டியர் டாக்டர்




*உறுப்பு மாற்று அறுவை  சிகிச்சை பற்றிய இன்னோர் பக்கத்தை அறிமுகப்படுத்தியது கவர் ஸ்டோரி. அதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதும், ஏழைகளைக் குறிவைத்து மட்டுமே விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் சம்மந்தப்பட்டவர்களால் பதிலளிக்கப்பட வேண்டியவை. அதேபோல், அதன் வெற்றி விகிதம் பற்றிய விபரங்களை வெளியிடுவதில் மருத்துவ வட்டாரங்கள் மௌனமாக இருப்பதும் விவாதிக்க வேண்டியதே!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

*கோடை காலத்தில் முதியோரின் உடல்நிலை பராமரிப்பு குறித்து நீங்கள் சொல்லியிருந்த ஆலோசனைகள் காலமறிந்து கொடுக்கப்பட்ட அருமருந்து. நம் ஊரில் முன்பு நல்லெண்ணெயில் செய்யப்பட்ட ஆயில் புல்லிங்கை இப்போது தேங்காய் எண்ணெயினால் வெளிநாட்டினர் செய்கிறார்கள் என்ற தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. நம் முன்னோரின் மருத்துவ அறிவு பற்றிய வியப்பையும் தந்தது.
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

*வெயில் ஆரம்பித்திருக்கும் நேரத்தில் அம்மை நோய் பற்றிய அலர்ட் கட்டுரை பாராட்டத்தக்கது. பயன்படக் கூடியது. ‘டயாபட்டீஸ்ல இன்னும் 3 டைப் இருக்காம்...’ ‘அழுகையும் அவசியம்தான்...’ கட்டுரைகள் சுவாரஸ்யம்!
- சு.இலக்குமணசுவாமி, மதுரை-6.

*பெண்களுக்கு மெனோபாசுக்குப் பிறகு எலும்புகள் நலனைப் பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றிக் கூறியிருந்தார் எலும்பு மருத்துவர் ராதாகிருஷ்ணன். நண்டில் இருக்கும் கனிமங்கள், புரதச்சத்துகள் பற்றியும் அதை சமைக்கும் விதத்தைப்பற்றியும் விளக்கியிருந்த கட்டுரையையும் ரசித்து வாசித்தேன்.
- வி.கிருஷ்ணன், சென்னை - 5.

*தசை வலிக்கும், எலும்பு வலிக்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கும் பலருக்கும் ‘தசைவலிக்கு தனி சிகிச்சை’ கட்டுரை தெளிவைத் தந்திருக்கும்.
- சூர்யா, ஆத்தூர்.