குழந்தைகளுக்கும் வரலாம் முதுகு வலி



எலும்பே நலம்தானா?!

குழந்தைகளுக்கு வரும் முதுகு வலி என்பது பெரியவர்களுக்கு வரும் வலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. குழந்தைகளின் முதுகு வலியின் பின்னணியில் உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கலாம். அதிலும் 4 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு முதுகு வலி வந்தால் அதிக கவனம் அவசியம்.

முதுகு வலியுடன் கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள். காய்ச்சல் மற்றும் எடை குறைவது, சோர்வு, மரத்துப் போகிற உணர்வு, வலியானது ஒரு காலிலோ அல்லது இரண்டு காலிலோ பரவுவது, சிறுநீரகம் சம்பந்தபட்ட கோளாறுகள், தூக்கமின்மை.

குழந்தைகளின் முதுகுவலியை உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வேறு விளைவுகளை உண்டாக்கிவிடும் அபாயம் உண்டு. எனவே, உங்கள் குழந்தைக்கு 3 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தாலோ அல்லது வலி அதிகமானாலோ உடனே மருத்துவரைப் பாருங்கள்.

*மருத்துவப் பரிசோதனையின் போது மருத்துவர் இவற்றை எல்லாம் சோதிப்பார்.

முதுகெலும்பு

இதன் இணைப்புகள் ஒவ்வொன்றையும் பரிசோதிப்பார். முதுகெலும்பின் அமைப்பில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என்றும், முதுகெலும்பை அசைப்பதில் கஷ்டம் உள்ளதா என்றும் பார்ப்பார். குழந்தையின் நடையையும் பார்ப்பார். குழந்தையால் இட, வலமாக திரும்ப முடிகிறதா, முன்னோக்கி வளைந்து கால் கட்டை விரலைத் தொட முடிகிறதா, உடலைப் பின்னோக்கி வளைக்க முடிகிறதா என்றெல்லாம் பார்ப்பார்.

முதுகெலும்பின் நரம்புகள்

Intervertebral disc எனப்படும் தண்டுவட முள்ளெலும்பு வட்டு, முதுகு பகுதியில் உள்ள நரம்புகளின் மேல் அழுத்தம் சேர்க்கலாம். இதைத் தெரிந்துகொள்ள குழந்தையைப் படுக்க வைத்து கால்களைத் தூக்க வைத்து மருத்துவர்
சோதனைகள் செய்வார்.

தசைகள்

முதுகு மற்றும் கால் தசைகளையும் சோதிப்பார். தசைகள் தளர்வாக இருந்தால் தசைகளில் காயம் ஏற்பட்டிருக்கலாம். அதுவே இறுக்கமாக இருந்தால் வலியை ஏற்படுத்தும் பொசிஷன்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள குழந்தை அப்படிச் செய்கிறது என்று புரிந்து
கொள்ளலாம்.

காரணங்கள்

குழந்தை விளையாடும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் அடிபட்டதன் காரணமாகவும் முதுகு வலி வரலாம். பெரும்பாலான குழந்தைகள் தசைகளில் ஏற்படும் வலியையே முதுகு வலியாக உணர்கிறார்கள். போதுமான அளவு ஓய்வெடுப்பதன் மூலமே இந்த வலி சரியாகிவிடும். அரிதாக சில சமயங்களில் Osteoid osteoma என்கிற கட்டியின் காரணமாகவும் குழந்தைகளுக்கு முதுகில் வலி வரலாம்.

இந்தக் கட்டியானது நடு முதுகு அல்லது அடி முதுகில் தான் வரும். வலி ஒரே மாதிரியாக இருந்துவிட்டு நாளாக ஆக அதிகரிக்கும். இதற்கு தாமதமில்லாத மருத்துவ சிகிச்சை அவசியம்.முதுகு பகுதியில் ஏதேனும் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டிருந்தாலும் வலி வரலாம். முதுகுப் பகுதியில் வீக்கம், சிவந்து போவது போன்றவையும் இருந்தால் இன்ஃபெக்‌ஷனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும். அது உறுதி செய்யப்பட்டால் ஆன்டி பாக்டீரியா அல்லது ஆன்டி வைரல் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

பெற்றோர் கவனத்திற்கு...

*உங்கள் குழந்தை திடீரென்று விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறதா? மிகத் தீவிரமாக விளையாடுகிறதா? கீழே விழுந்து அடிபட்டதா? என்ன நடந்திருக்கலாம் என்பதை யூகித்துக் கொள்ள முடியும். தசைநார் பிசகியிருக்கலாம். தசை இழுப்பு ஏற்பட்டிருக்கலாம். சிராய்ப்புக் காயம் உண்டாகியிருக்கலாம். எனவே, ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வைக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணி கொடுக்கலாம்.

*உங்கள் குழந்தை உயரமான இடத்திலிருந்து விழுந்துவிட்டதா? முதுகெலும்பிலோ, தலையிலோ அடிபட்டிருக்கலாம். ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.

*கீழே விழுந்ததற்குப் பிறகு உங்கள் குழந்தைக்கு நடமாடுவதில் சிக்கல் இருக்கிறதா? மரத்துப் போன மாதிரி உணர்வதாகச் சொல்கிறதா? சிறுநீர் அல்லது மலத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்கிறதா... முதுகெலும்பில் பலமாக அடிபட்டிருக்கலாம். குழந்தையை, குழந்தைகள் நல மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

*குழந்தை தன் முதுகில் ஒரு பக்கத்தில் மட்டும் கடுமையான வலி இருப்பதாகச் சொல்கிறதா? காய்ச்சலடிக்கிறதா? சிறுநீர் கழிக்கும்போது வலிப்பதாகச் சொல்கிறதா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

*உடல்ரீதியாக எந்த வேலையைச் செய்தாலும் உங்கள் குழந்தை உடனே முதுகு வலிப்பதாகச் சொல்கிறதா? Spondylosis என்கிற பிரச்னையாக இருக்கலாம். இதில் அடி முதுகைச் சேர்ந்த எலும்பு பாலங்கள் பலவீனமாகியிருக்கும். மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். அவர் குழந்தையைப் பரிசோதித்து எக்ஸ் ரே எடுக்கச் சொல்வார். எக்ஸ் ரே முடிவை வைத்து தேவைப்பட்டால் எலும்பு மருத்துவரைப் பார்க்கப்
பரிந்துரைப்பார்.

*பாதி தூக்கத்தில் முதுகு வலி காரணமாக குழந்தை விழித்துக் கொள்கிறதா? என்ன பிரச்னையாக இருக்கக்கூடும்? முதுகெலும்பு வட்டில் ஏற்படும் அழற்சியான டிஸ்கைட்டிஸ் பிரச்னையாக இருக்கலாம். இன்ஃபெக்‌ஷனாக இருக்கலாம். கட்டி ஏற்பட்டிருக்கலாம். மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். அவர் குழந்தையைப் பரிசோதித்து எக்ஸ் ரே எடுக்கச் சொல்வார். எக்ஸ் ரே முடிவை வைத்து தேவைப்பட்டால் எலும்பு மருத்துவரைப் பார்க்கப் பரிந்துரைப்பார்.

(விசாரிப்போம்!)

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி