நொறுக்குத்தீனிகளுக்குத் தடா...



சபாஷ்

இன்றைய குழந்தைகள் வழக்கத்துக்கு மாறாக விளையாட்டு போன்ற உடல்ரீதியான நடவடிக்கைகள் குறைந்தவர்களாகவும், நொறுக்குத்தீனிகள் அதிகம் உண்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் சிறுவயதிலேயே உடல்பருமனுக்கும் ஆளாகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி யிருக்கிறது.

பள்ளி வளாகங்களுக்கு அருகில் குழந்தைகளின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான, நுாடுல்ஸ், பீட்சா, பர்கர்’ போன்ற, ‘ஜங்க் புட்’ உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் நடந்த இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் இந்த தகவலைக் கூறியிருக்கிறார்.

‘கடந்த, 2015-ம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தெரிவித்திருந்தது. ஆனால், அதை முடிவு செய்வதில் சில பிரச்னைகள் இருந்தன.

ஆரோக்கியமான உணவு எது, தீங்கு ஏற்படுத்தும் உணவு எது என்பதை வரையறை செய்வதில் நிறைய குழப்பங்கள் இருந்தன. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பல உணவு பொருட்கள் தீங்கு ஏற்படுத்துபவையாக உள்ளன. அதேபோல் நம் நாட்டில் தயாராகும் சில உணவு பொருட்களும் அப்படித்தான் உள்ளன. இந்நிலையில் நீண்ட ஆய்வுக்கு பின் இது தொடர்பாக சில வரையறைகளை உருவாக்கி, சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.

இதன் முதல் கட்டமாக பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் உடல் நலத்துக்கு கேடு ஏற்படுத்தும் சிப்ஸ், பீட்சா, பர்கர், நுாடுல்ஸ் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, ஜங்க் ஃபுட் எனப்படும் குறிப்பிட்ட உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி வளாகங்களிலும், பள்ளி வளாகத்திலிருந்து, 50 மீட்டர் சுற்றளவு தூரத்துக்குள்ளும் இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இந்த சட்டம் தீவிரமாக அமலுக்கு வந்தால் குழந்தைகளிடையே சிறுவயதிலேயே ஏற்படும் உடல் பருமனையும், மற்ற ஆரோக்கியக் கேடுகளையும் நிச்சயம் தவிர்க்க முடியும்!

- ஜி.ஸ்ரீவித்யா