டியர் டாக்டர்
* நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்த அபாயத்தில் இருக்கிறார் என்ற தகவல் அதிர்ச்சியளித்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வை மேற்கோள் காட்டி, இதய சிகிச்சை மருத்துவர் சுந்தர் விளக்கி இருந்த விதம் எளிமையாகவும், தெளிவாகவும் இருந்தது. தக்க தருணத்தில் எச்சரிக்கையூட்டியதற்கு மிக்க நன்றி!
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* ‘டயட் டைரி' இந்த முறை நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு தொகுப்பாக மலர்ந்தது மகிழ்ச்சி அளித்தது. நீரிழிவு நோயாளிகளுக்கான அடிப்படையான உணவு ஆலோசனைகளையும், சுவையான உணவுமுறைகளையும் அழகான படங்களோடு விளக்கியிருந்தார் டயட்டீஷியன் கோவர்தினி.
- செந்தூர காளிப்பாண்டி, கோவில்பட்டி.

* அட்டைப் படம் பார்த்ததும் பயம் + கவலையால், ப்ளட் பிரஷர்  ‘டன்’ கணக்கில் எகிறியது. கண்ட்ரோல் பண்ணி கவர் ஸ்டோரியைக் கவனமாக, நிதானமாக படிச்சப்புறம்தான் அடேங்கப்பா... எம்புட்டு விஷயம் சொல்லியிருக்கீங்கன்னு மனது அமைதியானது.
- சிம்மவாஹினி, வியாசர் நகர்.   

* பாலியல் விழிப்புணர்வு என்ற பெயரில் கிளுகிளுப்பைத் தூண்டும் பத்திரிகைகளுக்கு மத்தியில் ‘கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு’ தொடர் மிகவும் வித்தியாசப்பட்டு நிற்கிறது. எல்லை தாண்டாத கண்ணியத்துடன் உண்மையான விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. கடந்த இதழில் வெளிவந்த பாதுகாப்பான கருத்தடை முறைகளை வெளியிட்டிருந்த விதமும் அதனை மீண்டும் நிரூபித்தது.
- கலைவாணி, நத்தம்.

* ‘சுகப்பிரசவம் இனி ஈஸி!’ தொடர் நிறைவு பெற்றது இனம் புரியாத ஏதோ மன வருத்தத்தைத் தந்தது. கர்ப்பிணிகளுக்கு முழுமையான வழிகாட்டியாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார் டாக்டர் கு.கணேசன்.
- கமலா தேவி, குரோம்பேட்டை.