ஹெல்த் காலண்டர்சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 5


உலகம் முழுவதும் உள்ள மக்களின் நல்வாழ்வையும் பொருளாதார மேம்பாட்டையும் பாதிப்பதில் முக்கியமான ஒரு காரணியாக சுற்றுச்சூழல் இருக்கிறது. அதை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் சர்வதேச அளவில் ஒரு மாபெரும் பிரச்னையாக இருப்பதை உணர்ந்து, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஜூன் 5-ம் நாள் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை (World Environment Day) கடைபிடித்து வருகிறது.

உலக உயிர்கள் ஒவ்வொன்றும் இயற்கையோடு ஓர் உள்ளார்ந்த விதத்தில் தொடர்புடையதாக இருக்கிறது. இயற்கையோடு இணைந்திருக்கும் இந்த உறவை சரியான முறையில் வளர்த்து வாழ்வை மகிழ்வுடன் வாழ்வதற்குரிய சவால்களை எதிர்கொள்வது, இயற்கையின் அழகையும், அவசியத்தையும் உணர்ந்து அதனுடன் இணைந்து வாழ்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நாம் வாழும் பூமி மற்றும் அதன் சுற்றுச் சூழலின் இயல்புத் தன்மைகளை அழியாமல் பாதுகாக்க நினைவுறுத்தும் சிறப்பு தினமாக இருக்கிறது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.  தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் கழிவு மேலாண்மையை மேம்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்.

திட, திரவ மற்றும் வாயு வடிவிலான பல்வேறு வகைக் கழிவுகளையும் அதற்குரிய கழிவு மேலாண்மை உத்திகள் மூலம் சரியான முறையில் கையாண்டு அவற்றை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். பல புதிய திட்டங்களைத் தீட்டி இந்தக் கழிவு மேலாண்மையை நவீனப்படுத்துவதோடு, அதை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கியமான பொறுப்பு அரசுக்கு உள்ளது. அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கடமையும் பொதுமக்கள் அனைவருக்கும் உள்ளது.

சர்வதேச மூளைக்கட்டி தினம் - ஜூன் 8

மூளைக்கட்டி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கி.பி. 2000 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 8-ஆம் நாள் சர்வதேச மூளைக்கட்டி தினம் (World Brain Tumor Day) கடைபிடிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையற்ற உயிரணுக்களின் மிகை வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். மூளையின் எப்பகுதியிலும் ஏற்படுகிற அசாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியானது மூளைக்கட்டியாக உருவாகிறது. இந்த மூளைக்கட்டிகள் தீங்கு தருவது, தீங்கற்றது என்று இரண்டு வகைகளாக உள்ளது.   

நோய் அறிகுறிகள்

கட்டி ஏற்படும் மூளைப்பகுதிக்கு ஏற்ப அறிகுறிகள் வேறுபடும். தலைவலி, வலிப்பு, பார்வைக் கோளாறு, வாந்தி, மனநிலை மாற்றங்கள் ஆகியவை பொதுவான சில அறிகுறிகளாக உள்ளது. காலையில் தலைவலி மற்றும் குமட்டல் ஏற்படலாம். நடப்பதில், பேசுவதில், உணர்வதில் உண்டாகும் சிரமங்கள் போன்றவை மிகவும் குறிப்பான சில பிரச்னைகளாக இருக்கிறது.

சிகிச்சை முறை

மூளைக்கட்டியின் அளவு, வகை, நிலை, இருக்குமிடம் போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்நோயின் அறிகுறிகள் இருக்கிறது. இந்த அறிகுறிகளைப் பொருத்தும், நோயாளியின் பொதுவான உடல்நிலையைப் பொருத்தும் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, வேதியியல் சிகிச்சை, ஊக்கமருந்துகள், எதிர்-வலிப்பு மருந்துகள், வென்ட்ரிகுலார் பெரிடோனியல் ஷன்ட் (Ventricular peritoneal shunt) மற்றும் கூட்டு மருத்துவ சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.  

சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் - ஜூன் 14

பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தப் பொருட்களின் தேவை குறித்த விழிப்புஉணர்வை உலகளவில் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14-ம் நாள் சர்வதேச ரத்தக் கொடையாளர் தினம் (World Blood Donor Day) கடைபிடிக்கப்படுகிறது.ஒருமுறை ஒரு நபரிடமிருந்து 350 மி.லி. முதல் 450 மி.லி. வரை ரத்தம் கொடையாக எடுக்கப்படுகிறது. பொதுவாக 24 மணி நேரத்தில் இந்த ரத்தம் உடலால் ஈடுகட்டப்படும்.

சிவப்பணுக்களை முழுமையாக ஈடுகட்ட 4 முதல் 5 வாரங்கள் தேவைப்படும். ரத்தத்தைத் தொடர்ந்து தானம் அளிப்பதன் மூலம் அவசர நிலை சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் ரத்தத்தைப் போதுமான அளவுக்குப் பாதுகாத்து வைக்க முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்  ரத்தக்கொடை முற்றிலும் ஒரு பாதுகாப்பான நடைமுறையே. கிருமியகற்றப்பட்ட ஓர் ஊசி, ஒரு முறை மட்டுமே, ஒருநபருக்கு பயன்படுத்தப்பட்டுப் பின் அகற்றப்படுகிறது.

ரத்தக்கொடையானது பதிவு, மருத்துவ வரலாறு, குருதிக்கொடை மற்றும் ஓய்வு போன்ற எளிமையான 4 கட்ட நடவடிக்கைகளை உடையது. நீங்கள் நல்ல உடல்நிலையோடு இருந்தால் ரத்தக்கொடைக்குப் பிறகு உடல் பலவீனமோ அல்லது கிருமித்தொற்று ஏதும் ஏற்படுமோ என்றும் கவலைப்பட வேண்டாம்.

ஆய்வகம் அல்லது மருத்துவ ஊர்தியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தால் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவே.பாதுகாப்பான ரத்தம் உயிரைப் பாதுகாப்பதோடு ஒருவரின் உடல்நலத்தையும் மேம்படுத்துகிறது.

18 முதல் 65 வயதுக்குட்பட்ட அனைவரும் ரத்தக் கொடை அளிக்கலாம். ரத்தக்கொடை அளிக்க அதிகபட்ச வயது 65. எனினும் முதல் தடவை ரத்தக்கொடை அளிப்பவரையும், 60 வயதுக்கு மேல் தொடர்ந்து ரத்தக்கொடை அளிப்பவரையும் மருத்துவரின் வழிகாட்டுதல்படி ரத்தக்கொடை அளிக்க ஏற்றுக்கொள்ளலாம்.

ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் பாதுகாப்பாக ரத்தக்கொடை அளிக்கலாம். ரத்தக்கொடை அளிப்பதற்கு முன்னர் அதிக நீரும் நீராகாரமும் அருந்த வேண்டும். மது மற்றும் காஃபின் கலந்த பானங்களைத் தவிர்க்க
வேண்டும். சிறந்த முறையில் உணவு உட்கொள்வதோடு, இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்வது சிறந்தது.  

யார் ரத்தக்கொடை அளிக்கக் கூடாது?

எச்.ஐ.வி. அல்லது கல்லீரல் அழற்சி சோதனை நேர்மறையாக இருப்பவர்கள், அண்மையில் பச்சை குத்தியிருப்பவர்கள், குருதியுறையாமைக் கோளாறு இருப்பவர்கள், கடந்த 6 முதல் 12 மாதங்களுக்குள் மாரடைப்பு ஏற்பட்டிருப்பவர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள், நரம்பு வழி போதை ஏற்றுபவர்கள், சமீபத்தில் மலேரியா காய்ச்சல் தாக்கியவர்கள், கடந்த ஆண்டில் ரத்தம், பிளாஸ்மா அல்லது பிற ரத்தப் பொருட்களைப் பெற்றிருப்பவர்கள், கடந்த ஆண்டில் இதய அறுவை சிகிச்சை செய்து  கொண்டவர்கள், இதய ரத்தக்குழல் நோய்க்குரிய மருந்துகள் உட்கொண்டு வருபவர்கள், சமீபத்தில் கருக்கலைவு ஏற்பட்டிருப்பவர்கள், புற்றுநோய்க்கான வேதியற் சிகிச்சை அல்லது கதிரியக்க சிகிச்சை செய்துகொண்டவர்கள், கடுமையான அல்லது மிதமான ரத்த சோகை இருப்பவர்கள் போன்ற அனைவரும் ரத்தக் கொடை அளிக்கக் கூடாது. ரத்தக்கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு…

சான்றிதழ் பெற்ற ஒரு ரத்த வங்கி, குருதிக்கொடை முகாம் அல்லது ஒரு இயங்கும் ரத்த வாகனத்திலும் நீங்கள் ரத்தக்கொடை அளிக்கலாம்.

சர்வதேச முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம் - ஜூன் 15

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுப் பேரவைஜூன் மாதம் 15-ம் தேதியை உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினமாக(World Elderly Abuse Awareness Day) அனுசரிக்க முடிவு செய்தது. நமது முதியோர்களில் சிலரை அவமதித்துத் துன்பத்துக்கு உள்ளாக்குவதற்கு எதிராக உலகம் முழுவதுமுள்ள மக்கள் குரல் கொடுப்பதற்கான விழிப்புணர்வூட்டும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

நம்பிக்கை தேவைப்படும் ஓர் உறவுக்குள் ஒரு தனிசெயலாலோ, தொடர் செயலாலோ அல்லது போதுமான நடவடிக்கை இன்மையாலோ முதியோருக்கு ஏற்படும் துன்பமே முதியோர் அவமதிப்பு என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. உடலியல், பாலியல், உளவியல் மற்றும் உணர்வியல் அவமதிப்பு, பொருளியல், பொருள் சார் வஞ்சனை, கைவிட்டுவிடுதல், புறக்கணிப்பு, கடுமையான கண்ணியம் மற்றும் மரியாதைக் குறைவு போன்றவை முதியோர் அவமதிப்பில் அடங்கும்.

இத்தகைய அவமதிப்புகள் யாவும் மனித உரிமை மீறல்களாக உள்ளன. முதியோரைப் பொருளாதார ரீதியாக வஞ்சிப்பதைப் புரிந்துகொண்டு அதற்கு முடிவுகட்ட வேண்டும்.உலக அளவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு அவர்களை அவமதிப்பதும் அதிகரித்து வருகிறது. முதியோர் அவமதிப்பும் ஒரு பொது சுகாதாரப் பிரச்னை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்ட 15.7 % பேர் அவமதிக்கப்படுவதாக, 2017-ம் ஆண்டு நடத்தப் பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டில் 6-ல் ஒரு முதியவர் உலகளவில் அவமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தியாவில் 1.04 கோடியாக உள்ள  முதியோரின் எண்ணிக்கையானது 2026-ம் ஆண்டில் 17.3 கோடியாக உயரும் என்கிறது இந்த ஆய்வு.

முதியோரைப் பொருளாதார ரீதியாக வஞ்சிப்பதைப் புரிந்துகொண்டு அதற்கு முடிவுகட்ட வேண்டும். இதுபோன்று பொருளாதார ரீதியாகவும், மேற்சொன்ன பல விதங்களிலும் ஒரு முதியவர் வஞ்சிக்கப்படுவது அவர்களின் மனித உரிமை சார்ந்த பிரச்னை.

வறுமை, பட்டினி, வீடிழப்பு, சுகாதார இழப்பு, நலவாழ்க்கை இழப்பு மற்றும் அகால மரணம் அடைய வழிகோலும் பொருளாதார மற்றும் பொருள் வஞ்சனையை உள்ளடக்கிய அனைத்து வகையான அவமதிப்புகளும் இல்லாமல், தங்கள் முதுமைப் பருவத்தில் கண்ணியமான வாழ்க்கை வாழ்வது முதியோரின் உரிமை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

- தொகுப்பு: க.கதிரவன்