வெண்புள்ளிக்கு விடை கொடுப்போம் !



அழகே... என் ஆரோக்கியமே...

வெண்புள்ளி ஒரு நோயா இல்லையா என்று கேட்டால் இல்லை என்றுதான் ஒரே வரியில் சொல்ல வேண்டும். முடி எப்படி நரைக்கிறதோ, அதுபோல்தான் வெண்புள்ளியும். இந்த வெண்புள்ளி எதனால் ஏற்படுகிறது? யாருக்கு வரும்? தீர்வு உண்டா? என்பது பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்...

வெண்புள்ளி(Vitiligo) பல காரணங்களால் உண்டாகும். மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் வரலாம். ஆனால், எல்லோருக்குமே மரபணுக்
களில் வரும் மாற்றங்கள் மட்டுமே காரணம் அல்ல. எதிர்ப்பு சக்தியில் உண்டாகும் மாற்றங்களாலும் வரலாம்.

அதுபோல் மற்ற சுய எதிர்ப்பு சக்தி நோய்களோடு(Autoimmune disorders) சேர்ந்தும் வரலாம்.சிலருக்கு மற்ற உறுப்புகளிலும் சில பிரச்னைகளால் சேர்ந்தும் வரலாம். தைராய்டு சுரப்பி கோளாறு, ரத்தசோகையில் ஒரு வகையான Pernicious Anemia, நீரிழிவு போன்ற நோய்களோடு சேர்ந்தும் வரலாம்.

கண்களில் உள்ள மெலனோசைட்கள் பாதிக்கப்பட்டால் சிலருக்கு கண் தொந்தரவும் வரலாம். உள் காதிலும் இந்த மெலனோசைட்கள் உண்டு. அங்குள்ள மெலனோசைட்களும் பாதிக்கப்பட்டால் காது கேட்பதிலும் தொந்தரவு வரலாம்.

பொதுவாக வரும் வெண்புள்ளி வகையை Vitiligo Vulgaris என்றழைப்போம். அது ஓரிடத்தில் சின்னதாக ஆரம்பித்து உடல் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக பரவும். இந்த நோயினால் சருமத்தில் வரும் தொந்தரவைவிட, மனதளவில்தான் பெரும்பாலான நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த நோயைக் கண்டதும் மக்கள் மனதில் தோன்றும் முக்கிய சந்தேகங்களை பார்ப்போம்.

* வெண்புள்ளி எனக்கு ஏன் வந்தது?

சர்வதேச அளவில் 100 பேரில் ஒருவருக்கு வெண்புள்ளி வரும். இந்த பாதிப்பு இந்தியா, மெக்சிகோ, ஜப்பான் போன்ற தேசங்களில் அதிகமாக இருக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு வெண்புள்ளி பாதிப்பு இருந்தால் மரபணு காரணமாக பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு 6-18% வரை உண்டு. அதே நேரத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு இருப்பதால் மற்றவருக்கு கண்டிப்பாக வரும் என்றும் சொல்ல முடியாது. குடும்பத்தில் யாருக்கும் இல்லாததால் ஒருவருக்கு வராது என்று கூறவும் முடியாது.

அதாவது பல மரபணுக்களில் உள்ள மாற்றம் காரணமாக இருந்தாலும் வேறுபட்ட உள்ளூடும் திறன் உள்ளது. ஆகையால், யாருக்கு எப்போது வரும் என்று எவராலும் சொல்ல முடியாது. எனினும் பிரச்னையை ஏற்படுத்தும் அல்லது அதிகப்படுத்தும் காரணங்களாக மனக்கவலை, மாத்திரைகள் உட்கொள்ளுதல், கிருமித்தொற்று, அடிபடுதல் போன்றவைகளைக் காரணமாகக் கூறுவார்கள்.

ஆகையால், வெண்புள்ளி ஒருவருக்கு உண்டாகும்போது அவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்டு அவரது மனக்கவலையை அதிகப்படுத்தும் வேலையை செய்யக் கூடாது.

நம் உடலில் உள்ள செல்களில் நச்சுப்பொருட்கள் உண்டாவதும் அது வெளியேற்றப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிற ஒரு செயல். ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இந்த செயல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதை Oxidative Stress என்று கூறுவர். விஷத்தன்மை கொடுக்கும் அழுத்தம் என்று இதை தமிழ்ப்படுத்தலாம். இந்த நச்சுப் பொருட்களையே Free Radicals என்றழைப்போம்.

மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய், நீரிழிவு போன்றவைகளை உண்டாக்கும் முக்கியக் காரணியாக இந்த Free Radicals இருக்கிறது. குறிப்பாக, காய்ச்சிய எண்ணெயை திரும்பத் திரும்ப சமையலுக்கு உபயோகிக்கும்போது இந்த Free Radicals அதிகம் உண்டாகும். ஆகவேதான் காய்ச்சிய எண்ணெயை திரும்ப உபயோகப்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள்.

வெண்புள்ளியை உண்டாக்குவதிலும் ஃப்ரீ ரேடிக்கல்கள் என்ற நச்சுக்குப்பைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஆய்விலும் உறுதியாகியுள்ளது. வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களின் சருமத்தைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களின் சருமத்தில் Free Radicals அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனவே, சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்ற விஷயங்கள் நம்முடைய வெண்புள்ளியைத் தடுப்பது உட்பட எல்லாவித ஆரோக்கியத்துக்கும் அவசியம்.

* வெண்புள்ளியின் சில வகைகள்

சின்னக் குழந்தைகளுக்கு Segmental Vitiligo என்ற வெண்புள்ளி ஏற்படும். பெரியவர்களுக்கும் இந்த பாதிப்பு உண்டாகலாம். நரம்பின் பாதையில் மட்டும் வெண்புள்ளியை உண்டாக்கும் பிரச்னை இது. நரம்பிலிருந்து வெளியாகும் சில வேதியியல் பொருட்களும் அதன் தன்மை மாறும்போது மெலனோசைட் செல்களை சேதப்படுத்தி வெண்புள்ளியை உண்டாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் உள்ள சருமம் முழுவதையும் மெலனோசைட்கள் அழித்து முழுமையாக வெள்ளையாக்கிவிடும். இதற்கு Complete Vitiligo என்று பெயர். Focal Vitiligo என்ற வகையில் ஒரு சின்ன இடத்தில் மட்டும் பாதிப்பு இருக்கும். மற்ற இடங்களுக்கு பரவாது.Mucosal Vitiligo என்ற வகையில் உதடு, பிறப்புறுப்பு போன்ற இடங்களில் பாதிப்பு இருக்கும். மார்பின் முலைக்காம்பும் சிலருக்கு பாதிக்கும்.

Lip-Tip Vitiligo என்ற வகையில் உதடு, கைவிரல்களின் நுனி, கால் விரல்களின் நுனி பாதிக்கும். இதில் விரல் நுனிகள் வைத்தியம் செய்தாலும் அந்த இடத்தில் மீண்டும் இயல்பா வருவது சிரமம்தான்.வெண்புள்ளி பிரச்னையில் சருமம் தன்னுடைய நிறத்தை இழந்து, வெள்ளை நிறத்துக்கு மாறும் என்பது உண்மைதான்.

ஆனால், வெள்ளையாகத் தெரிவது எல்லாமே வெண்புள்ளி இல்லை. வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல் 20-30 வயது உள்ளவர்களுக்கும் ஒரு சின்ன பட்டாணி அளவு அல்லது மிளகு அளவு வெள்ளையாக தோலில் ஒரு புள்ளி இருக்கும். அதை Idiopathic guttate hypomelanosis என்றழைப்பார்கள். Idiopathic என்றால் ஏன் என்றே தெரியாது என்று அர்த்தம். Guttate என்ற வார்த்துக்கு மழைத்துளி என்றும், Hypomelanosis என்றால் அங்கே நிறம் குறைந்துள்ளது என்றும் அர்த்தம்.

இதுபோல் 4-5 புள்ளிகள்கூட ஆங்காங்கே இருக்கலாம். இதற்கு பயப்படத் தேவையில்லை. இது தன்னுடைய அளவில் இருந்து பெரிதாகாது. அதே நேரத்தில் எந்த வைத்தியத்துக்கும் குணமும் ஆகாது. அதனால், இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே நல்லது. வயதாகும்போது நிறைய பேருக்கு இவ்வாறு வர சாத்தியம் உண்டு.

இதில் Post inflammatory pigmentation என ஒரு வகை உள்ளது. ஏதாவது அடிபடுவதாலோ அல்லது தீப்புண் வந்தபின் ஆறும்போது சருமம் வெளுத்துப் போகும் Inflammation இதற்கு காரணமாக இருக்கும். சருமத்தில் இதனால் நடக்கும் போராட்டத்தில் மெலனோசைட்கள் அழிந்து அந்த இடம் வெள்ளையாகிவிடும்.

Contact Leukoderma என்றால் நாம் உபயோகிக்கும் சில பொருட்களில் உள்ள வேதிப்பொருட்களினால் சருமம் நிறமிழந்து போகும் முறை. செருப்பு, ஸ்டிக்கர் பொட்டு, பர்ஸ் போன்றவற்றில் உள்ள Paraphenylenediamine, Azo dyes, Mercurials போன்ற ரசாயனங்கள் இதை உண்டாக்கலாம். ஆகையால், நாம் தினசரி உபயோகிக்கும் பொருட்களும் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

மச்சத்தைச் சுற்றி சருமத்தில் நிறமிழக்கும் Halo Nevus குறைபாட்டில், மெலனோசைட்டை எதிர்த்து உண்டாகும் Antibodies அதிகம் ஏற்பட்டால், மச்சத்தை சுற்றியுள்ள இடங்களிலும் மெலனோசைட் பாதிக்கப்பட்டு சருமம் தன்னுடைய நிறத்தை இழக்கலாம்.
வெண்புள்ளி வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் சரும நல மருத்துவரின் உதவியை நாடுங்கள். நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா அல்லது கட்டுப்படுத்த வேண்டுமா என்று மருத்துவர் பார்த்தால்தான் தெரியும். ஆரம்ப நிலையிலே மருத்துவர் உதவியை பெற்றால்தான் மருத்துவ சிகிச்சையைக் கொண்டு நோயை கட்டுப்படுத்துவதோ, குணப்படுத்துவதோ முடியும். இல்லாவிட்டால் வைத்தியம் செய்தாலும் வெற்றி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

* சிகிச்சைகள்

Puva Therapy என்று சொல்லப்படும் Psoralen மற்றும் புற ஊதாக்கதிர் A அல்லது NBUVB என்று அழைக்கப்படும் Narrow Band  UV `B’ சிகிச்சையில், மெலனோசைட்டைத் தட்டி எழுப்பும் Growth factors அல்லது ஸ்டீராய்டு களிம்போ மற்ற மருந்துகளோ உபயோகிக்க வேண்டியிருக்கலாம். தைராய்டு பிரச்னை உள்ளதா மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்று சில பரிசோதனைகளும் தேவைப்படும்.

நோய் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது, ஒரு வருடமாக புதிய இடத்தில் நிறமிழக்கவில்லை. ஆனால், மேலே தடவும் களிம்புகளாலும் குணம் தெரியவில்லை என்றால் அறுவைசிகிச்சை செய்து தொடையிலிருந்து நிறமிழக்காத தோலை எடுத்து நிறமில்லாத இடத்தில் வைத்துவிடலாம். அறுவை சிகிச்சையில் Split skin grafting, Miniature punch grafting மற்றும் Suction after grafting என்று பலவகைகள் உள்ளது.

தற்போது நவீன மருத்துவ உபகரணங்கள் உதவியைக் கொண்டு Melanocyte cell suspension, Epidermal cell Suspension, Automated Epidermal harveshing procedure போன்ற சிகிச்சைகளில் வைத்தியம் செய்ய முடியும்.இதில் முக்கியம் என்னவென்றால், ஆரம்பநிலையிலேயே வைத்தியம், மருத்துவரின் மீது நம்பிக்கை, தொடர்ந்து வைத்தியம் செய்தல், பொறுமை, மனத்தெளிவு இவை இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே,  நம்பிக்கை இழக்காமல் இதுவரை வைத்தியம் செய்யவில்லை என்றாலும்கூட முயற்சி செய்துதான் பாருங்களேன்.

( ரசிக்கலாம்... பராமரிக்கலாம்... )