பிராட்வே மருத்துவமனைரவுண்ட்ஸ்

பற்கள் தொடர்பான பிரச்னைகள் வந்தாலோ, சிகிச்சை பெற வேண்டும் என்று நினைத்தாலோ தனியார் மருத்துவமனைகளே உடனே பலருக்கும் நினைவுக்கு வரும். அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவத்துக்கென்று தனிப்பிரிவு இருப்பது பலருக்கும் தெரியாது. குறிப்பாக, சென்னையில் பல் மருத்துவத்துக்கென்று பிரத்யேகமான அரசு மருத்துவமனை இருப்பதை பலரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான
ஸ்பெஷல் ரவுண்ட்ஸ் இது.

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் அருகில் 1935-ம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் சிறப்பு கொண்டது இந்த மருத்துவமனை. கல்லூரியுடன் இணைக்கப்பட்டு செயல்படும், இம் மருத்துவமனை பற்றி இயக்குநர் விமலா நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘மாபெரும் இரண்டு தடைகளை உடைத்தெறிந்து வெற்றிகரமான நடைபோடுகிறது நம் மருத்துவமனை என்று பெருமையாக சொல்லலாம். சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1935-ம் ஆண்டில் டாக்டர் வெங்கட்ராவ் என்பவரால் சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டது. ஆனால், 1942-ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது. சில வருடங்களுக்கு பின்பு எச்.எம்.ராவ் என்பவர், அமெரிக்காவிலிருந்து DDS பட்டம் பெற்று இங்கு சென்னையில் வந்து பல் மருத்துவக் கல்லூரியை திறந்தார்.

சகல வசதிகளுடனும், தொழில் நுட்பத்துடனும் செயல்பட்டு வந்தது. எச்.எம்.ராவ் மறைவைத் தொடர்ந்து மீண்டும் மூடப்பட்டது. பல் மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி, 1943-ல் சர் ஜோசப் போரே என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு பல் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை அரசிடம் எடுத்துரைத்தது. பின்பு 1953-ல் சென்னை பல் மருத்துவக் கல்லூரி பல் மருத்துவப் பிரிவினை அரசு தொடங்கியது. 1961-ல் சென்னை பல் மருத்துவக் கல்லூரி தனியாக நிறுவப்பட்டது. 1966-ல் முதுநிலை பிரிவு தொடங்கப்பட்டது.

1992-ல் சென்னை பல்மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2012-ல் புதிய பல் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டு வைர விழா கொண்டாடப்பட்டது. இந்த பல் மருத்துவக் கல்லூரிக்கு இந்தியாவின் மூன்றாவது பழமையான மருத்துவக் கல்லூரி என்ற தனிச்சிறப்பு இருக்கிறது. தென்னிந்தியாவிலேயே, இதுதான் முதல் பல் மருத்துவக் கல்லூரி.

பொதுவாக பல் மருத்துவமனை என்றதும் பல் பிடுங்குவதும், பல் பொருத்துவதும்தான் ஞாபகத்தில் வரும், ஆனால், இங்கு அது மட்டுமன்றி பலதரப்பட்ட நவீன கருவிகள் கொண்டும், சிறந்த மருத்துவர்களைக் கொண்டும் நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 9 பிரிவுகள் உள்ளன. பல் புறத்திசுவியல் துறை, சமுதாய பல் பாதுகாப்பு துறை, வாய் நோய் குறியில் ஆய்வுத்துறை, குழந்தைகள் பல் சிகிச்சை பிரிவு, செயற்கை பல் பொருத்தும் பிரிவு, பல் பாதுகாப்பு துறை, வாய்முக பல் அறுவை சிகிச்சை, பல் மற்றும் முகத்தாடை சீரமைப்புத்துறை, வாய் நோய் அறிதல் என பல்வேறு பிரிவுகளாக இயங்குகிற அரசு மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே இங்குதான் இருக்கிறது.

இங்கு 30-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். (பல் சம்பந்தப்பட்ட மருத்துவமனை என்பதால் உள்நோயாளிகள் அதிகம் இங்கு இருப்பதில்லை.) குறிப்பாக, விபத்து மற்றும் அறுவைச்சிகிச்சை காரணங்களுக்காக சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே இங்கு உள்நோயாளிகளாகத் தங்க வைக்கப்படுகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு 1500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வருகிறார்கள், அவர்களுக்கு உரிய சிகிச்சையை அளி்க்கிறோம். இங்கு போதுமான குடிநீர் வசதி அமைக்கப்படாமல் இருக்கிறது. அதேபோல பரிசோதனை மையங்கள் மற்றும் பெண் மாணவியருக்கான விடுதிக்குச் செல்வதற்கு மெயின் ரோட்டை சுற்றி செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் இம்மருத்துவமனையின் பின்பக்கம் சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தால் உதவியாக இருக்கும்.’’

பல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் கண்மணி

‘‘நான் மருத்துவராகவும் உதவி பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறேன். மருத்துவக் கல்லூரியில் யு.ஜி பிரிவில் 500 மாணவர்களும் பி.ஜி பிரிவில் 140 மாணவர்களும் பயின்று வருகிறார்கள். மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும், பிஜி மாணவர்களுக்கும் காலையில் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளை நேரடியாக மருத்துவம் பார்த்துவிட்டு மதியம் 2 மணிக்கு மேல் வகுப்புகளுக்கு செல்வார்கள். பயிற்சி பெற்ற இறுதி ஆண்டு மாணவர்கள் சிகிச்சை அளிப்பது மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளிக்க உதவுவதுடன், மாணவர்களுக்கும் நல்ல அனுபவமாக அமைகிறது.’’

கீதா (பொதுநலப்பிரிவு)

‘‘மருத்துவமனைக்கு வருகிற பல்நோயாளிகளுக்கு பல் நோயானது வேறு ஏதாவது நோயின் அறிகுறியாக இருந்தால் அதனைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோம். குறிப்பாக, பல் பாதிப்பு உள்ளவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் இருந்தால் அது பல்லில் அறிகுறியாக தெரியும். அதை பரிசோதித்து சிகிச்சை அளிக்கிறோம். அதை சரி செய்துவிட்டு பின்பு பல் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுப்பி வைக்கிறோம்.’’

வாய் நோய் அறிதல் மற்றும் ஊடுகதிர் துறை, முரளி கோபிகா மனோகர்

‘‘முதலில் புற நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்ததும் அவர்களுக்கு புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ரசீது வழங்கப்படும். அங்கிருந்து அவர்கள் வாய் நோய் அறிதல் ஊடுகதிர் பிரிவுக்கு செல்வார்கள். அங்கு அனுபவம் வாய்ந்த தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்து அவர்களுக்கு உள்ள குறைபாடுகளை எடுத்துரைத்து அந்த நோயாளிகள் எந்த பிரிவுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். இந்த வாய் நோய் அறிதல் பிரிவில் நவீன ஊடுகதிர் உபகரணங்களும். Digital X- ray CBCT Scan-ளால் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.’’

மருத்துவர் பிரேம்குமார் தர். (பல் சீரமைப்பு துறை)

‘‘பல் மருத்துவத்தில் பல் சீரமைப்பு துறை என்பது அழகியல் துறையாகும். நமது முகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் தாடை அமைப்பும், அதில் உள்ள பற்களும் ரொம்ப முக்கியம். இத்துறையில் பாதிப்பிற்குள்ளான பற்கள் சரி செய்யப்படுவதோடு, தாடைப் பகுதியும் எந்தவித அறுவை சிகிச்சையும் செய்யப்படாமல் சீரமைக்கப்படுகிறது. ஒரே சமயத்தில், தாடை மற்றும் பற்களில் பிரச்னை என்றால் கிளிப் போட்டும் அறுவை சிகிச்சை செய்தும் சரி செய்வோம். இங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், உணவு, தங்குமிடம் என அனைத்தும் கட்டணம் பெறப்படாமல் இலவசமாகவே செய்து தரப்படுகின்றன. சில பிரிவுகளில் மட்டும் அரசாங்கம் நிர்ணயித்த குறைந்த தொகை பொதுமக்களிடம் இருந்து கட்டணமாகப் பெறப்படுகிறது.

சில குழந்தைகள் பிறக்கும்போதே உதடு, வாய் மற்றும் மேல் அண்ணம்(வாயின் மேற்பகுதி) போன்ற இடங்களில் துளைகள், பிளவுகள் காணப்படும். இப்பாதிப்பு உடைய குழந்தைகள், தாயிடம் பால் குடிக்க மிகவும் சிரமப்படுவார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இக்குறைபாட்டை சரி செய்து வருகிறோம். இங்கு சிகிச்சை பெற வருகிறவர்கள் OP டிக்கெட் வாங்கி வந்தால் போதுமானது.

அடையாள அட்டை, முகவரி சான்றிதழ் என எதுவும் தேவையில்லை. தமிழகம் மட்டுமில்லாமல், ஆந்திரா, கேரளா என எங்கிருந்து வந்தாலும் தேவையான சிகிச்சைகளை இலவசமாக செய்து தருகிறோம். பல் மற்றும் தாடை சீரமைப்பு என்பது ஓரிரு நாளில் குணப்படுத்தக் கூடியது இல்லை. இரண்டு, மூன்று வருடங்கள்கூட சிகிச்சைக்குத் தேவைப்படும். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் பொறுமையாக இருப்பது அவசியம். முக்கியமாக, சிகிச்சைகளை இடையிலேயே நிறுத்தி
விடாமல் தொடர வேண்டும்.’’

மருத்துவர் ரமா பிரபா (பல் பாதுகாப்பு துறை)

‘‘பல் பாதுகாப்பு துறையில், சுமார் 20 வருடங்களாக பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. இந்த மருத்துவமனையில் 16 வருடங்களாக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நான் பணியில் சேர்ந்தபோது, ஒரு சில தனியார் பல் மருத்துவமனைகள் பிரபலமாக இருந்தன. பொதுமக்களிடம், சிகிச்சைக்காக, அந்த மருத்துவமனைகளை நாடிச் செல்வதுதான் வழக்கமாக இருந்தது. அங்கு கிடைக்கிற சிகிச்சைகளைவிட, இந்த மருத்துவமனையில் தரமான சிகிச்சைகள் செய்யப்படுவதால், மெல்லமெல்ல பொதுமக்கள் எங்களை நாடி வர ஆரம்பித்தனர்.

இங்கு வருபவர்களை நாங்கள் நல்ல முறையில் பார்த்துக்கொள்வதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. எங்களுடைய துறைக்குப் பல் சொத்தை போன்ற பிரச்னைகளுக்குத்தான் நிறைய நோயாளிகள் வந்து செல்கின்றனர். பற்களில் பிரச்னை பெரிதாவதற்கு முன்னரே, இங்கு வந்துவிட்டால், ஒரு நாளிலேயே குணப்படுத்திவிட முடியும். பிரச்னை அதிகமான பிறகு வந்தால், வேர் சிகிச்சை செய்வதற்கு அதிக நேரமும், முயற்சியும் தேவைப்படும்.

புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, நள்ளிரவு ஒரு மணி வரைகூட இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் வேலை பார்க்கின்றனர். மிகப்பெரிய விபத்தில் பற்கள் தெறித்து விழுந்துவிட்டாலும், பாலில் அல்லது தண்ணீரில் போட்டு, கொண்டு வந்துவிட்டால், பத்திரமாகப் பொருத்த முடியும்.’’

மருத்துவர் பொன்னையா (வாய் நோய் இயல் துறை)

‘‘சமீபகாலமாக வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சைக்காக வருகின்றனர். இதற்கு முன்னர் ஏற்படுகிற நோய் Precancerous Lesion என குறிப்பிடப்படுகிறது. பான், மாவா, வெற்றிலை, பாக்கு போன்ற புகையிலைப் பொருட்களை ஏராளமாக உபயோகிப்பதால், இந்நோய் பெருமளவில் ஏற்படுகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போதுதான் புற்றுநோயாக மாறுகிறது. புற்றுநோய் வந்துவிட்டால், மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். இதனைத் தடுப்பதுதான் வாய் நோய் இயல் துறை மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவால். 25 வயதுக்கு உட்பட்டவர்கள் Pre Cancer Lesion-நோயாலும் 30, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் புற்றுநோயாலும் பாதிக்கப் படுகின்றனர்.’’

ராகவ நாயர் லீலா,செவிலியர்

‘‘கடந்த 31 வருடங்களாக நர்ஸாக பணியாற்றி வருகிறேன். நர்ஸாக பணியாற்ற வேண்டும் என அப்பா ராகவ நாயர் ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறைவேற்றத்தான் நர்ஸ் பணிக்கு வந்தேன். இந்தப் பணிக்கு வந்த பிறகுதான், தியாக மனப்பான்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் நிறைய தேவை என்பதை உணர்ந்தேன். முக்கியமாக தாயாகவும், சகோதரியாகவும் நோயாளிகளுடன் பழக வேண்டும்.

ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத அனுபவம்தான். கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பணியாற்றியபோது, பச்சிளம் குழந்தைக்குப் பால் புகட்டி கொண்டு இருந்தபோது, குழந்தையின் மூக்கில் எதிர்பாராதவிதமாக பால் சென்றுவிட்டது. திருமணமாகி, 10 வருடத்துக்குப்பின் தாய் ஆனவர் அந்தப் பெண் என்பதால் மிகுந்த பதற்றமாகி விட்டார். உணர்வுப்பூர்வமாகவும் இக்கட்டான அந்த சூழலில் குழந்தையைத் தலைகீழாக தொங்கவிட்டு, முதுகில் தட்டிக் கொடுத்து, வாயால் உறிஞ்சி பாலை வெளியே எடுத்தோம். பின்னர் பச்சிளம் குழந்தை மருத்துவரிடம் கொண்டு போய் அக்குழந்தையைக் காப்பாற்றினோம்.’’         
         
மருத்துவர் அஸ்வந்த் நாராயணன் (சமுதாய பல் பாதுகாப்பு துறை)

‘‘பொதுமக்களுக்கு இந்தத் துறையில் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. முக்கியமாக புகையிலை, பீடி, சிகரெட் போன்ற போதை வஸ்துகளால் ஏற்படும் ஆபத்தை பற்றி விளக்கி, அதிலிருந்து விடுபடும் உத்திகள் கற்பிக்கப்படுகிறது. வாய்ப் புற்றுநோய்களின் தாக்கத்தையும் அதன் விளைவுகளையும் நோயாளிகளுக்கு எடுத்துரைக்கிறார்கள். வாரம் இருமுறை நடமாடும் பல் ஊர்தி மூலம் பள்ளிகளுக்கு சென்று முகாம்கள் நடத்தி பல் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாரம் செவ்வாய், வியாழக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடக்கும்.’’

மருத்துவர் சுகந்தி (குழந்தைகள் பல் சிகிச்சை பிரிவு)

‘‘இந்த பிரிவில் குழந்தைகளுக்குவரும் அனைத்து வகையான பல் நோய்களும் நல்ல அறுவை சிகிச்சை முறையில் தீர்த்துவைக்கப்படுகிறது. 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மனரீதியாக தைரியம் வரும் வகையில் அவர்களுக்கு செய்முறை விளக்கம் தந்து பின்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கென இருக்கிற பல் பிரச்னைகள் அனைத்துக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.’’

மருத்துவர் சபரிகிரிநாதன் (செயற்கை பல் பொருத்துதல் பிரிவு)

‘‘முக தாடை செயற்கை பல் பொறுத்தும் பிரிவில், பல் இல்லாதவர்களுக்கு செயற்கை பல் பொருத்துபவர்கள் என்பது பலர் அறிந்த ஒன்று. அதுமட்டுமின்றி பிறவி குறைபாட்டாலோ, விபத்தாலோ, புற்றுநோயாலோ கண், காது, உதடு, மூக்கு, அன்னம், விரல்கள் போன்ற பாகங்கள் பழுதுபட்டால் அதையும் செயற்கை முறையில் அமைத்து அந்த நோயாளிகளுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. இத்துறையில் உள்ள M7P என்னும் Maxino forial presthesis முறையில் அமைக்கப்பட்ட செயற்கை உறுப்பு பொறுத்தும் சிகிச்சை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம் என்று கூட சொல்லலாம்.’’

பர்ஷானா (மருத்துவமனை தூய்மை பணியாளர் பொறுப்பு)
‘‘இந்த மருத்துவமனையில் கான்ட்ராக்ட் மூலம் சுமார் 22 பணியாளர்கள் இந்த மருத்துவமனையில் சுற்றுப்புறம் சுத்தம் செய்தல், கழிவறை, உள்நோயாளிகள் வார்டு சுத்தம் செய்தல், ஓ.பி கவுன்டர் பணி என ஒரு ஷிஃப்ட் முறையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதம் ஊதியம் 7400 ரூபாய் ஆகும். மருத்துவமனை எப்போது, யார் வந்து பார்த்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக உழைக்கிறோம்.’’

புறநோயாளி கமலா

‘‘எனக்கு 70 வயதாகிவிட்டது. நான் திருவள்ளூரில் இருந்து வருகிறேன். கடந்த 8 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என் பல் பிரச்னைகளுக்கான அனைத்து சிகிச்சைகளும் இங்குதான் காசு செலவு இல்லாமல் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது எனக்கு பல் செட் சிரமமாக இருப்பதால் எனக்கு நவீன சிகிச்சை மூலம் பற்களை தனியாக கட்டவிருக்கிறார்கள். நான் அந்த சிகிச்சைக்காக காத்திருக்கிறேன்.’’

புறநோயாளி விமல்

‘‘எனக்கு எத்துப்பல்லாக இருக்கிறது. இதனால் என்னை பள்ளியில் என்னை எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள். எங்க அம்மாதான் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். இங்கு என்னுடைய பல்லுக்கு கிளிப் மாட்டி இருக்கிறார்கள். எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் பல் வரிசையாக மாறிவிடும் என டாக்டர் சொல்லியிருக்கிறார்.’’

- விஜயகுமார், க.இளஞ்சேரன்

படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்