டிஜிட்டலாகும் மருத்துவ ஓலைச்சுவடிகள்சபாஷ்

சித்தா, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ முறைகள் இந்தியாவில் பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் உடையவை. இவற்றின் மருத்துவக் குறிப்புகள் ஓலைச்சுவடிகளிலேயே அமைந்துள்ளன. இதனை அடுத்த தலைமுறையினரும் பயன்படுத்தும் வகையில் சுவடியிலிருந்து டிஜிட்டல் முறையில் மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை.

ஓலைச் சுவடிகளிலுள்ள மருத்துவ ரகசியங்களை இதன் மூலம் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையோடும் இந்த முயற்சி நடந்து வருகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் இயக்குநரும், மருத்துவருமான செந்தில்ராஜிடம் இது பற்றிக் கேட்டோம்..

‘‘தமிழ்நாட்டிலுள்ள சித்தர்களும் முனிவர்களும் சித்த மருத்துவம் உருவாக காரணமாக இருந்தனர். அவர்கள் இந்த மருத்துவ முறையிலுள்ள சிறந்த மருந்துகள் மற்றும் அவற்றைப் பாரம்பரியமாகச் செய்யும் முறைகளை, மக்களுக்குப் பயன்பட வேண்டுமென்று பனை ஓலைகளில் (ஏடு) எழுத்தாணி மூலம் எழுதி வைத்திருக்கிறார்கள். அவற்றை மருத்துவச் சுவடிகள் என்று நாம் அழைக்கிறோம்.

இதுபோன்ற மருத்துவ தகவல்கள் அடங்கிய 1068 சுவடிகள் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் மூலமாக தமிழ்நாட்டில் நாகர்கோவில், திருநெல்வேலி, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை போன்ற பிற மாவட்டங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சேகரிக்கப்பட்டுள்ள மருத்துவச் சுவடிகள் மிகவும் பழமையானவை.

இவற்றின் ஆயுட்காலம் 300 முதல் 350 ஆண்டுகள். எனவே, கிடைக்கப்
பெற்றுள்ள மிகவும் பழமையான சுவடிகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வரை அதை உரிய முறையில் பாதுகாக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறோம். அச்சுவடிகள் எதிர்கால தலைமுறைக்குத் தேவையான ஆயிரக்கணக்கான மருத்துவக் குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது.

தற்போது அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையிலுள்ள அனைத்துச் சுவடிகளையும் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு, சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தின் உதவியுடன் மின்னுருவாக்கப் பணி மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது.

சித்த மருத்துவச் சுவடிகளை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து பாரம்பரியம்மிக்க அரிய மருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு சேர்ப்பதில் இந்திய அளவில் எமது துறை தனிக்கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த மருத்துவச் சுவடிகளை டிஜிட்டல் முறையில் மாற்றி பாதுகாத்து வைக்கும் பணியின்போது மிக அரிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தச் சுவடிகளில் பெரும்பாலானவை சித்த மருத்துவச் சுவடிகளாக உள்ளது. அதில் சில ஆயுர்வேத மருத்துவச் சுவடிகள், குதிரை வாகடம், மாட்டு வாகடம் என்று விலங்குகளுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவக் குறிப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஜோதிடம், வான சாஸ்திரம் சார்ந்த சுவடிகளும் இதில் அடங்கும்.

இந்தச் சுவடிகளில் இருந்து பெறப்பட்ட சில மருத்துவக் குறிப்புகள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் மூலமாக புலிப்பாணி வைத்தியம், அரிய சித்த மருத்துவ முறைகள், மூலிகை விளக்கம், சரக்கு சுத்திசெய் முறைகள், நோயும் மருந்தும் என்கிற இதுபோன்ற 20 நூட்களாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிடைக்கப்பெற்றுள்ள அனைத்துச் சுவடிகளையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணி முடிவடைய இன்னும் 6 மாத காலமாகும். அதன் பின் சுவடியில் குறிக்கப்பட்டுள்ள, கொடிய பிணிகளுக்கான அரிய மருந்துகளை சித்த மருத்துவர்கள் உதவியுடன் கண்டறிந்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணியை எமது துறை மேற்கொண்டு வருகிறது.

மேலும் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் குதிரை வாகடம், மாட்டு வாகடம் போன்ற  சுவடிகளில் உள்ள மருத்துவக் குறிப்புகளைக் கண்டறிந்து கால்நடைகளுக்கு ஏற்படும் பிணிகளை வராமல் தடுக்கவும், பிணி வந்த பின் அதை சரிசெய்யவும், இந்திய மருத்துவத்துறை எதிர்காலத்தில் கால்நடை மருத்துவத் துறையுடன் இணைந்து செயல்படும் நோக்கத்தில் உள்ளது’’ என்கிறார் மருத்துவர் செந்தில்ராஜ்.

- க.கதிரவன்

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்