உங்களை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள்!



Centre Spread Special

ஒரு கசப்பான உளவியல் உண்மை.... தன்னைத்தானே நேசிக்கிறவர்கள் மிகவும் குறைவு. ‘இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருக்கலாம்’, ‘சிவப்பாக மாறிவிட முடியாதா’, ‘எடையைக் குறைக்க வேண்டுமே’ என்று 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தன் உடலைப் பற்றி கடுமையாக அதிருப்தி கொண்டவர்களே என்கிறது உளவியல்.
இந்த மனநிலை தீவிரமாக மாறும்போது அதுவே Body dysmorphic disorder என்கிற நோயாக மாறிவிடுகிறது. இதிலிருந்து தப்பிக்க சிறந்த வழி உங்களை நீங்களே ஏற்றுக் கொள்வதுதான் என்றும் அதற்கு நிவாரணமும் சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.

தன்னைத்தானே ஏற்றுக் கொள்வது எப்படி?!

உண்மையிலேயே உங்களிடம் மாற்றிக் கொள்ள வேண்டிய சாத்தியங்கள் இருந்தால் அதனை நோக்கி நீங்கள் முன்னேறலாம். தசைகளை வலிமையாக்குவதற்காகவோ, எடை குறைப்புக்கோ நீங்கள் முயற்சிக்கலாம். அதுவும் உரிய மருத்துவ வழிகாட்டுதலுடன் இருக்க வேண்டும். ஆனால், தேவையில்லாத கற்பனைகளுக்குள்ளும் சிக்கல்களுக்குள்ளும் நீங்கள் ஆளாவதாக இருந்தால் அந்த மனநிலையை மாற்ற முயற்சிப்பதே சிறந்தது.

இதற்கு அடிப்படையான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆரோக்கியமாக இருப்பது என்பது வேறு. ஆனால், தன் உடலைப் பற்றி அதிருப்தியோடு இருப்பது என்பது வேறு. Body dysmorphic disorder பிரச்னையில் சிக்கிக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும் நபரும் உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாவதுடன், உடல்நலக் கோளாறுகளையும் வரவழைத்துக் கொள்வார்.

எனவே ஒருவர் தன்னைத்தானே ஏற்றுக் கொள்வதும், நேசிப்பதும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது. இதற்கு உளவியலாளர்கள் சொல்லும் வழிமுறைகள் எளிதானவை.

‘உங்களின் தனித்துவங்களைப் பட்டியலிடுங்கள். அடைந்த வெற்றிகளை நினைவு கூருங்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாழ்க்கையையும், நல்ல மனிதர்களையும் கொண்டாடுங்கள். முக்கியமாக உலகத்திற்காக எதையும் செய்யாதீர்கள்.
விமர்சனங்களுக்கும் அஞ்சாதீர்கள். ஆரோக்கியமே அழகு என்பதை உணரும்போது உங்களை நீங்களே நேசிப்பது சாத்தியமாகும்’ என்கிறார் பிட்ஸ்பர்க்கைச் சேர்ந்த பிரபல க்ளினிக்கல் சைக்காலஜிஸ்ட்டான ஜான் டஃபி. ஆமாம்... உங்களை நீங்களே நேசிக்காவிட்டால் வேறு யார் உங்களை நேசிக்கப் போகிறார்கள்?!

- ஜி.ஸ்ரீவித்யா