என்றென்றும் இளமைஸ்பெஷல்

அழகாகவும், இளமையாகவும் இருக்க யாருக்குத்தான் மனம் இல்லை. ஆனால், அதை எப்படி பெறுவது, பெற்ற இளமையைத் தக்க வைத்துக் கொள்வது என்பதில்தான் குழப்பமே. இதற்கு எளிய விடை சொல்கிறார்கள் நிபுணர்கள். நமக்கு எளிதாகக் கிடைக்கும் உணவுப்பொருட்களிலேயே நாம் நம்ப முடியாத மாயாஜாலங்கள் மறைந்திருக்கிறது.

தக்காளி

தக்காளியின் ஸ்பெஷல் Lycopene என்ற மகத்துவம். மேலும் கரோட்டினாய்டுகள் இருப்பதால் சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய சரும நோயிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வயது மூப்பு அடைவதையும் தள்ளிப்போடுகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து இருப்பதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் தடுக்கப்படும். மேலும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்ததாகவும் உள்ளது. Tannins, Flavonoids போன்ற வேதிப்பொருட்களும் இருப்பதால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

எலுமிச்சை

வைட்டமின் சி அதிகம் கொண்ட பழமான எலுமிச்சை சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புக்கு உதவும் ஆன்டி ஆக்சிடென்டும் அபாரமாக நிறைந்துள்ளது.

கேரட்

வைட்டமின் ஏ, பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் கொண்ட உணவு கேரட். இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், வயது முதிர்வைத் தடுக்கவும் உதவுகிறது.

உலர்ந்த கொட்டைகள்

உலர்ந்த கொட்டைகளில் வைட்டமின் ஈ அதிக அளவு இருக்கிறது. நட்ஸ் உண்பவர்களுக்கு தோலில் உள்ள ஈரப்பதம் தக்கவைத்துக் கொள்ளப்படும். சருமத்தின் திசுக்களை சரி செய்யவும், புற ஊதா கதிர்வீச்சிலிருந்தும் பாதுகாக்கவும் நட்ஸ் பயன்படுகிறது.

பழங்கள்

இது பொதுவான ஆலோசனை. எல்லா பச்சை நிறக்காய்கறிகளிலும், தினமும் எடுத்துக்கொள்ளும் பழ வகையாலும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். ஏனெனில் காய்கறிகளும், பழங்களும் சருமத்துக்கு வலுவான திறனைக் கொடுக்கிறது.

பப்பாளி

இளமையைக் காக்கும் சூப்பர் உணவு என்றே பப்பாளியைச் சொல்லலாம். வைட்டமின் A,C,K,Eமற்றும் மினரல்ஸ், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் சருமத்திற்கு நெகிழ்ச்சி தருவதாக இருக்கும். சருமத்தில் உள்ள சுருக்கங்களை தவிர்க்கும்.

மாதுளை

மாதுளம்பழத்தில் வைட்டமின் C,E மற்றும் K உள்ளது. செலினியம், மக்னீசியம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது. நோயை எதிர்த்து போராடும் சக்தியும், வயதாவதைத் தள்ளிப் போடும் திறனும் கொண்டதால் மாதுளம்பழம் உங்கள் உணவுமுறையில் அதிகம் இடம்பெற வேண்டியது அவசியம்.

அவகேடா

பட்டர் ஃப்ரூட் என்று சொல்லக்கூடிய அவகேடா பழமானது வயது முதிர்வைத் தள்ளி போடும். ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்டுள்ள அவகேடாவானது பொட்டாசியம், வைட்டமின் A,C,K,E மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்ற அதிக சத்துக்களைக் கொண்டது.

- இதயா