உணவுக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை!



Centre Spread Special

மற்ற நடிகைகளிலிருந்து சமந்தா சற்று வித்தியாசமானவர்தான். நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி, அதே வேகத்தில் திருமணமும் செய்துகொண்டு, உடனடியாக சினிமாவுக்கும் திரும்பிவிட்டார் ஹீரோயினாகவே!விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயனுடன் சீமராஜா என்று தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் ராம்சரண், துல்கர் சல்மான் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இதற்கெல்லாம் முக்கிய காரணமாக சமந்தா நம்புவது 3 விஷயங்களை... கணவர் நாகசைதன்யா குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, ஹீரோக்களின் பெருந்தன்மை இவற்றுடன் தன்னுடைய ஃபிட்னஸ் கான்ஷியஸ்.

‘‘அழகான தோற்றம் கிடைக்க வேண்டும், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாள் தவறாமல் ஜிம்முக்குச் சென்றுவிடுவேன். எதற்காகவும் உடற்பயிற்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன். அதிகாலையில் படப்பிடிப்பு என்றாலும் 5 மணிக்கு முன்பே எழுந்து கட்டாயம் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்துவிடுவேன். அதன் பின்னரே ஷூட்டிங் கிளம்புவேன்.

ஜிம்முக்குப் போக நேரம் கிடைக்காவிட்டாலும், அன்று, குறைந்தபட்சம் ஜாக்கிங்காவது செய்யாவிட்டால் எனக்கு தலையே வெடித்துவிடும்’’ என்று சொல்லும் சமந்தா, பல்வேறு உடற்பயிற்சிகளோடு தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பாட்டத்தையும் இப்போது கற்றுக் கொள்கிறார். அவருக்கு சிலம்பம் கற்றுத்தரும் பயிற்சியாளரான தயா ராஜேஷ், ‘‘உண்மையில், மிகவும் ஆர்வமாகவும் அர்ப்பணிப்போடும் பயிற்சிகளைச் செய்கிறார். வகுப்பு ஆரம்பிக்கும் 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஆஜராகிவிடுவார். இத்தனை ஆர்வத்தை எல்லோரிடமும் பார்க்க முடியாது’’ என்று வியக்கிறார்.

சமந்தாவின் கட்டுடலுக்கு அவரது உடற்பயிற்சிகளைப் போலவே மற்றுமொரு காரணம் டயட். உணவியல் நிபுணரும், பயிற்சியாளரும் பட்டியலிட்டுத் தந்த உணவுகளையே உண்கிறார். ‘‘நான் அதிகமாக எடுத்துக் கொள்ளும் புரதம் நிறைந்த உணவுகள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதற்கு உதவுகின்றன. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்காக தண்ணீர், பழச்சாறுகள் அல்லது இளநீரை அவ்வப்போது குடிப்பது வழக்கம். இது என் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

கலோரிகளை கணக்கிட்டு சாப்பிட மாட்டேன். எனக்குப் பிடித்த எல்லா வகை உணவுகளையும் உண்பேன். எடை குறைப்புக்காக உணவைத் தவிர்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதேநேரத்தில் ஆரோக்கியமான உணவுகள் எது, ஆரோக்கியக் கேடான உணவுகள் எதுவென்ற தெளிவும் எனக்கு உண்டு.

காய்கறிகள், பழங்கள் நிறைந்த சாலட், நட்ஸ், பெர்ரி பழங்கள், சிக்கன், மீன், சர்க்கரைப் பொங்கல், ஃபில்டர் காபி மற்றும் விதவிதமான ஊறுகாய்கள் ஆகியவை ஃபேவரைட்’’ என்கிற சமந்தாவுக்கு வேறு ஒரு பெருமைக்குரிய முகமும் இருக்கிறது. தன்னுடைய சம்பாத்தியத்தின் ஒரு பகுதியில், ‘பிரதியுஷா சப்போர்ட்’ என்ற அறக்கட்டளையின் மூலம் மருத்துவம் சார்ந்த பல சமூக உதவிகளையும் சத்தமில்லாமல் செய்துவருகிறார்.

- இந்துமதி