேறுபட்டுக் கொண்டிருக்கும். அவர்களுக்கு 24 மணி நேரம் எடுக்கக்கூடிய BP கருவியைப் பொருத்தி ரத்தக் கொதிப்பு உள்ளதா, எவ்வளவு அதிகம் உள்ளது என்றெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒயிட் கோட் ஹைபர்டென்ஷன் என்கிற இரண்டாவது வகையில் மருத்துவரிடம் செல்லும்போது ஏற்படும் மன அழுத்தத்தாலும், பயத்தாலும் BP அதிகமாகக் காணப்படும். ஆனால், அவர்களுக்கு பழகிய சூழலில் அதாவது வீட்டில் அல்லது அலுவலகத்தில் சீரான BP இருக்கும். இந்த இரண்டு வகைகளில் மாஸ்க்ட் ஹைபர்டென்ஷனை கண்டறிய தவறிவிட்டால் ரத்தக்கொதிப்பால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாம் ஆளாகிவிடுவோம். ஆகவே 2 அல்லது 3 முறை ரத்த அழுத்தத்தை வெவ்வேறு நேரங்களில் பரிசோதித்த பிறகே ஒருவருக்கு ரத்தக்கொதிப்பு உள்ளதா இல்லையை என்று தீர்மானிக்க வேண்டும்.

ரத்தக்கொதிப்பின் பாதிப்புகள்

ரத்தக்கொதிப்பால் நம் உடலில் ஏற்படும் பின்விளைவுகள் பல உள்ளன. பக்கவாதம், டிமென்ஷியா எனப்படும் ஞாபகமறதி நோய், பார்வையிழப்பு, மாரடைப்பு, இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, பாலியல் குறைபாடுகள் மற்றும் மலட்டுத்தன்மை ஆகியவை அவற்றுள் முக்கியமான சில பிரச்னைகளாக உள்ளது. இதுபோன்ற உடல்நலக்கேடுகள் வராமல் இருப்பதற்கு நம் ரத்தக்கொதிப்பை நன்றாக கையாள்வது மிக
முக்கியம்.

ரத்த அழுத்தம் சீராக இருக்க...

ரத்தக்கொதிப்பைக் கையாளும் முறைகளில் வாழ்க்கைமுறை மாற்றங்களும், மருந்து, மாத்திரைகளும் மிகவும் முக்கியமானவை. பின்வரும் 5 வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்றினால் ரத்த அழுத்தம் சீரான அளவிற்கு வந்துவிடும். மருந்து, மாத்திரைகளையும் குறைத்துவிடலாம்.

* உணவில் உப்பின் அளவை குறைத்தல் நன்று. நம் உணவில் தேவையைவிட 3 அல்லது 4 மடங்கு அதிக உப்பை சேர்த்துக்கொள்கிறோம் என்றும் அதுவே ரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணம் என்றும் மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. சமையல் செய்யும்போது எப்போதும் போடும் அளவில் பாதி அளவு உப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும். நொறுக்குத்தீனி, ப்ரெட் வகைகள், வத்தல், வடகம், ஊறுகாய் ஆகியவற்றில் அதிக அளவு கண்ணுக்குத் தெரியாத உப்பு இருப்பதால் இவை அனைத்தையும் உட்கொள்வதை தவிர்த்துவிட வேண்டும்.

* காய்கறிகள், பழங்கள், கீரைகள், முழு தானியங்கள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இவை யாவும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டுள்ளன. தினமும் 5 கப் அளவில் காய்கறி பழங்களும், 2 அல்லது 3 கப் அளவில் முழு தானியங்களும் உட்கொள்ள வேண்டும்.

* உடற்பயிற்சி என்பதை நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வாரத்தில் 5 நாட்களுக்கு மேல் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டால் ரத்த அழுத்தம் மட்டுமின்றி ரத்தத்தில் சர்க்கரை அளவும் கொழுப்பும்கூட சீராகிவிடும் என்பது உண்மை. வேகமாக நடத்தல், ஓடுதல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை குறைந்தது 30 நிமிடமாவது செய்வது நன்று. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஏதேனும் புது உடற்பயிற்சியைப் பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நன்று.

* மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு ரத்தக்கொதிப்பும் அதிகமாக காணப்படுகிறது. மனதிற்கு அமைதி அளிக்கும் தியானம், யோகாசனம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் தினமும் ஈடுபட்டால் ரத்தக்கொதிப்பு நன்றாக குறைந்துவிடும். மேலும் அவரவர்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடலாம். அதாவது சமையல், கைவேலைகள், வரைதல், இசை, நடனம் போன்றவற்றில் அன்றாடம் நேரம் செலுத்தினால் மனம் அமைதியாகி ரத்த அழுத்தமும் சீராக மாறிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

* தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் இன்றியமையாதது. எவ்வளவு வேலை இருந்தாலும், மூளை எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாலும் ஒரு நாளுக்கு 6 லிருந்து 8 மணி நேரம் வரை தூங்குவது சீரான ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் உணவை முடித்துவிட்டு கணினி, தொலைக்காட்சி, அலைபேசி போன்ற கருவிகளையும் நிறுத்திவிட்டு ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் குடும்பத்தினருடன் கலந்துரையாடுவது, குழந்தைகளுடன் விளையாடுவது, கதை படிப்பது என்று மனதை சாந்தமாக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். மேற்கண்ட வாழ்க்கைமுறை மாற்றங்களை ஒவ்வொன்றாகப் பின்பற்றத் தொடங்கினால் உங்கள் ரத்தக்கொதிப்பு வியாதி குணமடைந்து ரத்த அழுத்தம் சீராக மாறிவிடும் என்பது நிச்சயம்.

மேலும் இதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலோ, மருந்து மாத்திரைகளைக் குறைத்து எப்படி சீரான ரத்த அழுத்தத்தை அடைய முடியும் என்ற கேள்வி மனதில் தோன்றினாலோ உடனடியாக இதயநல மருத்துவரையோ அல்லது உங்கள் மருத்துவரையோ அணுக வேண்டும்.

- க.கதிரவன்