ஐஸ் ஆப்பிள் சாப்பிடலாமா?!ஹேப்பி சம்மர்

பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளமே பனை மரமும் அதை சார்ந்த பொருட்களும்தான். பனைமரத்தின் மூலம் கிடைக்கும் பனம்பழம், பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி என எல்லாப் பொருட்களும் ஆரோக்கியம் மிக்க உணவுப்பொருளாக மருத்துவரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வெயில் காலத்துக்கு இதம் தரும் வகையில் கிடைக்கும் நுங்குக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. ஆயுர்வேத மருத்துவர் ராதிகாவிடம் நுங்குவின் பலன்கள் என்னென்ன என்று கேட்டோம்...

‘‘மனிதனின் எந்த உதவியும் இன்றி, தானே ஓங்கி வளர்ந்து மனித குலத்துக்கு நன்மை பயக்கக்கூடியதாக பனைமரம் இருக்கிறது. கடும்வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய ஓர் உன்னத மரம் இது. பனைமரம் பல்வேறு உணவு பொருட்களை தந்தாலும் வெயிலுக்கு மிகவும் ஏற்ற நுங்கு பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற உணவுப்பொருட்களையே இயற்கை நமக்கு உணவாக தருகிறது.

அந்த வகையில் கோடை காலத்தில் சிறந்த உணவாக நுங்கினை தருகிறது. அதாவது, முற்றாத பனங்காயினையே நுங்கு அல்லது நொங்கு என கூறுகிறோம். அதனால், நுங்கு வாங்கும்போது முற்றாததையே தேர்ந்தெடுப்பது நல்லது. முற்றிய நுங்கு ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

வெயிலில் உடல் வறட்சி ஏற்படும்போது ஏதேனும் இனிப்புச்சுவையும், குளிர்ச்சியான குணமும் கொண்ட உணவினை சாப்பிட விரும்புவோம். அதற்கேற்ற சரியான உணவுதான் நுங்கு. இதில் வைட்டமின்-பி காம்பளக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், ரிபோப்ஃப்ளேவின் போன்ற சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தை தீர்ப்பதற்கும், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும் சிறந்த உணவுப் பொருளாக இருக்கிறது. சீதபேதி, வயிறு சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கிறது.

குறிப்பாக, அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் நுங்கை சாப்பிட்டு வந்தால் அம்மை கொப்பளங்கள் எளிதில் குணமடையும், மேலும் வேர்க்குரு தொல்லையிலிருந்து விடுபட நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். வயிறு மற்றும் குடலில் உள்ள புண்களை குணமாக்க வைக்கும். இதனால் காலையில் வெறும் வயிற்றில் நுங்கை எடுத்துக் கொள்வது மிகச்சிறந்தது.

நுங்கில் உள்ள மருத்துவ குணங்களை முழுமையாக பெற இளம் நுங்கை தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும். தோல் துவர்ப்பாக இருக்கிறது என அதனை நீக்காமல் சாப்பிடுவது சிறந்தது. அப்போதுதான் அதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். நுங்கை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நுங்கு உடல் மெலிந்தவர்களுக்கு பலத்தை கொடுக்கும். சிறுநீர் கடுப்பை உடனே சரி செய்யும்.

நுங்கை நேரடியாக சாப்பிடுவதோடு உணவாகவும் பயன்படுத்தலாம். உதாரணமாக நுங்கினை பாயாசமாகத் தயாரித்து உண்ணலாம். மசித்த நுங்கை காய்ச்சி ஆறிய பாலுடன் பனைவெல்லம், ஏலக்காய் போட்டு பாயாசமாகத் தயாரித்து சாப்பிட்டு வர உடலுக்கு ஊட்டமும் ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும் நன்னாரி சர்பத்துடன் மசித்த நுங்கை கலந்து குடிக்கலாம். அதுபோல ரோஸ்மில்க்கிலும் மசித்த நுங்கை சேர்த்து பருகலாம்.

- கவிபாரதி