குழந்தைகளின் வளர்ச்சி நிலையை அறிந்துகொள்வோம்!



ஓ பாப்பா லாலி

‘ஒரு குழந்தை பிறக்கும்போது, கூடவே அதன் பெற்றோரும் பிறக்கின்றனர் என்று சொல்வதுண்டு. கருவில் சுமந்து, பிள்ளை பெறும் வரை எவ்வளவு அக்கறையோடு தாயை கவனித்துக் கொள்கிறோமோ, அதைவிட பல மடங்கு விழிப்பு நிலை, குழந்தை பிறந்த பிறகு தேவைப்படுகிறது.
அதற்கு, குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சி நிலைகளைப்பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் ெதரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லும் நரம்பியல் நிபுணர் வினோத் கண்ணா, குழந்தைகளின் வளர்ச்சிப் படி நிலைகளை விவரிக்கிறார்

ஒரு தாய் கருவுற்று 9 மாதங்கள் நிறைவில், சரியான எடையுடன் பிறக்கக்கூடிய குழந்தையின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகள் குறிப்பிட்ட செயல்களை குறிப்பிட்ட வயதுகளில் செய்வதை வளர்ச்சிப்படி நிலைகள் என்று சொல்வோம்.
ஒரு சில குழந்தைகள், அதற்கு ஒத்த சம வயதுள்ள மற்றொரு குழந்தையைவிட, சில செயல்பாடுகள் குறைவாக இருப்பதும் அல்லது மிகுதியாக இருப்பதும் இயல்பானதே. இதற்காக மற்ற குழந்தைகளோடு தன் குழந்தையை ஒப்பிட்டுப் பார்த்து குழம்பிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவ்வகையில், குழந்தை வளர்ச்சிப் படி நிலைகளை நான்கு வகைப்படுத்தலாம்.

1. மொழித்திறன் (Language skill) 2. அறிதிறன்(Cognition skill) 3. செயல்திறன்(Motor skill) 4. சமூகத்திறன்(Social Skill)
இவை குழந்தை பிறந்த இரண்டு மாதங்களிலிருந்து வெளிப்படும். இரண்டு மாதங்கள் ஆன குழந்தையிடத்தில்,

* புன் சிரிப்பு (Social Smile)
* வித்தியாசமான ஒலிகளை எழுப்புதல்
* அருகில் கேட்கும் சத்தத்தை நோக்கி தலையைத் திருப்புதல்.

மூன்று மாதங்களில்…

* அம்மாவின் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளுதல்.
* உணவு எதிர்பார்த்தல்
* மல்லாந்து படுத்தவாறு தனது கை கால்களை சீராக அசைத்தல்.

நான்கு மாதங்களில்…

* ஒலியுடன் கூடிய புன்னகை செய்தல் (Laughs Loud)
* இரண்டு கைகளைக் கொண்டு பொருட்களை பிடித்தல்.
*கண்களையும், கைகளையும் ஒருமுகப்படுத்தி. பொருட்களை நோக்கி  நகர்ந்து பிடித்தல்.
* கழுத்து நிற்றல்.

ஆறு மாதங்கள்

* அந்நியர்களைப் பார்த்து பயப்
படுதல்(Stranger Anxiety)
*‘மா’, ‘பா’, ‘டா’ என ஒரு சொல் பேசுதல்
* பொருட்களை ஒரே கையில் பிடித்தல்
* இருபுறமும் உருளுதல்
* தன் பெயரை அழைத்தால் புரிந்துகொண்டு திரும்புதல்.

ஒன்பது மாதங்கள்

* ‘மாமா’, ‘தாத்தா’ என இரு சொற்கள் பேசுதல்
* உதவியின்றி உட்காருதல்
* தவழ ஆரம்பித்தல்
* ‘டா’, ‘டா’, ‘பை’ ‘பை’ சொல்லுதல்

12 மாதங்கள்

* தனிமையில் பயப்படுதல் /திட்டும்போது அழுதல்
* ஒரு வார்த்தை பேசுதல்
* உதவியுடன் நடத்தல்
* கப்பின் உதவியுடன் நீர் பருகுதல்
* பொருட்களை பாத்திரத்தில் போடுதல்
*பிடித்த பொருட்களை பரிசோதித்தல்
* வார்த்தைகளை புரிந்துகொண்டு இல்லை என்று தலை அசைத்தல்.

ஒன்றரை வயது

*அடம் பிடித்தல்
* எட்டிலிருந்து பத்து வார்த்தைகள் வரை பேசுதல்
* உடல் பாகங்களின் பெயர் கூறுதல்
* தானாக சாப்பிட ஆரம்பித்தல்
* உதவியின்றி தடுமாறாமல் நடத்தல்
* கப்பை பிடித்துக்கொண்டு பால் குடித்தல் (பால் புட்டிகள் தேவைப்
படாது)

இரண்டு வயது

* மற்ற குழந்தைகளுடன் பழகுதல்/விளையாடுதல்
* தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்டல்
* படிக்கட்டில் ஏறி இறங்குதல்
* பந்து எட்டி உதைத்தல்.

மூன்று வயது

 200க்கும் மேற்பட்ட வார்த்தைகளை பேசுதல்
 தானாகவே சாப்பிடுதல்
 தானாகவே உடை அணிந்து கொள்ளுதல்
 மூன்று சக்கர வாகனம் ஓட்டுதல்
 ஒரு காலில் நிலையாக நிற்றல்
 பன்மையில் பேசுதல்
 உடலின் பாகங்களை குறிப்பிட்டு அதன் செயல்களைச் சொல்வது.

நான்கு வயது

 300 முதல் 1000 வார்த்தைகளை பயன்படுத்தல்.
 கதை சொல்லுதல்
 5-6 ஆறு நிறங்களைச் சொல்லுதல்
 சதுரங்கமாக வரைதல்
 தலைக்கு மேல் பந்தை தூக்கி எறிதல்.

ஐந்து வயது

 இரண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட வார்த்தைகளை பேசுதல்.
 படிக்கட்டுகளில் பெரியவர்களைப் போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச் செல்லுதல்.
 குதித்தும், தாண்டியும் செல்லத் தொடங்குதல் பத்து விதமான நிறங்களைச் சொல்லுதல்.

மேற்சொன்ன குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சிப்படி நிலைகளை (மைல் கற்கள்) பற்றி பெற்றோர் தெரிந்து கொள்வதன் மூலம், தங்கள் பிள்ளைகளை நேர்மறையான விளைவுகளை நோக்கி வழி நடத்திச் செல்ல முடியும். இதில் வழக்கத்திற்கு மாறான தாமதம் தெரிந்தாலோ, சந்தேகம் ஏற்பட்டாலோ, சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அதற்கேற்ற சிகிச்சையை ஆரம்ப கட்டத்திலேயே கொடுப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தை தன்னுடைய அதிகபட்ச செயல்பாட்டை அடைந்து வீட்டிலும், சமூகத்திலும் ஒன்றி வாழ முடியும்.

- உஷா நாராயணன்