கொஞ்சம் காதை கொடுங்க...



அறிவோம்

* வெளியிலிருந்து வரும் ஒலிகள் காது குழாயின் வழியாக நடு மற்றும் உள்செவியை அடைந்து, பிறகு நரம்பு மூலம் மூளைக்கு அனுப்பப்படுகிறது. மூளை, அந்த ஒலியை இனம் கண்டு உணர்த்துவதால் அது ஒரு பறவையின் ஒலியா அல்லது இயந்திரத்திலிருந்து வருகிறதா என்று நாம் அறிகிறோம்.

* காதைப் பரிசோதிக்க காதின் வெளிப்பகுதியை முதலில் கவனிக்க வேண்டும். அதில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* குழந்தைகளின் அழுகைக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் காதுத் தொற்றும் முக்கியமானது. காதைத் தேய்த்துக்கொண்டு ஒரு குழந்தை அழுவதாக உணர்ந்தால் காதுத்தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அணுகுவதும் அவசியம்.

* உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் காதுமடல்களுக்குப் பின்னாலுள்ள தோல் சிவந்திருந்தால், அது எலும்பில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கும் என்றும் கூறுகிறார்கள் நிபுணர்கள். இதேபோல், காதின் உட்பக்கத்தைப் பார்க்க காதை உங்கள் விரல்களால் மெதுவாக இழுத்துப் பாருங்கள். இது மேலும் அதிகமான வலியை ஏற்படுத்தினால் காதுக்குழாயில் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

* காதுக்குள்ளிருக்கும் பகுதியை ஆய்வு செய்ய சிறிய டார்ச் விளக்கு உதவியுடன் காதின் உட்பகுதி சிவந்திருக்கிறதா அல்லது சீழ் பிடித்து இருக்கிறதா என்று கவனியுங்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் குச்சி, கம்பி அல்லது வேறு கடினமான பொருட்களைச் செலுத்தாதீர்கள்.

* காதில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தாமதிக்காமல் விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

* காதில் சீழ் பிடித்திருக்கும் பட்சத்தில் பஞ்சு கொண்டு அகற்றலாம். அதற்காக, பஞ்சைக் காதினுள் வைத்து அடைக்க வேண்டாம். இது தவறான அணுகுமுறை.

* காதில் குரும்பி இருப்பதுதான் பலருக்கும் காது குடைவதற்கான காரணமாக இருக்கிறது. ஒருவேளை குரும்பி மிகவும் அதிகமாக ஏற்படுவதாக நினைத்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்.

* காதுக் குரும்பி என்பது காதில் இயல்பான சுரப்பு. அது தொற்றிலிருந்து காப்பாற்றும் பணியைச் செய்கிறது. அது வழக்கமாக அலர்ந்து, உதிர்ந்து காதிற்கு வெளியே வந்துவிழுகிறது. பஞ்சு, குச்சி கொண்டு அதனை சுத்தப்படுத்த முயலும்போது, காதுக்குரும்பி உள்ளே தள்ளப்பட்டு, காதுக் குழாயை அடைத்துவிடுகிறது. இதனால் கேட்கும் திறன் பாதிக்கப்படும். அரிப்பு, வலி, காதுக்குழாய்த் தொற்றும் ஏற்படக்கூடும்.

* சிறு குழந்தைகளுக்குக் காதுத் தொற்றுகள் ஏற்படுவது சாதாரணம். எனவே, அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்காக அலட்சியமாகவும் இருக்காதீர்கள். சளி, மூக்கடைப்பு ஏற்பட்ட பின்னர் பெரும்பாலான குழந்தைகள் காதுத்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

* இது வினோதமான ஒரு மருத்துவ உண்மை. சில குழந்தைகளுக்கு காதிலிருக்கும் தொற்று, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். ஆகையால், ஒரு குழந்தைக்கு வயிற்றுப்போக்கும் காய்ச்சலும் ஏற்பட்டால் காதுகளை சோதித்துப் பார்க்கவும்.

* எந்தவொரு காயமோ தொற்றோ காதுக்குழாயில் ஏற்படுமானால் காது கேட்கும் திறன் குறையக்கூடும் அல்லது முழுவதுமாகக் காது கேளாமல் ஆகிவிடக்கூடும்.

* Eustachian tube மூலம் காதானது தொண்டையுடனும் மூக்குடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, தொண்டையிலும், மூக்கிலும் தொற்று ஏற்பட்டால் Eustachian tube மூலம் அது காதுக்கும் பரவும் வாய்ப்பு உண்டு.

* மூளைக்கு அருகிலேயே காதும் அமைந்துள்ளது. காதில் ஏற்படும் தொற்றுகளுக்குச் சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால் மூளைக்கும் பரவலாம்.

* காதை சுத்தப்படுத்த கூர்மையான அல்லது முனையுடன் உள்ள பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். காய்ச்சல், காதின் பின்புறம் வலி மிகுந்த கணுக்கள் அல்லது சீழ் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.

* நடுச்செவித் தொற்று பாக்டீரியாவினால் உண்டாகக் கூடியது. இந்த நிலை சிறு குழந்தைகளிடம் சளி மற்றும் மூக்கடைப்பு வந்த சில
நாட்களுக்குப் பின்பு வரலாம்.

* காதிலிருந்து சீழ் வடியும் குழந்தைகள் காதுகள் சரியான பின்பு இரண்டு வாரங்கள் வரையும் நீச்சலடிக்கவோ அல்லது நீருக்குள் குதிக்கவோ கூடாது.

* குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்காதீர்கள் அல்லது அவ்வாறு கொடுக்க வேண்டியிருந்தால் குழந்தையை மல்லாந்து படுக்க வைத்துப் பால் ஊட்டக்கூடாது. மூக்கின் வழியாகப் பால் சென்று காது நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

* குழந்தைகள் விளையாடும்போது ஏதாவது தானியத்தையோ அல்லது வேறு ஏதாவது பொருட்களையோ  காதினுள் போட்டு விடலாம். சில நேரங்களில், சில பூச்சிகள்கூட காதிற்குள் சென்றுவிடுகின்றன. இந்த மாதிரியான சூழலில் காதிலிருந்து வெளியே எடுப்பதற்கு முன்பு அந்தப் பூச்சி கொல்லப்பட வேண்டும். பீச்சுக்குழாய் மூலம் சுத்தமான வெதுவெதுப்பான நீரைக் காதில் பீச்சி இறந்த பூச்சியை வெளியே கொண்டு வர வேண்டும்.

* தானியம் அல்லது வேறு பொருள் உள்ளே இருந்தால் பிறச்செவியை வெளியேயும், மேலேயும் இழுத்து, காதுக் குழலை நேராக்கி குழந்தையின் தலையைக் குலுக்க வேண்டும். வெளியே கொண்டுவர முடியவில்லையெனில், மருத்துவர் உதவியை நாடவும்.

* எந்த சூழலிலும் கூர்மையான பொருளை உள்செலுத்தி அதை அகற்ற முயலாதீர்கள். அப்படிச் செய்தால் செவிப்பறைக்கு ஊறு நேர்ந்து, மேலும் தீங்கு விளையலாம்.

* செவிட்டுத் தன்மை என்பது ஓர் அறிகுறியே தவிர நோய் அல்ல. காது கேட்பது குறைந்து வருகிறது அல்லது காது கேட்கவில்லை என்று ஒருவர் முறையிடலாம். இது கடினப்பட்ட குரும்பியினாலோ, காதுக்குழாய் பாதிக்கப்பட்ட நோயினாலோ அல்லது மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏதாவது பிரச்னையினாலோ இருக்கலாம். அதிகப்படியான மருந்து உபயோகம் செவிட்டுத்தன்மைக்கு வழி வகுக்கும்.

 தொகுப்பு: க.இளஞ்சேரன்