ALLOPATHY Vs ALTERNATE எது எனக்கான மருத்துவம்?!



விவாதம்

எண்ணற்ற நோய்களுக்கு சரி நிகராக, ஏராளமான மருத்துவ முறைகளும் இன்று வழக்கத்தில் உள்ளன. இவற்றில் எது சரியானது என்ற புரிதலும், தெளிவும் இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற மருத்துவ முறையைத் தேடி அலைகின்றனர். திடீரென சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவத்தை விட்டுவிட்டு மாற்று மருத்துவத்துக்கும் போய்விடுகின்றனர். மாற்று மருத்துவத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கின்றனர்.

உண்மையில் ஆங்கில மருத்துவம், மாற்று மருத்துவம் எது சரியானது? எப்போது எந்த அளவில் மாற்று மருத்துவத்தை, ஆங்கில மருத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?

மருத்துவ நிபுணர்கள் இங்கே பேசுகிறார்கள். பொதுநல மருத்துவர் அரசு மோகனிடம் இதுபற்றி கேட்டோம்...

‘‘உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் முதலில் அலோபதி மருத்துவத்தைத்தான் நாடுகிறார்கள். நாளாக நாளாகத்தான் மாற்று மருத்துவ முறைகளுக்கு மாறத் தொடங்குகின்றனர். குறிப்பாக ஆஸ்துமா, மூட்டுவலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுகிறவர்கள் மாற்று மருத்துவத்தை அதிகம் நாடத் தொடங்குகின்றனர்.

பாரம்பரியம் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிற அத்தகைய மருத்துவத்தில் தரப்படுகிற மருந்துகளில் தங்கம், வெள்ளி, பாதரசம், ஈயம் முதலான உலோகங்கள் கணிசமாக சேர்க்கப்படும். இவை நமது உடலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. வீரியம்மிக்க இந்த உலோகங்கள் நமது உடலினுள் செல்லும்போது சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகள் கிழிபடவும், பாதிப்படையவும் வாய்ப்புகள் அதிகம். ஒருவர் தொடர்ந்து நாட்டு மருந்துகளை சாப்பிட்டு வரும்போது, அவற்றில் சேர்க்கப்படும் உலோகங்கள் சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளில் அப்படியே தங்கிவிடும்.

நாளடைவில், சிறுநீரகத்தில் சேரும் உலோகங்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, ஒரு கட்டத்தில் அந்த உறுப்பு முழுவதுமாக செயல் இழந்துவிடக் கூடும். நாட்டு மருத்துவத்தின் கலப்படம் காரணமாக 75 சதவீத நோயாளிகள் பாதிப்பு அடைகின்றனர்’’ என்றவரிடம், ஆங்கில மருத்துவத்தில் இருந்து, மாற்று மருத்துவத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன என்ற கேள்வியை முன் வைத்தோம்...

‘‘அலோபதி மருத்துவத்தில் எந்த ஒரு சிகிச்சையும், எந்த ஒரு மருந்தும் பல வருடங்களாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே மக்களின் பயன்பாட்டுக்கு வரும். க்ளினிக்கல் பரிசோதனை முறை, விலங்குகள், மனித இனம் என 3 முறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். இறுதியாகத்தான், மக்களின் பயன்பாட்டுக்கே வரும். இதனால்தான் அலோபதி மருத்துவத்தை Evidence Based Medicine என்கிறார்கள்.

சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவத்தை Non-Evidence Based Medicine என குறிப்பிடுவார்கள். அதனால், அறிவியல்ரீதியான ஆங்கில மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது’’ என்கிறார்.சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம் இது பற்றி தன் பார்வையை முன் வைக்கிறார்.
‘‘நோயாளியின் உடலின் தன்மை மற்றும் வன்மையைப் பொறுத்து அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் முறைதான் சித்த மருத்துவம். ஒருவரின் ஆரோக்கியம், அவரவர் வாழும் பூகோளத்தைப் பொறுத்துதான் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது சித்தர்களால் தோன்றுவிக்கப்பட்ட ஒரு தத்துவார்த்த மருத்துவ முறை. சித்தர்கள் தங்களின் அனுபவத்திலிருந்தும், மருத்துவ ஞானத்திலிருந்தும் மருந்தாக தந்து சிகிச்சை அளிக்கும் முறை. நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு இந்த ஐந்தையும் வெற்றி கொள்வதே சித்த மருத்துவம். இதில் நோய்களுக்கான மூல காரணிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.மாற்று மருத்துவத்தில் அவசர சிகிச்சை தர முடியாது.

இதய நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், விபத்து, வலிப்பு, தீவிரமான புற்றுநோய் மற்றும் நோயாளியின் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மாற்று மருத்துவத்தைக் கையாள எல்லோராலும் முடியாது. அதுபோல ஒரு நோய் முற்றிய நிலையிலும், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும் அவருக்கு உடனடியாக நவீன மருத்துவத்தைத்தான் கொடுக்க வேண்டும். அதிலிருந்து அவர் மீண்ட பிறகு அந்த நோய் அவரைத் திரும்பவும் தாக்காமல் இருக்க அவர் மாற்று மருத்துவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அதுபோல சாதாரண உடல்நலக் கோளாறுக்கும் அல்லது நாள்பட்ட நோய்களுக்கும் நவீன மருத்துவத்தை தவிர்த்துவிட்டு மாற்று மருத்துவத்தை எடுத்துக் கொள்ளலாம். காரணம் நவீன மருத்துவத்தில் நிறைய ரசாயன மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் காரணமாக பக்கவிளைவுகள் ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும்.

மாற்று மருத்துவம் என்பது பாரம்பரிய மருத்துவ முறையாக இருப்பதால் அது உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும்.’’
நவீன மருத்துவத்தை எடுத்துக் கொள்ளும்போது அதை நிறுத்திவிட்டு மாற்று மருத்துவம் எடுத்துக் கொள்ளலாமா?

‘‘குடற்புண், சரும நோய்கள் போன்றவற்றுக்கு நவீன மருத்துவத்தை விட்டு சித்த மருத்துவத்தை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல நீரிழிவு, ரத்த அழுத்தம், தீவிரப் புற்றுநோய், வலிப்பு நோய் போன்றவற்றுக்கு நவீன மருந்து எடுத்துக் கொள்பவர்கள், அதனுடன் மாற்று மருத்துவத்தையும் மருத்துவர் ஆலோசனையின்படி எடுத்துக் கொண்டால் நோயின் தாக்கம் குறையும்.  உடனடியாக ஆங்கில மருத்துவத்தை நிறுத்துவது தவறு. நோய்த்தாக்கம் குறையும்போது நவீன மருந்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளலாம்.’’

மாற்று மருத்துவத்தில் நோய் குணமடைய நீண்ட நாட்கள் ஆவது ஏன்?

‘‘ஒரு நோயின் தன்மை மற்றும் அதன் வன்மை, நோயாளியின் தன்மை மற்றும் வன்மையைப் பொறுத்தே ஒரு மருந்து தரப்படுகிறது. அது அந்த நோயின்
 மூல காரணத்தை அறிந்து அந்த நோயைத் திரும்ப வராமல் செய்து, நோயை எதிர்கொள்கிற ஆற்றலை உடலுக்கு நிரந்தரமாகத் தந்து குணமடையச் செய்கிறது.

இதை மாற்று மருத்துவத்தின் பலவீனம் என்று நினைக்கக் கூடாது. அதனால், நவீன மருத்துவத்தோடு கூடிய மாற்று மருத்துவத்தையும் மக்கள் மத்தியில் அரசு எடுத்துச் செல்ல வேண்டும். இரண்டையும் தேவையான அளவில் மருத்துவர்களின் ஆலோசனையோடு பயன்படுத்திக் கொள்ள மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.

பொது நல மருத்துவரான சிவராம கண்ணன் இதுபற்றி தன்னுடைய கருத்தை முன் வைக்கிறார். ‘‘அலோபதி மருத்துவம் வந்ததற்கு பிறகுதான் மனித குலத்துக்கு ஆயுள் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 40 வருட ஆயுளை 100 வயது வரைக்கும் கொண்டுபோனது அலோபதி மருத்துவம்தான். காலரா, அம்மை, போலியோ போன்ற நோய்களை அலோபதி தடுத்திருக்கிறது. எய்ட்ஸ், நீரிழிவு போன்ற நோய்களின் வாழ்நாளை அதிகரித்து கட்டுக்குள் வைத்திருக்கிறது.

அலோபதி மருத்துவமுறை என்பது காலத்திற்கேற்ப அறிவியலை உள்வாங்கி இயங்கக் கூடிய ஒரு மருத்துவ முறை. அலோபதி மருத்துவ முறையிலிருந்துதான் நோய்களை முன்னரே கண்டறியக் கூடிய எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த பரிசோதனை, லேப்ராஸ்கோப்பி, ரோபோடிக் சர்ஜரி என பரிசோதனை முறைகள் உருவாகியிருக்கின்றன.

நோய்க்கு தக்க மருத்துவரை அணுகாமல் போலி மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை உட்கொண்டுவிட்டு, பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அலோபதி முறையை தவறு என்று சொல்ல முடியுமா? முதலில் மக்கள் சரியான மருத்துவரை அணுகி என்ன நோய் என்பதை முதலில் பரிசோதிக்க வேண்டும், பிறகு உடலின் தன்மையை அறிந்து அதற்கேற்ப மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார்.  நவீன மருத்துவம், மரபு மருத்துவம் எப்போது ஒருவருக்குத் தேவை என்று அக்கு ஹீலர் சண்முகசுந்தரத்திடம் கேட்டோம்...

‘‘உலகம் முழுவதும் சுமார் 104 சிகிச்சை முறைகள் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் அந்தந்த பகுதியில் வாழ்ந்தவர்களின் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் அனுபவம் உணர்த்திய உண்மைகளின் மூலம் உருவானவை. இவை அனைத்தும் எளிய சிகிச்சைமுறைகள் என்றாலும் வீரியமிக்கவை ஆகும். நோயை அறிய பல்லாயிரம் செலவழிக்க வேண்டிய அவசியம் மாற்று மருத்துவத்தில் இல்லை.

அக்குபங்சரில் சிகிச்சைக்கு வருவோரின் பிரச்னையை மட்டுமே கேட்டு, நாடி மூலம் உடல்நிலையை ஆராய்ந்து, பாதிப்படைந்த உறுப்பை சரி செய்ய அவர் உடலில் குறிப்பிட்ட புள்ளியை தொட்டு சிகிச்சை அளிக்கிறோம். இவை எதுவுமே ஆங்கில மருத்துவத்துக்கு மாற்றாக துவங்கப்பட்ட மருத்துவ முறையல்ல, மாறாக, ஆங்கில மருத்துவத்துக்கும் முற்பட்ட மரபு மருத்துவங்களாகும்.

தொடக்கத்தில் ஆங்கில மருத்துவத்திலும் மருத்துவர்தான் மருந்துகளைத் தயாரித்தார். ஆனால், தொழிற்புரட்சிக்குப் பின்னர் லாப நோக்கில் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். உற்பத்தி செய்த மருந்துகளை லாப இலக்கு வைத்து விற்பனைப் பிரதிநிதிகள் மூலமும், மருத்துவர்களுக்கு சலுகைகள் கொடுத்தும் மருந்து விற்பனை செய்கிறார்கள்.

ஆங்கில மருத்துவத்தை விளம்பரப்படுத்துவதும், விரும்புவோர் பயன்படுத்துவதும் அவரவர் உரிமை. ஆனால், பாரம்பரிய மருத்துவமுறைகளை அறிவியலுக்குப் புறம்பானது என்றும், மரபு மருத்துவ முறைகள் பத்தாம் பசலித்தனமானவை என்றும் சொல்வதற்கு  யாருக்கும் உரிமையில்லை. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியாது. எனவே, ஆயுள் முழுவதும் தினசரி மருந்து சாப்பிடவேண்டும் என்று எந்த மரபு மருத்துவமும் சொல்வதில்லை.

அனைத்து நோயும் முற்றிலும் குணமாகும் என்று சொல்வதோடு, புதிய புதிய நோய்களையும் பக்கவிளைவுகளே இல்லாமல் குணப்படுத்தும் வல்லமை கொண்டவை மரபு மருத்துவங்கள். எனவே, மரபு மருத்துவம் மூலமாக மட்டுமே நோயற்ற சமூகத்தை உருவாக்க முடியும். ஆங்கில மருத்துவத்துக்கு இணையான முக்கியத்துவத்தை மரபு மருத்துவமுறைகளுக்கும் அரசு அளிக்க வேண்டும்’’ என்கிறார்.

- விஜயகுமார், க.இளஞ்சேரன்

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்