கார் ஏசி பயன்பாட்டில் கவனம் தேவை



எச்சரிக்கை

‘‘பல ஆண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் லிஜியான் என்ற இடத்தில் ஏர்-கண்டிஷன் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதா என்பது பற்றி கருத்தரங்கு, ஆராய்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கு என்ன காரணம் என்று அங்குள்ளவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவில், ஏ.சி. மெஷினில் இருந்து வெளிவந்த ஒரு வகையான கிருமிதான் நம்முடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது எனக் கண்டறிந்தனர். லிஜியான் என்ற இடத்தில் இவ்வாய்வு நடைபெற்றதால், அந்தக் கிருமிக்கு அவ்விடத்தின் பெயரே வைக்கப்பட்டது.

குளிர்சாதன கருவியில் இருந்து அளவுக்கு அதிகமாக கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம் ஒருவருக்கு ஏற்படுகிற பாதிப்புக்களைத் தொற்று, தொற்று இன்மை என 2 வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

காற்று வெளியேறாத அளவுக்கு நன்றாக மூடப்பட்ட அறையிலோ, காரிலோ ஏ.சி.யின் கீழே தூங்குபவர்களுக்குத் தொற்று மூலமாக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. தொற்று இன்மையால் ஒருவருக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளில் ABG எனக் குறிப்பிடப்படுகின்ற Arterial Blood Gas முக்கிய இடம் பெறுகிறது. இந்த வாயுவினால், மூக்கடைப்பு போன்ற சுவாச பிரச்னைகள், சோர்வு, தோல் எரிச்சல், தலைவலி எனப் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பெரும்பாலானோர் இன்று சொந்த ஊர், வெளியூர் என நீண்ட தூரம் காரில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு செல்லும்போது, இரவு நேரங்களில் காரைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு தூங்குகின்றனர். அந்த சமயங்களில், கதவு மற்றும் கண்ணாடிகளை இறுக மூடி, ஏ.சி.யை அதிகமாக வைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக, கார் டிரைவர்கள் இப்படி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது. உயிரிழப்புக்குக்கூட இது வழி வகுக்கும்.

ஏனென்றால், காற்று வெளியேற வழி இல்லாமல், ஒரே இடத்தில் சுழன்று கொண்டு இருக்கும். இதனால், பிராண வாயுவான ஆக்சிஜன்(O2) அளவு குறைந்து, சுவாசிப்பதற்கு தகுதியற்ற கார்பன்-டை ஆக்சைடு(CO2) அளவு அதிகரிக்கும். மேலும், காரில் தூங்குபவர்களுக்கு நச்சுக்காற்றை சுவாசிப்பது கொஞ்சமும் தெரியாது. அவர்களுடைய மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவதால், அது மெல்லமெல்ல செயல் இழக்க தொடங்கும்.

எனவே, அவர்களால் காரில் இருந்து தானாக வெளியேற முடியாது. இதுபோன்ற ஆபத்தான நிலையில், மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு காரில் உட்கார்ந்தவுடனே ஏ.சி.யைப் போட்டு, ஜன்னலை இறுக மூடக்கூடாது. சற்று இடைவெளி விட்டு மூடுவது பாதுகாப்பானது. ஏ.சி.யின் கீழே உறங்கும்போது, முகத்திற்கு நேராக ஏ.சி. படாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

நிழலான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள காரின் உள்ளே 400-லிருந்து 800 மில்லி கிராம் பென்சீன் இருக்கும். திறந்த வெளியில் சூரிய வெளிச்சம் நேரடியாகப் படும்படி உள்ள வாகனத்தில் 4000 மில்லி கிராம் பென்சீன் காணப்படும். இது சராசரியாக நமது உடல் ஏற்றுக்கொள்ளும் அளவைவிட, 40 மடங்கு அதிகம். இதனால், கிட்னி, சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிப்பு அடையலாம். இதுதவிர, புற்றுநோயும் ஏற்படலாம்.

கார் போன்ற வாகனங்களில், ஏ.சி.யின் கீழே உயிருக்கு ஆபத்தான நிலையில் மாட்டிக் கொண்டவர்களால் மற்றவர் உதவி இல்லாமல் வெளியே வர முடியாது. எனவே, சற்றும் தாமதிக்காமல், கதவினை உடைத்து அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும். பின்னர், ஆடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.

காற்றோட்டமான இடத்தில் அவர்களைப் படுக்க வைக்க வேண்டும். அந்த நபர்களின் உடல் நிலையைப் பொறுத்து, டாக்டர் ஆலோசனைப்படி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை தருவது அவசியம். இவ்வாறு செய்வதால் பயப்படும்படி எதுவும் நடக்காமல் தடுக்கலாம்’’ என அறிவுறுத்துகிறார்.

- விஜயகுமார்

படம்: ஏ.டி. தமிழ்வாணன்