உடல்நலம் காக்கும் உபகரணங்கள்தொழில்நுட்பம்

நவீன வாழ்க்கையில் நம் எல்லோருக்குமே உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்முறை சார்ந்த கடமைகளில் எப்போதும் பிஸியாக இருக்கும் நமக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தும் வாழ்வியல் முறைகளை சரிவர பின்பற்றவும் முடிவதில்லை. அதோடு, தொற்றுநோய் பரவுதல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற புறக்காரணிகளும் சேர்ந்து கொள்கின்றன.

இவற்றையெல்லாம் புரிந்து கொண்ட மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்கள் எப்போதும் மொபைலோடு இருக்கும் நமக்கு அதனோடு இணைத்து பயன்படுத்தக்கூடிய, உடல்நலத்தை பேணும் வகையில் எளிதான கேட்ஜெட்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் மார்க்கெட்டில் புதுசாக வந்திருக்கும் தனிப்பட்ட மற்றும் புதுமையான கேட்ஜெட்டுகளைப்பற்றி பார்ப்போம்.

Goji Play

உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் கார்டியோ உபகரணங்களை ஒரு விளையாட்டு இயந்திரமாக மாற்றி விளையாடுவதன் மூலம், 30 நிமிடங்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சியை உணரலாம். வயர்லெஸ் கேம் கன்ட்ரோலர்களை, ட்ரெட் மில், கேம் பைக்குகள், ஸ்டாட்டிக் சைக்கிள் என எந்தவகையான கார்டியோ உபகரணங்களோடும் இணைத்து பயன்படுத்தலாம். இந்த சென்சார்கள் விளையாட்டுகளில் இயக்கத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் நம்முடைய உடற்பயிற்சி குறிக்கோளையும் முன்னேற்றுகிறது.

SITU Food Scale

SITU என்பது, நாம் சாப்பிடும் உணவின் கலோரி அளவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கிராம்களாகவும், அவுன்ஸ்களாகவும் எடையிட்டு, நம்முடைய ஐபேடிற்கு தகவலை அனுப்பும் ஓர் உணவு அளவுகோல். இதன் மூலம் சாப்பிடுவதற்கு முன்பே நம் முன் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவு ஊட்டச்சத்து மிகுந்ததா? அதை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

Dreampad

உறங்கும்போது நீங்கள் மட்டுமே கேட்கக்கூடிய மெல்லிய இசையை, மென்மையான அதிர்வுகளாக வழங்குகிறது. உங்கள் உடலின் தளர்வு பிரதி
பலிப்பைத் தூண்டுவதால், தூக்கமின்மைக்கு காரணமான மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, விரைவான தூக்கத்தைப் பெறலாம். இதனால் பகல் நேரத்தில் மிகுந்த சுறுசுறுப்புடன் செயலாற்ற முடியும்.

Gym Watch Sensor

உடலின் ஒவ்வொரு பகுதியிலும் செலவழிக்கப்படும் இயக்கம் மற்றும் வலிமையின் முழு அளவையும் துல்லியமாக அளவிடுவது மட்டும் இதன் வேலையில்லை. பயனர்கள் பயிற்சிகளை ஒழுங்காக செய்வதற்கும், தாங்கள் செய்யும் உடற்பயிற்சிகளிலிருந்து அதிகபட்ச பயன்களை பெறுவதற்குமான தனிப்பட்ட பயிற்சிகளை வழங்குகிறது. IOS மற்றும் Android இரண்டு மொபைல்களிலும், ஒரு இலவச மொபைல் பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இதன்மூலம் 900-க்கும் அதிகமான பயிற்சிகளைத் தேர்வு செய்யவும், வழக்கமாக செய்யும் பயிற்சியின் நேரடியான விளைவை அறியவும் முடியும்.

Boogio Sensor sticker

மொபைல் மற்றும் Virtual Reality விளையாட்டுகளில் பயன்படுத்தக்கூடிய ஷூக்களில் புலனுணர்வு ஸ்டிக்கர்கள் அல்லது மைக்ரோ வடிவ கம்ப்யூட்டர்களின் தொகுப்புதான் Boogio. நாம் விளையாடும்போது, நடக்கும்போது அல்லது ஓடும்போது தரையின்மீது செயல்படும் நம் கால் தடங்களின் இயக்கங்களை இந்த ஸ்டிக்கர்கள் பதிவு செய்வதன் மூலம் நம் செயல்திறனையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் கைகளில் கூடுதலாக மொபைல் போனையோ, காட்ஜெட்களையோ வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஷூக்களில் பொருத்திக் கொண்டாலே போதுமானது. நம் உடலின் புவிஈர்ப்பு விசை, சமநிலை மையம் மற்றும் பாதங்களின் முப்பரிமாண வேகத்தை Boogio துல்லியமாக கணித்துவிடுகிறது.

USB Heating Pad

ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தக்கூடிய ஜெல் ஹீட்டிங் பேட் ஆகும். உடலில் வலி உள்ள இடங்களில் நேரடியாக பயன்படுத்தி சூடு ஒத்தடம் கொடுக்கலாம். இந்த குறைந்த மின்னழுத்த உபகரணம், நச்சு இல்லாத, எரிச்சலை ஏற்படுத்தாத ஜெல் தடவிய ஒரு காற்றோட்டமுள்ள ஃபைபர் துணியால் இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும், 108 டிகிரியிலிருந்து 118 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலான வெப்பத்தைத் தாங்கக்கூடிய டெதர் கன்ட்ரோலர் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சாதனம், 30 நிமிடங்கள் முடிந்தவுடன் தானாகவே நின்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிகப்படியான சிகிச்சையைத் தடுக்கிறது. மெல்லிய, நெகிழ்வான இந்த Pad-ஐ வலி உள்ள கீழ் முதுகு, தோள்பட்டை, அடிவயிறு, மணிக்கட்டு என எல்லா இடங்களிலும் 50 முதல் 100 தடவைகள் வரை பயன்படுத்தலாம்.  

Cefaly

Cefaly என்பது Migraine எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதை குறைக்க உதவும் ஒரு FDA அங்கீகாரம் பெற்ற மருத்துவ சாதனமாகும். இருந்தபோதும், Federal Law committee மருத்துவர்களின் Cefaly உபயோகத்தை அங்கீகரிக்கவில்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்களும், வயதானவர்களும் உபயோகிக்க எந்த கட்டுப்பாடும் இல்லை. பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றிய நோயாளிகளிடையே 77 சதவிகிதம் ஒற்றைத்தலைவலி குறைந்துள்ளதும், இவர்களின் மருந்து பயன்பாடு 75 சதவிகிதம் வரை குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டது.

Violet Wearable Device

சூரிய ஒளியே படாமல் ஏசி அறைகளில் இருப்பவர்களுக்கு D வைட்டமின் குறைபாடும், வெயிலில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு அதிகப்படியான UV கதிரின் தாக்கத்தால், சருமநோய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கும். அதற்கான தீர்வாக வந்துள்ள வயலட் சூரிய ஒளியின் வெளிப்பாட்டை அனுகூலமான வகையில் பயன்படுத்தும் வழி காட்டலை வழங்கும் முதல் அணியக்கூடிய சாதனம் ஆகும்.

மொபைல் போன் அப்ளிகேஷனோடு ஒத்திசைவு கொண்டுள்ள Violet சாதனம், உங்கள் உடலில் சூரிய ஒளி வெளிப்பாட்டை கண்காணிக்கிறது. தோல் சேதமடைவதற்கு முன்னால் அதிகப்படியான UV கதிர் வெளிப்பாட்டை எச்சரிக்கிறது, உங்களின் தினசரி D வைட்டமின் உற்பத்தியை கணக்கிட்டுச் சொல்கிறது.

Quell wearable pain relief device

கீழ் முதுகு வலி, முழங்கால் வலி போன்ற வலிகளுக்கும் முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பு வலிகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், உடலில் துளையிடப்படாத, ஊடுருவும் நரம்பு தூண்டுதல் தொழில்நுட்பத்தை Quell பயன்படுத்துகிறது. எடை குறைவான, எளிதாக அணியக்கூடிய வகையில் இருப்பதால், பகலில் வேலை செய்யும்போதும்,  இரவு தூங்கும்போதும் உபயோகப்படுத்தலாம்.

நாள்பட்ட வலிகளின் சிகிச்சைக்காக Quell-ஐ மருத்துவரின் பரிந்துரை இல்லாமலும் பயன்படுத்தும் உரிமத்தை FDA வழங்கியுள்ளது. பயனாளிகள் தங்களது ஸ்மார்ட்போன் மூலம் தானாகவே கண்காணிக்கவும், தங்களின் தனிப்பட்ட வலி சிகிச்சைக்காகவும் உபயோகிக்கலாம்.

Sleep Companion LED Light

இயற்கையான தூக்கத்தை மேம்படுத்துவதற்காக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட LED விளக்கு இது. ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை, உடலின் உயிரியல் தாளத்தின் ஒத்திசைவுடன் இணையும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த Sleep companion, ஒருவரின் தூக்க தரத்தை பகுப்பாய்வு செய்து, அவரின் தூக்கத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறது. இந்த அப்ளிகேஷன், தூக்க நேரம், தூக்கத்தின் தரம் மற்றும் தூக்க சூழலை பகுப்பாய்வு செய்வதோடு, தூக்கத்திற்கு தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.

NordicTrack Desk Treadmill

NordicTrack டெஸ்க் ட்ரெட்மில், பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்பவர்கள் இருவருமே தங்கள் வேலைகளை, எளிதாக உடல் இயக்கத்தோடு இணைத்துக்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். அகலமான மேஜையில், லேப்டாப் மற்றும் உங்களுடைய ஃபைல்களை வைத்துக் கொண்டு வேலைகளை செய்யும் அதே நேரத்தில், கீழே ட்ரெட்மில்லில் வேக அளவுகளை நிர்ணயித்து நடக்கவோ அல்லது ஓடவோ  செய்யலாம். தேவைக்கேற்றவாறு உயரத்தை சரி செய்து கொள்ளவும், முடிந்தவுடன் மடித்து வைத்துக் கொள்ளவும் எளிதானது.

GoBe wearable

GoBe-ன் Healbe Flow தொழில்நுட்பம், தோல் மூலம் உடல் செல்களில் இருக்கும் குளுக்கோசை கண்காணித்து, கலோரி உட்கொள்ளலை அளவிடுகிறது. இது உங்கள் செயல்பாடு, கலோரிகள் எரிப்பு, மன அழுத்தம், உடலின் நீரேற்றம் மற்றும் தூக்க பழக்கங்களையும் கண்காணிக்கிறது.

 தொகுப்பு: உஷா நாராயணன்