ஒற்றை தலைவலிக்கு முடிவே இல்லையா?!



சிகிச்சை

நம்மில் பலரையும், பல நேரங்களில்  பாடாய்ப்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது ஒற்றைத் தலைவலி. பாரம்பரியமாக, சில சமயங்களில் பழக்க வழக்கங்களால் வரக்கூடிய ஒரு நரம்பியல் குறைபாடு இது என்கிறார்கள் நிபுணர்கள். நரம்பியல் சிறப்பு மருத்துவர் சிவராஜன் இதற்கான காரணிகளையும், தடுக்கும் எளிய வழிமுறைகளையும் விரிவாக விவரிக்கிறார்.

*ஒற்றை தலைவலி எதனால் ஏற்படுகிறது?

ரத்தக் குழாய்கள் விரிவடைதல் மற்றும் வீங்குதலாலும் பொதுவாக தலைவலி உண்டாகும். அந்த நேரத்தில் நைட்ரிக் ஆக்ஸைடு அமிலம் அதிகமாக சுரக்கும். அது ரத்த குழாய்களைத் தூண்டும். அப்போது Hydroxytryptamine acid எனும் அமிலத்தின் அளவும் ரத்தத்தில் அதிகரிக்கும். எனவே, அப்போது ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தினால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, வலி உணரப்படும்.

மேலும் வலி உணர்ச்சியைத் தரக்கூடிய் ட்ரைஜெமினல் என்னும் அமிலமும் அதிகம் சுரந்து, வலி உணர்வை அதிகரிக்கும். இது ஹார்மோனில் சுரக்கும் வேதியியல் திரவத்தின் அளவு குறையும்போது சமிக்கை கடத்தி நரம்புகள் பாதிக்கப்பட்டு ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.

*ஒற்றை தலைவலி ஒரு நோயா?

ஒற்றை தலைவலி என்பது நோயல்ல. அது ஒரு நரம்பியல் தொடர்பான ஒரு குறைபாடுதான். ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் முற்றிலும் இதனை சரி செய்துவிடலாம்.

*ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்?

ஒரே பக்கமாக தலை விண்விண்ணென்று தெறிக்கும், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்றவை ஏற்படும். பளிச்சென்ற வெளிச்சத்தைப் பார்க்க முடியாது.

*எவ்வளவு நேரம் ஏற்படும்?

இதற்கு சரியான நேர அளவை நிர்ணயிக்க முடியாது. இந்த வலி மணிக்கணக்காக இருக்கும். சிலருக்கு நாள்கணக்காகவும் கூட நீடிக்கும். மேலும் ஒரு சிலருக்கு 72 மணி நேரம் கூட ஒற்றை தலைவலி தொடர்ந்து நீடிக்கும்.

*எத்தனை வயதில் ஒற்றை தலைவலி வரும்?

இன்றளவில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இந்த குறைபாடு இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சத்து குறைபாடு, பார்வை குறைபாடு, ரத்தசோகை, பரம்பரை சார்ந்த குறைபாடுகளாலும் ஒற்றை தலைவலி தாக்குகிறது.

*பெண்களுக்கு ஒற்றை தலைவலி அதிகம் வர வாய்ப்பு உள்ளதா?

மாதவிலக்கு சமயங்களில் ஒரு சில பெண்களுக்கு ஒற்றை தலைவலி வரக்கூடும். மேலும் இந்த குறைபாடு பொதுவானது. எனவே ஆண், பெண்கள் ஆகிய இருவருக்குமே ஒற்றை தலைவலியானது ஏற்படும்.

*ஒற்றை தலைவலியை அலட்சிய படுத்துவதினால் என்னவாகும்?

ஒற்றைத் தலைவலியால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், பலர் தலைவலியை முற்றவிட்டு பிறகு பக்கவாதம் உட்பட வேறு சில ஆபத்தான நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். மேலும் சிலருக்குக் கண்பார்வை கூட மங்கிப் போகும் வாய்ப்பு இதனால்தான் உருவாகிறது. மேலும் சோர்வான நிலை ஏற்படும். இதனால் வேலையில் அல்லது பள்ளி அல்லது பொது இடங்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். எனவே, ஒற்றை தலைவலியை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது அவசியமாகும்.

*சிகிச்சைகள் என்ன?

ஒற்றைத் தலைவலியைப் பொருத்த வரையில் சிகிச்சை என்பது இல்லை. மருத்துகள் மூலமே குணப்படுத்த முடியும். கட்டுப்படுத்தக் கூடியது, கட்டுப்படுத்த முடியாதது என வகைகளை பிரித்து அதற்கேற்ப மருத்துகள் அளிப்போம். 15 நாட்களுக்கு மேல் ஒற்றைத் தலைவலி இருந்தால் அதனை Chronic migraine என கூறுவோம். சில நபர்களுக்கு ஒரு மருந்தைக் கொடுத்தால் சரிசெய்திடலாம். சிலருக்கு அதீதவலியால் இரண்டு, முன்று மருந்துகளை பரித்துரைப்போம். அது தவிர்த்து யோகா, நீச்சல் பயிற்சி, உடல் மற்றும் நடைப் பயிற்சி செய்வதால் ஒற்றை தலைவலியை போக்க முடியும்.

*தடுப்புவழிமுறைகள் என்ன?

நல்ல தூக்கம்

இரவு தூக்கத்தை தவிர்க்கக் கூடாது. அவ்வாறு தூங்கப்போகும் நேரத்தையும், விழித்து எழும் நேரத்தையும் கண்டிப்பாக திட்டமிட வேண்டும்

உணவுமுறை

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி வராமல் தவிர்க்கலாம்.

வலி மருந்துகள்

ஒற்றைத் தலைவலி அடிக்கடி வரும்போது, மருத்துவரை அணுகி அவரது பரிந்துரையின்பேரில்தான் மருந்துகளை சாப்பிட வேண்டும். தங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் அல்லது தலைவலிக்கு மருந்துக் கடைகளில் தரும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும் முறையானது அல்ல. அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது!

தரமில்லாத ஹேர் டையினை தலைக்குப் பூசுதல், விதவிதமாக அணியும் கண் கண்ணாடிகள், வாசனை திரவியங்களை பூசிக்கொள்ளுதல், உதட்டுச்சாயம், ஒப்பனைகள் மற்றும் மருத்துவர் பரிந்துரையின்றி சிலவகை மாத்திரைகளை உண்பது போன்றவை ஒற்றைத் தலைவலி
வருவதற்கு காரணங்களாக இருக்கிறது.

பொதுவான கவனம்

கவலை, சோர்வு, மன அழுத்தம் ஆகியவை தவிர்ப்பது நல்லது. அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள் சிலருக்கு ஒற்றைத் தலைவலி வரும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம். இதுபோன்ற தலைவலியை தூண்டும் காரணிகளை அவற்றை கண்டறிந்து முன்னெச்சரிக்கையுடன் அதனைத் தவிர்க்க வேண்டும்.

- எம்.வசந்தி