உங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது ?அழகே... என் ஆரோக்கியமே...

அழகு சிகிச்சையில் ஆயிரம் உண்டு. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் நீங்கள்தான் தெளிவாக இருக்க வேண்டும்.

கண்களும், கண்ணைச்சுற்றிய தோலின் கவனிப்பும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கன்னமும், கழுத்தும். நம்முடைய முகத்தில் வயது ஏற ஏற தோலின் பளபளப்பு குறையும். கன்னங்கள் தொய்வடையும்.

உதட்டைச்சுற்றி சுருக்கங்கள் விழும். உதடுகள் சிலருக்கு ஓரங்களில் கீழ்ப்பக்கமாக சாய்ந்து சோகமான முகத்தை கொடுக்கும். மோவாய் பகுதியில் சதை தொங்க ஆரம்பித்துவிடும். கவலை வேண்டாம். இவை எல்லாவற்றுக்குமே அழகியல் சிகிச்சைகள் உள்ளன.

மோவாய் பகுதியில் சதை தொங்குவது ஆரம்ப நிலையில் ஒருவரை பக்கவாட்டில் பார்த்தால் மட்டும் தெரியும். ஆனால், உடம்பில் சதை போடப் போட சில வருடங்கள் கழித்து, ஒருவரை நேருக்குநேர் பார்க்கும்போதே முகத்துக்கும் கழுத்துக்கும் இடையில் சதை தொங்குவதை எளிதில் பார்க்க முடியும். இந்த முக அமைப்பு ஒருவரின் முகத்தை மிகவும் வயதானவராகக் காண்பிக்கும்.

உங்களுக்கு அந்த மாதிரி சதை இருக்கிறதா என்று சந்தேகமா? அதை கண்டுபிடிப்பது சுலபம்தான். உங்களின் கண்களின் கீழே தடவிக்கொண்டே வாருங்கள், அப்போது ஒரு எலும்பு தட்டுப்படும். இதை ஆங்கிலத்தில் Inferior orbital margin என்போம். இதை முதல் புள்ளியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து உங்கள் காதின் துவாரத்தின் மேலே உள்ள இடத்தை இரண்டாவது புள்ளியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த இரண்டு புள்ளியையும் நேராக ஒரு கோடாக வரையுங்கள். இந்த கோடு Frankurt plane எனப்படும். இந்த கோட்டினையும் தரையையும் இணை கோடுகளாக வைத்து பார்க்கும்போது மோவாய் பகுதியில் எவ்வளவு தூரம் சதை தொங்குகிறதோ அதைப்பொறுத்து இதை தரம் பிரிப்பார்கள். இதை Grading of submental fullness என்று கூறுவார்கள். வெறும் Submental fat மட்டும்தான்.

இந்த பிரச்னைக்கு Injection Lipolysis என்ற வைத்தியம் மூலம் உங்கள் முகத்தை இளமையாக மாற்றலாம். ஆனால், தைராய்டு சுரப்பி வீக்கம், தோல் மிகவும் தளர்ந்து இருத்தல் அல்லது அந்த இடத்தில் நெறி கட்டி இருந்தால் அவர்களுக்கு நான் சொல்லக்கூடிய இவ்வைத்தியத்தை செய்ய முடியாது. இந்த வைத்தியத்துக்கு Deoxycholic acid என்ற பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது. இது இயற்கையிலேயே நம் பித்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கக்கூடிய பொருள்.

மோவாய் பகுதியை நன்கு ஆராய்ந்து விட்டு, முக்கிய நரம்புகள் போகும் இடங்களை தவிர்த்துவிட்டு ஒரு செ.மீ இடைவெளியில் 0.2ml மருந்து ஊசியின் மூலம் செலுத்தப்படும். இந்த ஊசி மருந்து உள்ளே செல்லும்போது ஒருவித எரிச்சல் இருக்கும். அது போகப் போக சரியாகிவிடும். இந்த ஊசி போட்ட பிறகு 2-3 நாட்களுக்கு கொஞ்சம் வலி இருக்கும்.

ஆனால், அந்த இடத்தில் உள்ள கொழுப்பு கரைந்த பின் முகத்தோற்றம் மிக இளமையாக மாறும். இந்த சிகிச்சை 4 வார இடைவெளியில் 4 முதல் 5 முறைகள் செய்ய வேண்டியிருக்கலாம். இந்த வைத்தியம் நிரந்தரமானதா என்று கேட்டால், சிகிச்சை முடிந்த பின்பும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, நல்ல உணவு பழக்க வழக்கங்களை ஒழுங்காக கடைபிடித்தால், ஆம் என்றே சொல்லலாம்.

சிகிச்சை முடிந்த பின்பு எந்தவித உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு எதையுமே கடைப் பிடிக்கவில்லை என்றால் இது திரும்பவும் வந்துவிடும். கழுத்துக்கான உடற்பயிற்சி ஒழுங்காக ஆரம்பத்திலேயே செய்துவந்து, அதீத சர்க்கரை மற்றும் கலோரியுள்ள உணவுகளை உண்ணாமல் இருந்தால் இது வரவே வராது. இந்த ஊசியும் தேவையில்லை.

கன்னங்கள் தொய்வடைந்து இருப்பதை எப்படி சரிசெய்வது?’ என்று கேட்டால் Fillers Hyaluronic Acid மற்றும் Poly-L-Lactic Acid போன்ற பொருட்கள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. முன்பெல்லாம் நிறைய அளவில் இந்த மருந்தை முகத்தில் ஊசியின் மூலம் செலுத்துவார்கள்.

இப்போது நவீன முறையில் முகத்தை சரியாக ஆராய்ந்து சில புள்ளிகளில் கொஞ்சம் செலுத்தினாலே முக அமைப்பு கவர்ச்சிகரமாக மாறும். நாம் உபயோகப்படுத்தும் பொருட்களைப் பொறுத்து 18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை முக அமைப்பு சீராக இருக்கும். பின்பு தேவைப்படும்போது திரும்பவும் போட்டுக் கொள்ளலாம்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். தற்போது Poly-L- Lactic Acid உடம்பிலே கரைந்துபோகும் தன்மையுடைய நூலில் தோய்த்து கிடைக்கிறது. இதை One-stitch facelift or Lunchtime facelift என்றழைப்பார்கள். சிறு ஊசியின் மூலம் இந்த நூலை உடம்பில் தேவையான இடங்களில் செலுத்தி விட்டு ஊசியை மட்டும் நீக்கி விடுவார்கள். இந்த நூல் உடம்பிலே இருந்துகொண்டு, உள்தோலில் உள்ள Fibroblast செல்லில் இருந்து Collagen என்ற பொருளை சுரக்க வைத்து தோலில் உள்ள தொய்வை நீக்கிவிடும்.

2 வருடங்களில் இந்த நூல் முழுவதுமாக நம் உடம்பிலேயே கரைந்துவிடும். இதுதான் இப்போது Hollywood-ல் ட்ரெண்டிங். ஏன் நடிகர், நடிகைகள் மட்டும்தான் அழகாகவும், வசீகரமாகவும் இருக்க வேண்டுமா? நம் அடுத்த வீட்டு அக்காவையும் எதிர்த்து வீட்டு பையனையும்கூட ஹீரோ, ஹீரோயின் போல தோற்றமளிக்க வைக்கலாம். முன்பெல்லாம் சாமானிய மனிதர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நவீன வைத்தியம் அனைத்தும் இப்பொழுது
அனைவருக்கும் எளிதாக கிடைக்கிறது.

சில பெண்கள் அழகாக இருந்தால்கூட அவர்களுடைய தாடை பகுதி மிகவும் தடிமனாக இருந்து அவர்களின் முக அழகைக் கெடுக்கும். அவர்களுக்கு Botulinum toxin-ஐ Masseter muscle என்று தாடையில் உள்ள தசையில் செலுத்தி அந்த முகத்தை மிக அழகாக மாற்ற முடியும். Sad Emoticon-ல் உள்ளதுபோல் உதடுகள் கீழே இருக்கும் சோக முகத்தையும் மாற்ற முடியும்.

இதுபோல் அழகு சிகிச்சையில் ஆயிரம் உண்டு. உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சரியான சிகிச்சை மையத்துக்கு செல்லுங்கள். தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். சிகிச்சையின் சாதக பாதகத்தை மருத்துவரிடம் முழுமையாக பேசுங்கள். உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்.

எந்த வைத்தியத்துக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் இருக்காது. அதைப் புரிந்துகொள்ளாமல், நிதர்சனத்தை உணராமல் எந்த வைத்தியத்துக்கு சென்றாலும் செலவும், மன உளைச்சலும்தான் மிஞ்சும். எனவே, நன்கு ஆலோசித்து இந்த மருத்துவ முறைகள் எத்தனை நாட்கள் நீடிக்கும். பின்பு எப்போது செய்துகொள்ள வேண்டும் என்று புரிந்து வைத்தியம் செய்து கொண்டீர்கள் என்றால் எந்த பிரச்னையும் கிடையாது.

கவர்ச்சியான முகம், தேர்ந்த அறிவையும்விட அன்பான இதயம் எப்போதுமே அழகானது. இதை புரிந்து வாழ்ந்தீர்கள் என்றால் உங்களுக்கு எந்த சிகிச்சையும் தேவைப்படாது.

( ரசிக்கலாம்… பராமரிக்கலாம்…)