ஆட்சியாளர்களுக்கு பொறுப்புணர்வுடன் விழிப்புணர்வும் தேவை!



கவர் ஸ்டோரி

ஒரு மாநிலத்தின், தேசத்தின் முன்னேற்றம் என்பது தொழில் வளர்ச்சியையும் உள்ளடக்கியதுதான். தொழில்வளர்ச்சியை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. எனவே, தொழில் வளர்ச்சியை முன்னெடுக்கும்போது ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும் பொது நல மருத்துவருமான ரவீந்திரநாத்திடம் கேட்டோம்...

‘‘தனிப்பட்ட ஒரு மனிதனுடைய,  தேசத்தினுடைய பொருளியல் தேவைகளை நிறைவு செய்ய தொழில் வளர்ச்சி மிகவும் அவசியம். பல்வேறு பண்டங்களின் உற்பத்தி முக்கியம். அவ்வாறு உற்பத்தி செய்யும்போது, அதில், வாழ்வுரிமையை உண்டாக்கும் சூழலை ஏற்படுத்தியே அந்த பண்டங்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

அதிகளவில் மக்களைப் பாதிக்கக்கூடிய தொழிற்சாலைகளையோ அல்லது தொழில் சார்ந்த நிறுவனங்களையோ மக்கள் தொகை நெருக்கம் உள்ள பகுதிகளில் ஆரம்பிக்கக் கூடாது.தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பல இடங்களில் இதுபோன்ற சர்ச்சைகளும், போராட்டங்களும் நிகழ்ந்துவருகின்றன. சுற்றுச்சூழலையும், உயிரினங்களின் ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையிலேயே பலவிதமான தொழிற்சாலைகளை நிறுவி, தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை வளர்ந்த நாடுகள் சோதனை எலிகளாகவும், தங்களுக்குத் தேவையானவற்றை சாதித்துக் கொள்ள உதவும் சோதனைக் கூடங்களாகவும்தான் பார்க்கின்றன. தங்களுடைய நீர், நிலம், காற்று போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாத்துக் கொண்டு, இந்தியா போன்ற பல நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதன் சூழ்ச்சியை நம் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

மீத்தேன், ஸ்டெர்லைட், அணுக்கதிர் போன்ற அபாயகரமான வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலமாக தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் பரம்பரையாக ஒருவருக்கு வர வாய்ப்பு உள்ளது. இதை உணராமல் மத்திய, மாநில அரசுகள் லாப நோக்கத்துக்காக தனியார் தொழில் நிறுவனங்களை
மக்கள் நெருக்கம் காணப்படுகிற இடங்களில் தொடங்க அனுமதிப்பது சரியல்ல. ஆலைகளை நடத்துவதன் காரணமாக ஏற்படுகிற விளைவுகளுக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ளாத நிலையும் நம் நாட்டில் காணப்படுகிறது.

போபாலில் 1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த விஷவாயு கசிவு சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்த துயர சம்பவத்தில், அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யூனியன் கார்பைட் என்கிற பூச்சிக்கொல்லி மருந்தை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையின் கவனக்குறைவால், 10 ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிட்டது.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பார்வை குறைபாடு, சுவாசக் கோளாறு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர். இன்று வரையிலும் அந்த பாதிப்பின் தாக்கம் நீடிக்கிறது. ஆனால், அந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனம் சார்பாக, இன்றுவரை ஒரு பைசாகூட நிவாரணமாக தரப்படவில்லை.

அதற்குப் பதிலாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளரான வாரன் ஆண்டர்சன் மத்திய அரசின் உதவியுடன் தனது நாட்டுக்குப் பத்திரமாக தப்பிச் சென்றுவிட்டார்.தொழில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும்போது ஸ்டெர்லைட் ஆலை போன்ற நிறுவனங்களால் நிலம், நீர், காற்று மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் நிலம், தொழிற்சாலை உள்ளிட்ட பல உற்பத்தி சாதனங்கள் தனியார் வசம் இருப்பதாலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

தொழிற்சாலை தொடங்கப்படும் பகுதி மக்கள் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் சீர்குலையும் என அச்சப்படுகின்றனர். மக்களின் இந்த அச்ச உணர்வை மதம், இனம், சாதியவாத மற்றும் பிற்போக்கு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. அதனுடன் நமது சமூக, தொழில் வளர்ச்சியும் தடுக்கப்படுகிறது. எனவே தனிநபர் நலன், சமூக நலன் முரண்படாத நிலை உருவாக வேண்டும். அப்போதுதான்
இப்பிரச்னை தீரும்.’’

விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய விஷயத்தில் கையாள வேண்டிய நடைமுறைகள் என்ன?

‘‘தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான நிலத்தைக் கையகப்படுத்தும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். நில உரிமையாளருடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும். நிலத்துக்கு அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலை வழங்க வேண்டும். நிலத்தைப் பல ஆண்டுகள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால், அதனை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தேவைப்பட்டால், நிலத்துக்குச் சொந்தக்காரரைப் பங்குதாரராகவும் ஆக்கலாம்.

இதனால், தொழில்துறை வளரும். தனியாருக்கும் இதே மாதிரியான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். முக்கிய தொழிலாக இருந்தால், அரசே தொடங்க வேண்டும். ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பு வரக்கூடாது.

தொழிற்சாலை தொடங்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். வெளிநாடுகளில் இதுபோன்ற கருத்துகேட்பு நடைமுறையில் உண்டு. அதேபோல் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அதிகாரம் கிராம பஞ்சாயத்திடம் இருக்க வேண்டும். இதனுடைய அனுமதி இல்லாமல், எந்தவொரு புதிய தொழிற்சாலைகளையும் தொடங்க கூடாது.’’

தன்னலமற்ற செயல்பாடுகளுக்கான சாத்தியம் இருக்கிறதா?

‘‘எல்லா தொழிற்சாலைகளின் முதலாளிகளும் சுயநலம் சார்ந்துதான் செயல்படுகின்றனர். லாபம் ஈட்டுவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஒரு தனிமனிதர் அப்படி இருக்கலாம். ஆனால், அரசாங்கமோ, அரசாங்கத்தின் பிரதிநிதியோ அப்படி இருக்கக் கூடாது.

‘கஞ்சன் தன்னைக் கொள்ளை அடிக்கிறான். ஊதாரி தன் வருங்கால தலைமுறையையே கொள்ளை அடிக்கிறான்’ என்ற பழமொழி ஒன்று உண்டு. குறுகிய கால லாபத்துக்காக மக்கள் விரோத செயலில் ஈடுபடும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தங்களுடைய தலை
முறையினருக்கும் அந்த பாதிப்பு இருக்கும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

எனவே, புதிதாக ஒரு நிறுவனம் தொழில் தொடங்க வருகிறதென்றால் அதுபற்றிய முழுமையான புரிதல் அரசுக்கு வேண்டும். சில ஆயிரம் பேருக்கு வேலை, தொழில் வளர்ச்சி என்று மேலோட்டமாக மட்டுமே பார்க்கக் கூடாது.

குறுகிய கால லாபங்களையும் பார்க்கக் கூடாது. நம் மாநிலத்தின் இயற்கை வளம் பாதிக்கப்படுமா, அதனால் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு சிக்கல் வருமா என்று தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் வகையில் ஓர் அரசாங்கம் இருக்க வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகும் அவற்றை முறையாக கண்காணிப்பது மிகவும் அவசியம். விதிமுறைகள் முழுமையாக முறையாக பின்பற்றப்படுகிறதா, சுற்றுச்சூழல் ஏதேனும் மாசடைகிறதா, மக்களுக்கு ஏதேனும் பாதிப்பா என்பதை தொடர்ச்சியாக அறிந்துகொள்ள வேண்டும்.
நீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை அவசியம் மறுசுழற்சி செய்ய வேண்டும்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும். திருப்பூர் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாத காரணத்தால் நொய்யல் ஆறு அழிவுக்கு உள்ளானதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் மறுசுழற்சி மையம் அமைப்பதற்கு அரசு மானியம் தர வேண்டும். சுற்றுச்சூழலும், மக்களும் பாதிக்கப்படும் பட்சத்தில், அதற்கான உரிய இழப்பீட்டைத் தர வேண்டும். முக்கியமாக, ஒரு தொழிற்சாலையால் மக்களின் ஆரோக்கியத்துக்கோ, இயற்கைக்கோ அச்சுறுத்தல் ஏற்படுவது உறுதியானால் தாமதிக்காமல் அந்த ஆலையை மூடவும் தயங்கக் கூடாது’’ என்கிறார்.

-தொகுப்பு : குங்குமம் டாக்டர் டீம்