கிராம்பு என்கிற லவங்கம்



உணவே மருந்து

அசைவ உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு நறுமணப் பொருள் கிராம்பு. இது சுவை, மணம் என்று மசாலா காரணங்களுக்காக மட்டுமே சேர்க்கப்படுவது அல்ல. அதையும் தாண்டி பல நல்ல விஷயங்கள் கிராம்பினுள் உண்டு. லவங்கம் என்ற பெயராலும் அழைக்கப்படும் கிராம்புக்கு அப்படி என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறார் இயற்கை மருத்துவர் சீனி.

‘‘கிராம்பு எனப்படும் லவங்கம் மருத்துவ குணமுள்ள சிறந்த நறுமணப் பொருள். இது காரமான சமையல்களில், மாமிச உணவுகளில் ஜீரண சக்திக்காக சேர்க்கப்படுகிறது. மேலும் உணவுப்பொருட்களில் கிருமி நாசினியாகவும் சுவை ஊட்டியாகவும் கூட செயல்படுகிறது.

இது இந்தோனேஷியாவில் தோன்றிய தாவரம். இதன் மொத்த உற்பத்தி பெரும்பான்மை அங்கேதான் என்றாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் கூட கிராம்பு பயிரிடப்படுகிறது. ஈரப்பதம் உள்ள மண்வளம் கொண்ட பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது. அதனால் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கிராம்பு பயிரிடப்படுகிறது. பயிரிடப்பட்டு ஆறேழு வருடங்களில் பூக்க ஆரம்பிக்கும் இத்தாவரம், கிட்டத்தட்ட 80 வருடங்கள் வரை கூட முழுவதுமாக அறுவடை கொடுக்கும்.

பழமையான சீனப் பேரரசின் குறிப்பேடுகளில் கிராம்பு மிகப்பழங்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் இருக்கின்றன. வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்காக அரசவைக்கு பொது நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் வாயில் கிராம்பை அடக்கி வர வேண்டும் என்று ஆணை இருந்திருக்கிறது.

லவங்கத்தை கருவாய்க் கிராம்பு, அஞ்சுகம், லவங்க பூ, திரளி, சோசம், வராங்கம் என்ற பல பெயர்களில் அழைக்கின்றனர். Syzygium aromaticum என்பது இதன் தாவரவியல் பெயர். Myrtaceae என்ற குடும்ப வகையினைச் சேர்ந்தது. ஆயுர்வேதம் மற்றும் இயற்கை வைத்திய முறைகளில் இதனை பயன்படுத்துகின்றனர். சீன வைத்தியத்திலும் பயன்படுத்துகின்றனர்.

கிராம்பு பொதுவாக காரமும், விறுவிறுப்பும் கொண்ட சுவையுடையது. அறுசுவைகளில் இதன் பிரிவு கார்ப்பு தன்மையது. லவங்கப் பூ, மொட்டு, பட்டை மற்றும் பழம் என பொதுவாக அனைத்து பாகங்களும் பயன்படுத்தப்பட்டாலும் மொட்டுதான் சிறப்பு. கிராம்பு மொட்டில் இருக்கும் Eugenin வேதியியல் மூலக்கூறுகள் தான் இதன் சிறப்பிற்கு காரணம்.

மயக்கம் போக்கும். ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். பேதியைக் கட்டுப்படுத்தும். நாட்பட்ட பேதியை போக்கும். சீதபேதி மற்றும் குருதிக்கழிச்சலை சீராக்கும். ஆசனவாய் கடுப்பை நீக்கும். கர்ப்பிணிகளின் வாந்தியை மட்டுப்படுத்தும். சிவந்த மச்சம், தோல்நோயான படைகள் போன்றவற்றை நீக்கும். கண்ணில் பூ விழுந்தால் அதனை குணமாக்கும். காது நோய்களை சரிப்படுத்தும்.

கிராம்பு உடலுக்கு சூடு அளிக்கக் கூடியது. அல்பிரினை விட ரத்தம் உறைதலை தடுக்கும் காரணிகள் Eugenol & Acetyl கிராம்பில் உள்ளன. அதனால் குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் இதனை பயன்படுத்தும் போது ரத்த உறைதலை தடுத்து ரத்த ஓட்டத்தை சமநிலையாக்குகிறது.

Ethanolic உள்ளதால் கிராம்பு ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது. காய்ச்சலை தடுக்கும் காரணியான Eugenol கிராம்பில் உள்ளது. நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் வராமல் தடுக்கும். ஆங்கில வலி நிவாரணி மருந்துகளுக்கு நிகராக கிராம்பில் உள்ள Eugenia Caryophyllata வலியைக் குறைக்கும். கல்லீரலை Paracetamol  போன்ற மாத்திரைகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காக்கும்.

கிராம்பு தைலம் அற்புதமான ஒரு கொசு விரட்டி. உணவு பதப்படுத்தலில் Isoeugenol பூச்சிகொல்லியாக செயல்படுகிறது. அரிசி, பருப்பு, சேமிப்பில் வண்டு வராமல் தடுக்கிறது. லவங்கத்தின் மருத்துவ பயன்பாடுகள்

* தொண்டைப் புண் குணமாக வெறும் வாணலியில் லவங்கத்தை வதக்கி வாயில் போட்டு சுவைத்தால் தொண்டைப் புண் குணமாகும்.

* பலமான ஈறுகளுக்கு லவங்கத்தைத் தணலில் வதக்கி சுவைத்தால் ஈறுகள் பலம் பெறும்.

* குமட்டல் மற்றும் வாந்தி நிற்க கர்ப்பிணி பெண்கள் 200 மில்லி வெந்நீரில் 10 கிராம் கிராம்புத் தூள் சேர்த்து அரை மணி நேரம் வரையில் மூடி வைத்திருந்து பின் அதனை வடிகட்டி 15 மில்லி வீதம் குடித்து வந்தால் குமட்டல் மற்றும் வாந்தி நின்று நன்கு பசி எடுக்கும்.

* எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் அடுத்தவரிடம் பேசும் போது வாய்துர்நாற்றம் அடித்தால் அவர் மேல் மற்றவர்க்கு கட்டாயம் மரியாதை குறையும். கிராம்பை வாயில் போட்டு சுவைத்தால் வாய்துர்நாற்றம் போகும். நாக்கிலும் சுவை கூடும்.

* கிராம்பை தண்ணீர் விட்டு அரைத்து அந்த விழுதை வலி உள்ள இடங்களில் பத்து போட்டு வந்தால் வலி மற்றும் வீக்கம் குறையும்.

* தாகமாக இருந்தால் தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும். சில நேரங்களில் தண்ணீர் குடித்தாலும் நாவறட்சி இருந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி சமயங்களில் 4 முதல் 5 கிராம்பை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் நாவறட்சி தீரும். குமட்டலும் மயக்கமும் கூட இந்த தண்ணீர் அருந்த குணமாகும்.

* தலை பாரம் மற்றும் தலைவலியைப் போக்க கிராம்பு தைலத்தை நெற்றியில் தடவ வேண்டும்.

* கிராம்பை வாயில் வைத்து உறிஞ்சினால் ஆல்கஹால் பழக்கம் குறையும்.

* லவங்கம் மற்றும் நிலவேம்பை சம அளவு எடுத்து கசாயம் செய்து குடித்து வர காய்ச்சல் களைப்பு நீங்கும்.

* காய்ச்சலால் ஏற்பட்ட பசியின்மை, சுவையின்மையையும் கிராம்பு சரி செய்யும். உடலில் உள்ள பித்தத்தைக் குறைத்து பசியைத் தூண்டும்.

* பல் வலி மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு பல் வலி மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு உபயோகிக்கும் முன் கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க வாயை வெந்நீரில் கொப்பளித்த பிறகு கிராம்பை உபயோகிக்க வேண்டும். அவ்வாறு செய்வதினால் முழுவதுமாக விரைவில் குணமாகும்.

* உணவு செரிமான என்சைம்கள் சரிவர செயல்பட, வயிற்றுப்போக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளின் பொருட்டு செய்யப்படுகிற மருந்துகளில் அநேகமாக கிராம்பு இருக்கும்.

* மருந்தாக உபயோகிக்க கிராம்புவின் அளவு முழு கிராம்பு அல்லது சூர்ணம்(பொடியாக) 250 மில்லி கிராமிலிருந்து ஒரு கிராம் வரை இருக்கலாம். கிராம்பு தைலம் உள் உபயோகமாக 4 முதல் 6 துளி வரை உட்கொள்ளலாம்.

சரியான அளவில் கிராம்பினை உட்கொள்ளும்போது பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இது தவிரவும் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் கிராம்பு எனப்படும் லவங்கம் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிராம்பு குறித்தான அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள்

கிராம்பில் Eugenol மற்றும் Eugenol Acetate போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் மூலக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. இதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. கிராம்பு ஒரு முக்கியமான ஆன்டி செப்டிக் அதாவது கிருமி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கக்கூடிய தன்மை உடையது. செயற்கையாக உணவை பதப்படுத்தக்கூடிய வேதியியல் மூலக்கூறுகளைக் காட்டிலும் கிராம்பு உணவு மூலம் ஏற்படும் கிருமிகளை கொன்று உணவை கெடாமல் சிறந்த முறையில் பாதுகாக்கிறது. உணவில் பாசிகள் மற்றும் பாக்டீரியா ஏற்படாமல் தடுக்கிறது.

கிராம்பில் உள்ள Eugenin வேதியியல் மூலக்கூறு ஆன்டி வைரஸாக செயல்படுகிறது என்பன போன்ற தகவல்களை கிராம்பினை பற்றிய அறிவியல்
ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி பிரசவித்த விலங்குகளுக்கு நோய் வராமல் கிராம்பு பாதுகாக்கும். நாய் மற்றும் பூனைகளின் காது மற்றும் பல்வலியைப் போக்கவும் வாந்தியை குணமாக்கவும் கிராம்பு பயன்படுகிறது.

விளம்பரங்களில் காட்டுவது போல பற்பசைகளில் மட்டுமல்ல; பல மருத்துவப் பொருட்களிலும் கிராம்பின் கை வண்ணம் இருக்கிறது. பயனுணர்ந்த முறைப்படி பயன்படுத்தி பலன் பெறுவோம்!

இன்னும் சில தகவல்கள்

கிராம்பில் அதன் தூசிகளே கலப்படமாக சேர்க்கப்படுகின்றன. எனவே, கிராம்பு தூசிகள் கலக்காததை வாங்க வேண்டியது அவசியம். பல கடைகளில் இரண்டாம் தரமான கிராம்புகளே கிடைக்கின்றன. இதில் மொட்டு முழுவதுமாக இருக்காது. எனவே இதை கவனித்து நன்கு மொட்டு உடையதாக வாங்க வேண்டும். மிகவும் காய்ந்து போனதாக இல்லாமலும், பார்ப்பதற்கு நல்ல நிறமாக இருப்பதாகவும் இருக்கும் லவங்கத்தை வாங்க வேண்டியதும் அவசியம்.

இந்தோனேஷியா போன்ற நாடுகளில் புகையிலையுடன் கிராம்பு சேர்த்து சிகரெட்டானது தயாரிக்கப்பட்டது. புகையிலையுடன் கிராம்பு சேரும்போது உடலுக்குக் கெடுதலை தரும் தன்மை கொண்டதாக கிராம்பு மாறிவிடும். இதனால் 2009-ம் ஆண்டு முதல் இந்தோனேஷிய அரசாங்கம் சிகரெட் தயாரிப்பில் கிராம்பினைப் பயன்படுத்தும் முறையை தடை செய்துவிட்டது.

- சக்தி