ஃப்ரெண்ட்ஷிப்லயே இதுதான் பெஸ்ட் !Centre Spread Special

‘நட்பு என்ற உறவே மிகவும் சிறந்தது’ என்பதை எல்லோருமே ஒப்புக் கொள்வார்கள். அந்த நட்பிலும் இன்னும் ஆழமான நட்பு ஒன்று இருக்கிறது என சுவாரஸ்யமான ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Development and psychopathology என்ற இதழ்.

ஆமாம்… அதுவேதான். கல்விக்காலத்தில் வகுப்பறையில் ஏற்படும் நட்பே மிகவும் உன்னதமானது. எந்த வித்தியாசமும், ஏற்றத்தாழ்வும் பாராமல் உருவாகும் நட்பு அது. சக மாணவர்களுக்குள் ஏற்படுவதாக இருந்தாலும் சரி அல்லது ஆசிரியர்களுடன் ஏற்படும் நட்பாக இருந்தாலும் சரி… அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வுக்காக சான்பிரான்சிஸ்கோ நகரைச் சுற்றியுள்ள 6 பொதுப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மழலையர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

‘கடுமையான முறைகளில் வளர்க்கப்படும் மழலையர்களுக்குக்கூட இத்தகைய நட்புறவு, தனித்தன்மை வாய்ந்த வாய்ப்புக்களை உருவாக்கி, அவர்களுடைய எதிர்மறையான சிந்தனைகளை மாற்றிக்கொள்வதற்கான சூழல்களையும் ஏற்படுத்தித் தருகிறது’ என குறிப்பிடுகிறது வகுப்பறையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் அந்த ஆய்வுக்கட்டுரை.

Development and psychopathology இதழின் முதன்மை ஆசிரியரான டேனியல் ரூபினவ் ‘சக மாணவர்களுடன் ஒத்துப்போகும் மனநிலையானது, சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறது. மேலும், வளர்ப்பு முறைகளினால் உண்டாகும் பாதிப்புக்களில் இருந்து உண்டாகும் தாக்குதலின் வேகத்தைக் குறைக்கும் கருவியாகவும், வகுப்பறை நட்பு செயல்படுகிறது’ என இந்த ஆய்வு குறித்து தெரிவித்திருக்கிறார்.
 

- வி.ஓவியா