டியர் டாக்டர்



*அவ்வப்போது வந்து நம்மை பயமுறுத்தும் கடும் புயல்களுக்கு பெயர் வைப்பது போல ‘ஜிகா, எபோலா, நிபா’ என விதவிதமான பெயர்களில் வரும் புதுப்புது நோய்கள எப்படி தாக்குப் பிடிப்பது என்பதை விவரித்த ‘கவர்ஸ்டோரி’ இந்த சூழ்நிலைக்கு அவசியம், அவசரமானதும் கூட. ‘ரவுண்ட்ஸில்’ கன்னியாகுமரி அரசு மருத்துவமனை பற்றி பல ஆச்சரியமான விஷயங்களை அள்ளித் தந்துள்ளது. ‘செக் லிஸ்ட்’ இன்றைய இளம் தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ‘டார்ன்தெரபி’ ‘சருமம் நலம் காக்கும் பழங்கள்’ இவையிரண்டும் நல்ல பாடங்கள்.
- சுகந்தி நாராயணன், வியாசர் நகர்.

*‘மருத்துவ உலகை ஆளும் புதிய தொழில்நுட்பங்கள்’ கட்டுரையில், உடல் நலனை பேணிக்காக்கும் 9 வகையான தொழில் நுட்பங்கள் நடப்பாண்டில் வெளிவந்திருப்பதை குறித்த தகவல்கள் பெரும் வியப்பளித்தன. இத்தனை தொழில் நுட்பங்களுக்கு உறுதுணையாக சமூக ஊடகங்கள் துணையிருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி

*எலும்பு புற்றுநோய்க்கான அறிகுறிகள், அந்தப் பாதிப்பைக் கண்டறிய, என்னென்ன மாதிரியான பரிசோதனைகள் மேற்கொள்வது?, யார்யாரெல்லாம் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்? எனத் தெளிவாக விளக்கி இருந்தது கடந்த இதழின் ‘எலும்பே நலம்தானா’. !
- மூசா, திருவல்லிக்கேணி.     

*மனித இனத்தைப் பயமுறுத்துவதற்கென்றே எபோலா, நிபா, மூளைக்காய்ச்சல்… என நோய்கள் படையெடுக்கும் வேளையில், நம்மைக் கலங்க வைக்கும் குடல் கசிவு ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளைப் பெருமளவில் தாக்குகிறது என்பதைப் படித்ததும் அதிர்ந்து போனேன். இன்னும் என்ன மாதிரியான நோய்கள் எல்லாம் வரப் போகிறதோ?!
- நாராயண பாபு, புதுச்சேரி.

*‘யோகா மரபணுவையே மாற்றும்’ கட்டுரையில், நம் நாட்டின் பாரம்பரிய யோகா மனம், உடல் நலனுக்கு மட்டுமல்ல; நோய்களுக்குக் காரணமான ‘சைட்டோகீன்’ என்கின்ற புரதத்தின் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகிறது,  என்பது யாரும் அறியாத புத்தம்புதிய தகவல்.
- சூரிய நாராயணன், அசோக் நகர்.

*மருத்துவர் முத்து செல்ல குமார் ‘நோயை துல்லியமாகக் கண்டறிய வேண்டியதன்’ அவசியத்தை அனைவருக்கும் புரியும்படி விளக்கியிருந்தது பயனுள்ள தகவல்.
- இந்திரா, கீழ்பெரும்பள்ளம்.

*‘கிசு கிசு பேசுகிறவர்களின் உளவியல்’ ரகசியங்களை அப்படியே புட்டு, புட்டு வைத்திருந்தார் டாக்டர் சிவபாலன் இளங்கோவன். படிக்கும் போது நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் புரிந்தது. சபாஷ்..
- வெங்கடேஷ், காரிமங்கலம்.