சோர்வு இனி இல்லை...



மகளிர் மட்டும்

உடல் இயங்க ரத்த ஓட்டம் அவசியம். நம் உடல் திசுக்களுக்குப் போதுமான அளவு ஆக்சிஜனைக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு நம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைகிற நிலையைத்தான் ரத்தசோகை என்கிறோம்.சாதாரணமாக காய்ச்சலுக்கு மருத்துவரைப் பார்க்கச் சென்றால்கூட அவர் முதலில் கண்களையும், நாக்கையும், நகங்களையும் பார்ப்பதன் பின்னணி இதுதான்.

ரத்தசோகை என்பது சாதாரண களைப்பில் தொடங்கி, உயிரையே பறிக்கும் அளவுக்கு பயங்கர விளைவை ஏற்படுத்தக்கூடியது.சின்ன அறிகுறிகள், சிம்பிளான பரிசோதனைகள், எளிய சிகிச்சைகளின் மூலம் இந்தப் பிரச்னையை வெல்லலாம் என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.

அறிகுறிகள்...

களைப்பு, மயக்கம், வெளிர் சருமம், தலைவலி, கைகள் மற்றும் பாதங்களில் மரத்துப்போன உணர்வு மற்றும் சில்லிட்டுப்போவது, உடலின் வெப்பநிலை குறைவது. இதயம் பத்திரம் ரத்தசோகைக்கும் இதயத்துக்கும் என்ன சம்பந்தம் என நினைக்காதீர்கள். ரத்தசோகை பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். எனவே, அதை சமாளித்து உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தை அனுப்ப இதயமானது கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். ரத்தசோகை உள்ளவர்களின் இதயத்துடிப்பு முறையற்று இருக்கும். மூச்சு விடுவதில் சிரமமும், நெஞ்சு வலியும் இருக்கலாம்.

குழந்தைகளை கவனியுங்கள்

குழந்தைகளையும் ரத்தசோகை பிரச்னை அதிகம் தாக்கும். பெரும்பாலான குழந்தைகளின் உணவில் போதுமான அளவு இரும்புச்சத்து இருப்பதில்லை. அதனால் ரத்தசோகை ஏற்பட்டு, அதன் விளைவாக குழந்தைகள் மண், சிலேட்டுக்குச்சி, ஐஸ் கட்டி போன்று கண்டதையும் தேடித் தின்பார்கள்.

குழந்தைகள் பிறந்த ஒரு வருடத்தில் அவர்களுக்கு ரத்தசோகை இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.

சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமலோ, முறையான சிகிச்சைகள் அளிக்கப்படாமலோ தவிர்ப்பது குழந்தையின் மூளையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.உங்கள் டீன் ஏஜ் மகள்கள் அடிக்கடி சோர்ந்து, களைத்துப் போகிறார்களா... ரத்தசோகை காரணமாக இருக்கலாம். அந்த வயதில் அவர்களுக்கு ரத்தசோகை தாக்கும் வாய்ப்புகள் அதிகம். உணவு, வாழ்க்கை முறை என பல காரணங்களால் அது பாதிக்கலாம்.

பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் காணப்படும். அதிலும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இது இன்னும் அதிக பிரச்னைகளைத் தரும். மாதந்தோறும் மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பு காரணமாகவும் ரத்தசோகை அதிகரிக்கும். சிறுநீரகக் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு அவர்களது உடலால் போதுமான ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம்.

இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் பி 12 போன்ற சத்துகள் குறைவான உணவுகளை உட்கொள்கிறவர்களுக்கும் ரத்தசோகை பிரச்னை தீவிரமாகும். இது தவிர சில பெண்களுக்கு பரம்பரையாகவும் ரத்தசோகை பிரச்னை தொடரக்கூடும்.
காரணங்கள்...

* இரும்புச்சத்து குறைவான உணவு உட்கொள்வதுதான் ரத்தசோகைக்கான முதல் முக்கிய காரணம்.

* செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கும் உடலில் ரத்த சிவப்பணுக்களை உறிஞ்சும் சக்தி குறைவாக இருக்கும்.

* காஃபி, டீ போன்ற பானங்களும், கால்சியம் சப்ளிமென்ட்டுகள், ஆன்ட்டாசிட் (நெஞ்சுகரித்தல்) வகை மருந்துகள் போன்றவையும் ரத்தசோகைக்கு வழிவகுக்கலாம்.

* ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலேட் சத்துகள் அவசியம். இந்த இரண்டும் குறைவான உணவுகளை உட்கொள்வோருக்கு ரத்த சோகை தாக்கலாம்.

* அசைவ உணவுகளிலும் செறிவூட்டப்பட்ட உணவுகளிலும் வைட்டமின் பி 12 பெறலாம். அதேபோல பச்சைக் காய்கறிகள், கீரைகள், பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றின் மூலம் ஃபோலேட் சத்தைப் பெறலாம்.

* தீராத நோய் மற்றும் தொற்றுகள் இருந்தாலும் ரத்தசோகை பாதிக்கும்.

* மருத்துவரின் பரிந்துரையின்றி சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்வோருக்கு ரத்தசோகை சகஜமாக பாதிக்கும். எனவே, அதைத் தவிர்க்க வேண்டும்.

* Aplastic anemia என்றொரு அரிய வகை ரத்தசோகை உண்டு. உடலுக்குத் தேவையான ரத்த செல்களை எலும்பு மஜ்ஜைகள் உற்பத்தி செய்யாததே இதற்குக் காரணம். எலும்பு மஜ்ஜையைப் பாதிக்கும் ரேடியேஷன், சில வகை கெமிக்கல் தாக்குதல், குறிப்பிட்ட சில பணியிடச்சூழல் போன்றவை இதற்குக் காரணமாகலாம். பரம்பரையாகவும் தாக்கலாம். ரத்த மாற்று மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள்தான் இவர்களுக்கான தீர்வுகளாக அறிவுறுத்தப்படும்.

* மாதவிலக்கு மட்டுமின்றி அறுவை சிகிச்சை, அடிபடுதல், புண்கள் போன்றவற்றின் மூலம் ரத்த இழப்பை சந்திப்பதும் ரத்தசோகைக்கான காரணங்கள். தவிர சிலவகை மரபியல் கோளாறுகள், சிக்கெல் செல் சின்ட்ரோம் என்கிற விசித்திர பிரச்னை போன்றவற்றாலும் ரத்தசோகை
தாக்கும்.

பரிசோதனைகள்...

ரத்தப்பரிசோதனை செய்கிற பலரும் வெறும் ஹீமோகுளோபின் அளவை மட்டும் பார்த்து அலட்சியமாக விடுகிறார்கள். ஆனால் அது தவறு.Complete blood count என்கிற சோதனைதான் ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளையணுக்கள், ஹீமோகுளோபின் என அனைத்தின் அளவுகளையும் சொல்லும். தவிர ரத்தத்தின் அடர்த்தி, ரத்த செல்களின் அளவு உள்ளிட்ட நுணுக்கமான தகவல்களையும் சொல்லும். ரத்தசோகை இருப்பவர்களுக்கு ரத்த சிவப்பணுக்கள் மற்றவர்களைவிட அளவில் சிறிதாக இருக்கும். அதையெல்லாம் கம்ப்ளீட் பிளட் கவுன்ட்டில்தான் கண்டுபிடிக்க முடியும்.

அதைத்தாண்டியும் சில சோதனைகள் தேவைப்படும். சந்தேகத்தின் அடிப்படையில் எலும்பு மஜ்ஜைகளுக்கான போன் மேரோ டெஸ்ட் போன்றவற்றை
மருத்துவர் முடிவு செய்வார்.

சிகிச்சைகள்

ரத்தசோகையின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான மருந்து, மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.  உணவிலும் மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். ஏபிளாஸ்டிக் அனீமியா என்றால் ரத்த மாற்று மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளும், தாலசீமியாவுக்கு வேறு சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும்.

தவிர்ப்பது எப்படி?

உணவின் மூலம் தவிர்க்கலாம். இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், கீரைகள், ஈரல், மீன் போன்றவற்றை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள பால், முட்டை, பசலைக்கீரை போன்றவை அவசியம்.இரும்புச்சத்து உடலில் கிரகிக்கப்பட வேண்டும் என்றால் வைட்டமின் சி சத்து அவசியம்.

ஆரஞ்சு போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும். மருத்துவர் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்வதும் சிகிச்சைகளைத் தொடர்வதும் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.  அது கணையம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகளைப் பாதிக்கலாம்.

- ராஜி