நோயாளிகளின் கூடாரமாகும் தமிழகம்...இயற்கையை அழிப்பதும் மக்களை ஒழிப்பதும்தான் தொழில் வளர்ச்சியா?!



கவர் ஸ்டோரி

மனித சமூகத்தின் அடிப்படை நோக்கமே நோய், நொடிகளின்றி நூறாண்டு வாழ வேண்டும் என்பதுதான். அந்த கனவு நனவாக இயற்கையின் தயவு மனிதனுக்கு நிச்சயம் தேவை. என்னதான் தொழில்நுட்பங்களும், விஞ்ஞானமும் வளர்ந்தாலும் உணவு, உடை, இருப்பிடம் என்று நம்முடைய அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே அமைந்திருக்கின்றன. இந்நிலை எத்தகைய காலத்திலும் மாறுவது சாத்தியமும் இல்லை.

அத்தகைய வல்லமை பொருந்திய இயற்கையை தன்னுடைய அதிபுத்திசாலித்தனத்தாலோ, பேராசை காரணமாகவோ அழிக்க நினைக்கும்போது தானும் அழிந்துபோகும் அபாயம் இருப்பதை மனிதன் உணர்வதில்லை அல்லது தெரிந்தும் அதை அலட்சியப்படுத்துகிறான். சமீபகாலமாக தமிழ்நாடு இத்தகைய அபாயத்தையும், அலட்சியத்தையும்தான் சந்தித்து வருகிறது.

ஆங்காங்கே தெரிந்தும், தெரியாமலும் இயற்கை சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதெல்லாம் சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் கத்திப் பார்த்தார்கள். அந்தந்த பகுதியின் உள்ளூர் பிரச்னையாகவே அவை பார்க்கப்பட்டு, உலகின் கவனத்துக்கு அந்த சப்தம் எட்டாமலேயே போய்க் கொண்டிருந்தது.

கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டம் மாநிலம் முழுமைக்குமான கவனத்தை ஈர்த்து இப்போது தமிழகம் முழுக்க சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு போராட ஆரம்பித்திருக்கிறார்கள். வறண்டு கிடக்கும் காவிரி, அழிந்து கொண்டிருக்கும் தாமிரபரணி, தேனியில் நியூட்ரினோ, புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் என்று தொடர்ந்து எரியும் சர்ச்சைகள் தமிழகத்தில் வாழும்... தமிழகத்தை நேசிக்கும் யாரையும் தூங்க விடாமல் தொந்தரவு செய்து வருகிறது.

இந்த பிரச்னைகளுக்கு என்ன தீர்வு என்று தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குநரும் மற்றும் இந்திய பொதுசுகாதார சங்கத்தின் தமிழகத் தலைவருமான இளங்கோவிடம் பேசினோம்...

‘‘இந்தியாவைப் பொறுத்தவரை 21-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், துறைமுகங்கள், கட்டமைப்பு வசதிகள் பற்றிய போதிய புரிதல் இல்லாத காரணத்தால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

வருமானத்தை மட்டும் கருத்தில் கொண்டு, மக்களின் உடல்நிலையைப் பற்றிய அக்கறை இல்லாத அரசாங்கம் முன்னெடுக்கும் தொழில் வளர்ச்சி
மக்கள் மனநிலையை மிகவும் பாதித்திருக்கிறது. தொழிற்சாலைகள் தொடங்கி 10, 15 வருடங்கள் முடிந்த பிறகுதான், அவை மக்களின் வாழ்வாதாரத்திலும், உடல்நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவப் பூர்வமாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

எந்த ஒரு தொழிற்சாலையாக இருந்தாலும் அவற்றில் பயன்படுத்தும் எரிபொருட்களால் காற்று பெரிதும் மாசடைகிறது. இதனால் நுரையீரல் தொற்று, நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் திட, திரவக் கழிவுகளால் புற்றுநோய், தோல் நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. தற்போது மனிதனுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மைக்கும் மாசடைந்த சுற்றுச்சூழலே காரணம் என்று சில ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதுதவிர, அண்டை மாநிலங்களிலிருந்தும் தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் ஆகியவற்றை தமிழகத்தில் இரவோடு இரவாக வந்து கொட்டுகிறார்கள். இதை அரசு கண்டுகொள்வதில்லை.’’

மக்களையும் இயற்கையையும் பாதிக்காத தொழில் வளா்ச்சி எப்படி இருக்க வேண்டும்?

‘‘வெளிநாடுகளில் தொழில் தொடங்குவதற்கான ஆராய்ச்சிப்பணிகளை உள்கட்டமைப்பிலேயே கொண்டு வந்திருக்கிறார்கள். தொழிற்சாலை அமைக்கும் இடங்களில் 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு, மக்களின் வாழ்வாதாரம், விளைநிலங்கள் என அங்கு ஏற்படக்கூடிய விளைவுகளை 5 முதல் 10 வருட ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். இவற்றையும் மீறி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை உடனடியாக நீக்கும் நடவடிக்கைகளையும் அந்த அரசாங்கம் மேற்கொள்கிறது.

ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் அணுஉற்பத்தி தொழிற்சாலைகள் தொடங்குவதை நிறுத்திவிட்டன. மக்களை பாதிக்கும் எந்தத் தொழிலையும் வெளிநாட்டுகளில் உள்ள அரசாங்கங்கள் அனுமதிப்பதில்லை.ஆனால், நம் நாட்டில் தொழிற்சாலைகளின் சாதக, பாதகங்களைப் பற்றிய  வெளிப்படைத்தன்மை இல்லை.

எல்லாமே மர்மமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், திண்டுக்கல் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்பகுதிகளில் உள்ள காய்கறி, பழத்தோட்டங்கள் அழிந்துவிட்டன. தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இருக்கும் சாயப்பட்டறை கழிவுகளால் எத்தனையோ ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்திருக்கின்றன.

ஆனால், இதுபற்றிய விவசாய நிலங்கள் அழிவு, நோயால் பாதிக்கப்படுதல் மற்றும் இறந்தவர்கள் பற்றிய புள்ளி விவரங்களை அரசாங்கம் தெரிவிப்பது இல்லை. அதைப்பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்க தனியார் அமைப்புகளையும் அனுமதிப்பதில்லை. காரணம்... பாதகங்கள் வெளியே தெரிந்துவிடுமே என்ற கவலைதான்.

பொதுசுகாதாரத்துறை சார்பில் 1970-லிருந்து நிலம், நீர், மாசுபாடு குறித்த அறிக்கையை தொடர்ந்து அரசாங்கத்திடம் கொடுத்துக் கொண்டேதான் இருக்
கிறோம். ஆனால், எந்தப் பலனும் இல்லை. அரசாங்கம் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பை கொண்டு வந்தாலும், அதற்கு முன்பிருந்த நிலைதான் தற்போதும் தொடர்கிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வந்தபிறகுதான் முன்பிருந்ததை விட மிகவும் மோசமாக சுற்றுச்சூழல் பாதிப்படைந்திருக்கிறது.

ஸ்டெர்லைட், மீத்தேன், கூடங்குளம் அணு உலை போன்றவற்றுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் இல்லாத மாவட்டங்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இப்போது பெரும் பதற்றமாக உருவெடுத்துவிட்டது.

தொழில் வளர்ச்சி என்பது, மனிதனின் வாழ்வாதாரத்தை பாதிக்காத, அவனது ஆரோக்கியத்தை பாதிக்காத வளர்ச்சியாக இருக்க வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள மாநில அரசுகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது மாநில வளர்ச்சிக்கு பாதகம் ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை அனுமதிப்பதில்லை. அந்த விழிப்புணர்வு தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை.’’
தமிழ்நாட்டுக்கு ஏற்ற தொழில்கள் எவை?

‘‘தமிழனின் வாழ்வாதாரமான தொழில் விவசாயம்தான். நமது பாரம்பரியத் தொழிலும் அதுதான். எனவே பனை, தென்னை ஓலைகளில் செய்யும் பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும். இயற்கையில் விளையும் எந்த ஒரு பொருளையும் வீணடிக்காமல் அதை மறுசுழற்சி முறையில்
பயன்படுத்த வேண்டும். பண்டைய காலத்தில் இயற்கைப் பொருட்களிலிருந்து கிடைக்கும் வர்ணங்களையும், இயற்கை நார்
இழைகளையும் நெசவுக்கு பயன்படுத்தினார்கள்.

அதேபோல் நம் முன்னோர்கள் ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லி மருந்துகளையோ ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. பூச்சிகளைக் கொன்றதும் இல்லை. உயிர்ச்சங்கிலியின் உன்னதத்தை உணர்ந்திருந்தார்கள். பசு, எருது என பிராணிகளின் கழிவுகளே உரங்கள். இன்று இயற்கை விவசாயம் செய்பவர்களையோ, உரம் தயாரிப்பவர்களையோ அரசாங்கம் ஊக்கப்படுத்துவதும் இல்லை.

அந்நிய உரத்தொழிற்சாலைகளையும், பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனங்களையும் அரசு மூட வேண்டும். விவசாய உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்கலாம். இங்குள்ள இயற்கை விவசாயிகளையும், விவசாயத்தோடு இணைந்த தொழில்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். நமக்கு அணு உலைகளோ, தாமிர ஆலைகளோ தேவையில்லை.நம் மண்ணுக்கேற்ற பாய் முடைதல், கயிறு பின்னுதல் போன்ற சிறு, குறுந்தொழில்களை வளர்க்கலாம். தற்போது வாழை நார், தென்னை நார் போன்ற இயற்கைப் பொருட்களை வைத்து உடைகளை தயாரிக்க முன் வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தலாம்.

3 மாதத்துக்கொரு முறை பெய்ய வேண்டிய மழை பெய்வதில்லை. நீர் ஆதாரங்களான காவிரி, தாமிரபரணி ஆறுகள் வற்றிவிட்டன. ஆற்றுப்படுகைகள் வறண்டு கிடக்கின்றன. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட ஆறுகளும், குட்டைகளும் இன்று கான்கிரீட் குவியல்களாகிவிட்டன.

இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால், இன்னும் பதினைந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கால்வாசிப்பகுதி வறண்ட பாலை நிலங்கள் ஆகிவிடும். மக்கள் நாம் விழித்துக் கொண்டால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும்.’’