டாக்டர்களுக்கு இத்தனை பிரச்னையா?!



அதிர்ச்சி

மருந்தாலும், மனதாலும் குணப்படுத்தி, நமக்கு மன உறுதியையும் கொடுக்கும் மருத்துவர்கள், இன்று கலங்கிப்போய் நிற்கிறார்கள். இள வயதிலேயே மாரடைப்பால் இறப்பவர்களாகவும், மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்பவர்களாகவும் மருத்துவர்கள் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. மருத்துவர்களின் இந்த நிலை, அவர்களுக்கான மருத்துவ கவனிப்பு தேவை அவசரமானது, அவசியமானது என்பதை உணர்த்துகிறது.

இந்திய உளவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, இந்தியாவில் 30 சதவீத டாக்டர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 17 சதவீதம் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மற்றொரு ஆய்வு, 21 சதவீத டாக்டர்கள் அதிக அளவிலான மது உட்கொள்கின்றனர்; 18 சதவீதத்தினர் மன அழுத்த நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள்; 14 சதவீதத்தினர் கடுமையான புகைபிடிப்பவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், Auditory Hallucination-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறது.

இந்தியாவில் 15 - 29 வயதினரின்  தற்கொலைகளில் மருத்துவ மாணவர்களின் தற்கொலை இரண்டாவது முக்கிய காரணியாக இருக்கிறது. குறிப்பாக, கட்டாய ஒரு வருட உறைவிடப் பயிற்சியில் இருக்கும் இளம் மருத்துவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதற்கான குறிப்பிடத்தக்க காரணம் கண்டறியப்படவில்லை. மருத்துவ மாணவர்கள் மத்தியில் இருக்கும் இந்த மனநல பாதிப்பு, அவர்களின் கல்வி செயல்திறனில் மோசமாகிறது.

மேலும், தொழில்ரீதியான உழைப்பு, மருத்துவர்-நோயாளி உறவை பராமரிக்க இயலாமை, ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான உறவுகளை பேணுவதில் தோல்வி, தற்கொலை எண்ணங்கள், மனச்சோர்வு, மதிப்பற்ற தன்மை மற்றும் குற்ற உணர்வுகள் போன்றவை இறுதியில் தற்கொலைக்குத் தூண்டுகிறது. மருத்துவ மாணவர்களின் இந்தப்போக்கு, நாளடைவில் நாட்டின் சுகாதார பாதுகாப்பில் மருத்துவர்களின் பங்களிப்பு, தோல்வியில் முடியும் என்றும் எச்சரிக்கிறார்கள் வல்லுனர்கள்.

இளம் மருத்துவர்களின் நிலையும் கவலைக்கிடமான நிலையில்தான் இருக்கிறது. இந்தியாவில், உலகிலேயே மிக உயர்ந்த எண்ணிக்கையில், எட்டுலட்சம் அலோபதி மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பை முடித்து, வெளி வருகிறார்கள்.

இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சீராக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும், மருத்துவர்கள் பற்றாக்குறையும்  நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைப்படி, 1000 நோயாளிகளுக்கு 1 மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டிலோ 1600 நோயாளிகளுக்கு ஒரே ஒரு அலோபதி மருத்துவர்தான் இருக்கிறார்.

சுகாதார அமைப்பின் வெற்றி, தோல்வியில் மருத்துவர்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்தாலும், அவர்களின் சொந்த மனநலம் பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்றால் இல்லை; அபாய கட்டத்தில் இருக்கிறது என்று சொல்லும்  இந்திய மருத்துவ சங்கம் இதை ‘பொது சுகாதார நெருக்கடி’ யாக கருதுகிறது.

மருத்துவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? நரம்பியல் நிபுணர் வினோத் கண்ணா, மருத்துவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் நம்மிடம் பகிர்கிறார்...‘‘ஆய்வில் கூறியிருப்பவை உண்மைதான். மருத்துவர்கள் மிகவும் பரபரப்பான வேலை அமைப்பில் சுழன்று கொண்டிருக்கிறோம். பகலில் ஒரு மருத்துவமனையிலும், மாலையில், எங்களுக்கு சொந்தமான கிளினிக்குகளிலும் வேலை பார்க்கிறோம். ஒருநாளின் பெரும்பகுதி நோயாளிகளுடன் செலவழிப்பதாக எங்களுடைய வேலை நேரம் இருக்கிறது.

நாள் முழுக்க மருத்துவமனையில் பணிநேரம் முடிந்து வந்தாலும், இரவில் ஏதேனும் அவசர அழைப்பு வந்தால் அதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. எங்களுக்கான பர்சனல் நேரம் என்பது மிகமிகக் குறைவு. குடும்பத்துடன் நேரம் செலவிட நேரம் இல்லை. எங்களுக்கு தூங்கக்கூட நேரம் கிடைப்பதில்லை.

நோயாளிகளுக்கு வாழ்வியல் அறிவுரைகளை வழங்கும் நாங்கள், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அந்த ஒழுக்கங்களை கடைபிடிக்கிறோமா? என்றால், நிச்சயம் இல்லை. சரியான நேரத்தில் உணவருந்துவது, தூங்குவது, ஓய்வெடுப்பது என்பதெல்லாம் எங்கள் தொழிலில் கிடையவே கிடையாது.

படிக்கும் காலத்தில், நானே இது சம்பந்தமான சர்வே ஒன்று செய்திருக்கிறேன். அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்களின் தூக்க நேரத்தை கணக்கெடுத்துப் பார்த்ததில் 60 சதவீத மருத்துவர்கள் 6 மணிநேரம் கூட தூக்கத்திற்காக ஒதுக்குவதில்லை. யாரும் 8 மணிநேர தூக்கத்தை பின்பற்றுவதில்லை. இதில் பெண் மருத்துவர்கள், குடும்பத்தையும், தொழிலையும் சமநிலையில் பராமரிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டில் உள்ள மருத்துவர்களின் வேலை நேரம். வெளிநாட்டில் மருத்துவர்களுக்கான வேலை நேர அட்டவணையை அரசாங்கமே நிர்ணயித்துள்ளது. அலுவலக நேரம் போல காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரைதான் மருத்துவர்கள் வேலை செய்கிறார்கள். அதுவும் ஒரு நாளைக்கு 15 நோயாளிகளைத்தான் பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு போதுமான நேரம் இருப்பதால், அவர்களால் தங்கள் தொழிலில் முழு செயல்திறனுடன் இயங்க முடிகிறது. நம் நாட்டில் மக்கள்தொகை அதிகம், மக்கள் தொகைக்கேற்ற போதிய மருத்துவர்கள் இல்லாததும், எங்களுக்கு கூடுதல் நேர நெருக்கடியாகிறது.

அடுத்து, மருத்துவர், நோயாளிகளுக்கிடையேயான உறவு, நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் குடும்ப மருத்துவரை கடவுளுக்கு நிகராக பார்த்தார்கள். எங்களின் மீதான நம்பகத்தன்மை அடியோடு போய் விட்டது. எங்களிடம் வரும் நோயாளிகள், நோயைப்பற்றி கூகுளில் தேடி பார்த்துவிட்டு, அதில் பொதுவாக கூறிய தகவல்களையெல்லாம் படித்து, அரைகுறையாக தெரிந்து கொள்வதோடு, தனக்கும் அதுபோல் இருக்கிறதா? என்று கேள்விகளை எழுப்புகிறார்கள். அவர்களுக்கு இருப்பது மிகச் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால், அதை பெரிதுபடுத்திக் கொண்டு, நாங்கள் சொல்வதை நம்புவதுமில்லை. அவர்களுக்கு நோயைப்பற்றி விளக்கிக் கூறுவது கடினமான வேலையாக இருக்கிறது.

வரும்போதே கேள்விகளாகத்தான் கேட்கிறார்களே தவிர, நாம் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லை. எங்களுடைய அனுபவத்தை பொருட்படுத்துவதும் இல்லை. ஊடகங்களும் மருத்துவர்களை தவறாக சித்தரிப்பது அதிகமாகிவிட்டது. எல்லா மருத்துவர்களும் அதுபோல் இருப்பதில்லை என்பதுதான் உண்மை.

மருத்துவம் படிக்கும் நாங்கள், இளங்கலை மருத்துவ படிப்பு நான்கரை ஆண்டுகாலம் மற்றும் கட்டாய உறைவிடப்பயிற்சி ஒரு வருடம் என மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் படித்து முடித்து, பின்னர், முதுகலையில் 2 ஆண்டுகள், அதற்கடுத்து உயர் சிறப்பு மருத்துவம் என கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் படிப்பதற்கே செலவாகிறது. இதுவும் எங்களுக்கு கூடுதல் அழுத்தம்தான். இதைத்தவிர, அன்றாடம் மருத்துவத்தில் ஏற்படும் புதுப்புது மாற்றங்களைப் பற்றிய நடப்பு அறிவும் எங்களுக்கு முக்கியம். ஏனெனில், நோயாளிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

மேலும், தற்போதுள்ள போட்டி மிகுந்த உலகில், வேலை சார்ந்த அழுத்தங்களும் இருக்கிறது. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு இலக்கு சார்ந்த அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இம்மருத்துவமனைகளில், தனிநபர் காப்பீடு எடுத்த நோயாளிகளின் வருகை அதிகம் என்பதால் வியாபார இலக்கை நிர்ணயிக்கிறார்கள்.

இவர்கள் எந்த நோய்க்காக மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாலும், காப்பீடு இருப்பதால், எல்லாவற்றுக்கும் ஆய்வக சோதனை முறைகள் எடுக்கப்படும். ஒரு எம்.டி மருத்துவரே எல்லா நோய்களையும் கண்டறிந்து விட முடியும் என்றாலும், அனைத்துப்பிரிவு சிறப்பு மருத்துவர்களின் கருத்துக்களையும் வாங்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இதனால், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இருவருக்குமே கூடுதல் சுமை.

பொதுவாக அந்தந்த துறைக்கேற்ற மருத்துவர்களுக்கு ஏற்றவாறு அடிப்படை ஊதியம் நிர்ணயித்து சம்பளமாக கொடுத்துவிடுவார்கள். கூடுதலாக, இலக்கு என்பது பொருளாதார ரீதியில் நிர்ணயிக்கப்படும். ஒரு மாத இறுதியில் ஒட்டுமொத்தமாக எந்த அளவிற்கு அவர்களால் வருமானம் வந்துள்ளது என்பதை தரவு தகவல்களைக் கொண்டு கணக்கிடுவார்கள்.

பெரும்பாலும், ஏற்கனவே துறையில் தங்களுடைய பெயரை நிர்ணயித்த மூத்த மருத்துவர்களுக்கு இந்த பிரச்னை இருக்காது. ஆரம்ப நிலையில் உள்ள மருத்துவர்களுக்குதான் பாதிப்பு. இலக்கை அடையாத மருத்துவர்களை எளிதாக மாற்றிவிடுவார்கள். மருத்துவர்களுக்கு இது ஒரு கூடுதல் மன அழுத்தத்தை கொடுக்கிறது. கார்ப்பரேட் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு எந்நேரமும், பணி நேரம் இல்லாத போதும், போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். எப்போதும் அழைப்பில் இருக்க வேண்டும். அவசரப்பிரிவு நோயாளிகளை அட்டண்ட் செய்ய வேண்டும்.

அரசு மருத்துவமனைகளிலும் சரி, தனியார் மருத்துவமனைகளிலும் சரி, மருத்துவர்களுக்கு சம்பளம் வெகு குறைவு. அவர்கள் எங்களுக்கு சரியான சம்பளம் கொடுத்தால், நாங்கள் தனியாக மாலைநேரங்களில் கிளினிக் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. எங்களுக்கு குடும்பத்தோடு இருக்க கூடுதல் நேரம் கிடைக்கும். மற்ற தொழிலைப்போல நாங்கள் குறிப்பிட்ட நேரம் ஃபிக்ஸ் செய்து கொள்ள முடியாது.

இதில், எங்கிருந்து எங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியும்? இள வயதிலேயே மருத்துவர்கள் மரணம் அடைவது சர்வ சாதாரணமாகிவிட்டது. வீட்டில் கணவன், மனைவி இருவரும் மருத்துவர்கள் என்றால், நிலைமை மிகவும் மோசம்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மருத்துவ மாணவர்களின் உளவியலில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்: மற்றும் கல்வி நிறுவனங்களும் அணுகக்கூடிய ஆலோசனை சேவையை கொண்டிருக்க வேண்டும். மேலும், நம்நாட்டிலுள்ள மருத்துவர்களின் பணி நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தற்போதைய அவசரத் தேவை’’ என்கிறார் கவலையுடன்...  மக்களைக் காக்கும் மருத்துவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி தோன்றட்டும்!

- என்.ஹரிஹரன்