மகிழ்ச்சி தரும் உடற்பயிற்சி



ஃபிட்னஸ்

ஒருவர் பொருளாதார ரீதியான முன்னேற்றம் அடையும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, உடற்பயிற்சியின்போது இன்னொருவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவு அதிகம் என்று புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக உளவியலாளர்கள்.

உடற்பயிற்சிகள் செய்வதால் நம் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் ஏராளமான சுகாதார நலன்களைப் பெற முடியும் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், அது நம்முடைய பொருளாதார நிலைமையைவிட உடற்பயிற்சிகள் நம் மனநலத்திற்கு எப்படி அதிக உதவி செய்கிறது என்ற கேள்வி எழுகிறதுதானே....The Lancet பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 15 லட்சம் அமெரிக்கர்களின் உடல் நடத்தை மற்றும் மனநிலை பற்றிய தகவல்கள் சேகரித்தனர்.

ஆய்வில் பங்கு கொண்டவர்களிடம் கடந்த 30 நாட்களில் எத்தனை முறை மன அழுத்தம் அல்லது மனப்பதற்றம் போன்ற உணர்வு ரீதியான பிரச்னைகளை சந்தித்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதேபோல பங்கேற்பாளர்களின் வருமானம் மற்றும் உடல்ரீதியான செயல்பாடுகளைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் தோட்ட வேலைகள், சைக்கிள் ஓட்டுதல்,  எடை தூக்குதல், குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகள் என மொத்தம் 75 வகையான உடற்பயிற்சிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி ஆய்வாளர்கள் வருடத்திற்குக் குறைவான வருமானம் உள்ளவர்களாக இருந்தாலும், உடல் ரீதியான செயல்களில் ஈடுபடுபவர்கள், மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதற்கு உடற்பயிற்சியின்போது உடலின் கழிவுகள் வெளியேறுவதும், ஆனந்தத்தை தரும் எண்டார்பின் போன்ற ஹார்மோன்கள் சுரப்பதும்தான் காரணம் என்று விளக்கமளித்திருக்கிறார்கள்.

‘ஒருவருடைய வருமானத்தினால் கிடைக்கும் அதே மகிழ்ச்சியைவிட உடற்பயிற்சிகள் மூலமாகவும் பெற முடியும்.  அதற்காக நீங்கள் சிறந்த விளையாட்டு வீரனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும், வீட்டுவேலை, தோட்ட வேலை, அரைமணி நேர வாக்கிங், ரன்னிங் என்று அன்றாட பணிகளையே ஆர்வமுடன் செய்தால் போதும். அதன் மூலம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால் மகிழ்ச்சி
உத்தரவாதமாகக் கிடைக்கும்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

- என்.ஹரிஹரன்