மீண்டும் பன்றிக்காய்ச்சல்...



எச்சரிக்கை

ராஜஸ்தான், குஜராத், அரியானா போன்ற வடமாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களில் பரவாமல் இருப்பதற்கான எச்சரிக்கையை மத்திய அரசின் சுகாதாரத்துறை விடுத்துள்ளது. எனவே, போதுமான மருந்தினை கையிருப்பு வைத்திருக்குமாறும், சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பன்றிக்காய்ச்சல் கடந்த 2009-ம் ஆண்டு இந்தியா முழுவதும் பெரிய அச்சத்தை உண்டாக்கியது. இப்போது மீண்டும் வட மாநிலங்களில் பரவியுள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக நவம்பர், டிசம்பர் போன்ற குளிர்காலங்களில் பன்றிக்காய்ச்சல் அதிகம் பரவும். தற்போது வடமாநிலங்களில் கன மழை பெய்வதுபோலவே தமிழகத்திலும் மழை பெய்துவருகிறது. அதனால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

H1N1 என்ற இன்ப்ளூயன்சா என்கிற வைரஸ் கிருமியால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பன்றிகள் இடையே இக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தப் பெயர் உருவானது. சளி, தும்மல், இருமல், தொடர் காய்ச்சல், தொண்டை வலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். மேற்கண்ட அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காற்றின் மூலம் எளிதில் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, முகக்கவசம் அணிவதுடன் உடல் சுத்தத்தைப் பராமரிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். தொற்றுநோய் என்பதால் கைகளை சுத்தமாக அடிக்கடி கழுவுவதும் அவசியம். ஏற்கெனவே வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்படும்போது அவர்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருப்பதும் அவசியம்!

- ஜி.ஸ்ரீவித்யா