கால்சியம் சந்தேகங்கள்



கவுன்சிலிங்

பற்கள், எலும்புகளின் நலன் காக்கவும் கால்சியம் மிகவும் அத்தியாவசியமான சத்து என்பது நமக்குத் தெரியும். அத்துடன் தசைகள், நரம்புகள் போன்ற உடலியக்கத்துக்கும் கால்சியம் அவசியமானது.
பல்வேறு உணவுப் பொருட்களின் மூலமாக கால்சியத்தைப் பெற்றுக் கொள்கிறோம். அதில் பற்றாக்குறை உறுதி செய்யப்படும் பட்சத்தில் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதுகுறித்து அடிக்கடி பலருக்கும் ஏற்படக் கூடிய சந்தேகங்களுக்கான மருத்துவ விளக்கங்களை தெரிந்துகொள்வோம்.  

வயது வந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு உணவிலிருந்து தேவையான கால்சியம் அளவு என்ன?

வயது வந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு உணவிலிருந்து 1000 மில்லி கிராம் கால்சியம் கிடைக்க வேண்டும். இது ஒரு வேளை உணவில் இருந்து பெறப்பட வேண்டியது இல்லை. ஒரு நாள் முழுவதும் உட்கொள்ளும் உணவிலிருந்து பிரித்துப் பெறப்படலாம்.

ஒரே வேளையில் அளவுக்கு அதிகமான கால்சியம் எடுத்துக் கொள்ளப்பட்டால் அதைக் கிரகித்துக் கொள்வதில் உடலுக்கு சிரமம் இருக்கும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும், 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் ஒரு நாளைக்கு 1200 மில்லி கிராம் தேவைப்படும். அது அவர்களுடைய எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியம்.ஆனால், இந்த அளவைத் தாண்டவும் கூடாது.

எலும்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்க எல்லோருக்கும் கால்சியம் சப்ளிமென்ட் தேவையா?

இல்லை. கால்சியம் பற்றாக்குறை இருந்து அது உடலில் ஏதேனும் அறிகுறிகளைக் காட்டினால் மட்டுமே மருத்துவரின் பரிந்துரையுடன் கால்சியம் சப்ளிமென்டுகள் தேவைப்படும். பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் கால்சியம் தேவை அதிகரிக்கும். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்னைகள் தாக்கும் அபாயம் அதிகம் என்பதால் கால்சியம்
சப்ளிமெண்ட் தேவைப்படலாம்.

ஆனால், அதையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் அதிகப்படியான கால்சியம் பெண்களுக்கு டிமென்ஷியா போன்ற பிரச்னைகளுக்கு காரணமாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, கவனம் தேவை.எலும்புகளின் ஆரோக்கியத்தைக் காக்கும் கால்சியம் நிறைந்த உணவு எது?

விலை உயர்ந்த உணவுகளில் தான் கால்சியம் அதிகம் இருக்கும் என்று அர்த்தமில்லை. சாதாரண தயிரில் அபரிமிதமான கால்சியம் இருக்கிறது. தவிர கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள தேவையான வைட்டமின் டியும் இருக்கிறது.தயிரின் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின்களில் 20 சதவிகிதம் கிடைத்துவிடும். கால்சியம் தேவையும் 30 சதவிகிதம் கிடைத்துவிடும். தயிரில் இனிப்போ வேறு சுவையூட்டிகளோ சேர்க்காமல் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

எலும்பு உடைந்தால் அது சரியாகும்போது முன்பைவிட பலமாக உருவாகும் என்பது உண்மையா?

எலும்பு உடைந்து மறுபடியும் சேரும்போது அது முன்பைவிட அதிக வலுவோடு உருவாகும் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. வயதானவர்களுக்கு எலும்பு உடையும்போது அது முன்பைவிட பலவீனமாக மாறும் என்பதே உண்மை. ஏனெனில், வயதாக ஆக எலும்புகள் உருவாகும் தன்மை உடலில் சிறிது சிறிதாக குறையும்.

எடை அதிகமாக இருப்பது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

உடல் பருமன் உச்சி முதல் பாதம் வரை பலவிதப் பிரச்னைகளுக்குக் காரணமாவது போல எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அதிலும் வயிற்றைச் சுற்றி உள்ள கொழுப்பு அதிகமாக இருக்கும்போது அது எலும்புகள் மெலிதாகக் காரணமாகும். எனவே, உயரத்திற்கேற்ற எடையைப் பராமரிப்பது ஆரோக்கியமானது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்குச் சரியான உடற்பயிற்சி மிகமிக முக்கியம்.

- ராஜி