பட்டர் காஃபி



டிரெண்டிங்

பட்டர்னா வெண்ணெய் ஆச்சே... வெண்ணெய்க்கும் காஃபிக்கும் என்ன சம்மந்தம் என்று தோன்றுகிறதா?! ‘யெஸ்... சம்மந்தம் இருக்கு யுவர் ஆனர்’ என்று லேட்டஸ்ட் ஹெல்த் டிரெண்ட் அதற்கான ஆதாரத்தையும், ஆதாயத்தையும் வலுவாகக் காண்பிக்கிறது.

சாதாரணமாக நாம் தயாரிக்கும் காஃபி போலவே, காஃபி பவுடருடன் பாலுக்குப் பதிலாக வெண்ணெய் சேர்ப்பதுதான் பட்டர் காஃபி(Butter Coffee). இந்த காம்பினேஷன் வினோதமாக தோன்றினாலும், இதுதான் இப்போது மேல்தட்டு மக்களிடம் லேட்டஸ்ட் ஃபேஷன்.
நடிகை தமன்னா பட்டர் காஃபியின் தீவிர ரசிகையாம். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டர் காஃபி பற்றி எழுதிய பிறகு இன்னும் கொஞ்சம் பிரபலமாகிவிட்டது.

‘‘என்னுடைய ஃபிட்டான உடலுக்கும் நிறத்துக்கும் பட்டர் காஃபி முக்கிய காரணம். காலையில் பட்டர் காஃபி அருந்துவதால் நிறைய எனர்ஜி கிடைக்கிறது. பசி உணர்வு கட்டுப்படுகிறது. அந்த நாள் எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

பொதுவாக ரத்த சர்க்கரை அளவை சீராக்கும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைப் போலவே, பட்டர் காஃபியும் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதால் இப்போதெல்லாம் காலையில் பட்டர் காஃபியைத் தவற விடுவதே இல்லை அருந்துகிறேன்’’ என்று அதற்கான காரணத்தையும் குறிப்பிடுகிறார்.

பட்டர் காஃபி குடித்தால் உடல் எடை குறையும் என்பதால், இப்போது பலரும் இதைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். டயட்டீஷியன்களும் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டார்கள். சீக்கிரமே அதற்கு அடிமையாகவும் ஆகிவிடுவோம் போல் இருக்கிறது என்றும் பலர் அதன் சுவை காரணமாக அலறுகிறார்கள். சரி... பட்டர் காஃபி எப்படி தயாரிப்பது?

இன்ஸ்டன்ட் காஃபி பவுடர் அல்லது நீங்கள் வழக்கமாக அருந்தும் காஃபியுடன், பாலுக்கு பதிலாக ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்காத வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஒரு ஸ்பூன் சேர்த்து ப்ளெண்டரில் ஒரு சுற்று சுற்றினால் பட்டர் காஃபி ரெடி!

- என்.ஹரிஹரன்