தண்ணீருக்கு மாற்றே இல்லை!# Save Water



மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம்

திரும்பத் திரும்ப சொல்லித்தான் ஆக வேண்டும். ஆம்... நீரின்றி அமையாது உலகு!

மனிதனுக்கு மட்டுமில்லாமல், உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீர் என்பது மிகமிக அவசியம். நமது உடலில் 80 சதவீதம் வரை தண்ணீர்தான் உள்ளது. எனவே, ஆரோக்கியம் சார்ந்து நாம் தண்ணீரைத் தவிர்க்கவே முடியாது.

அதற்கு மாற்றும் இல்லை.எனவே, இருக்கிற நீராதாரங்களைப் பாதுகாப்பதும், அதனை அதிகப்படுத்துவதும் முக்கியம்.  சுகாதாரமான முறையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்வதும் அவசியம் என்கிறார் உணவியல் நிபுணரான வினிதா கிருஷ்ணன்.

*நம்முடைய உடலில் ஏராளமான உயிரணுக்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நாம் உட்கொள்ளும் நீரைச் சார்ந்தவையே. எனவே, சரியான அளவுக்கு ஒருவர் தினமும் தண்ணீர் குடிக்காமல் விட்டுவிட்டால் செல்கள் வறண்டுபோய் மெல்லமெல்ல சுருங்கி செயல் இழந்துவிடும். அதாவது, காற்று வெளியேற்றப்பட்ட பலூன் எவ்வாறு சுருங்கி காணப்படுமோ அதைப்போன்று, நம்முடைய செல்களும் சுருங்கி விடும்.

*உயிரணுக்களில் காணப்படுகிற ஊட்டச்சத்தானது உடலின் மற்ற உறுப்புகளுக்கு சரியான விகிதத்தில் சென்று வர வேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்றாட நடவடிக்கைகள் முறையாக நடைபெறும். அவ்வாறு நடப்பதற்கும் தண்ணீர் மிகவும் முக்கியம்.

* இன்று நாம் வசிக்கிற இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அளவுக்கு அதிகமாக மாசு அடைந்துள்ளன. இதன் காரணமாக, கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள்கள் நிறைந்த காற்றை சுவாசிக்கிறோம். அதுமட்டுமில்லாமல், உரம் என்ற பெயரில் நிறைய ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத்தான் ஒவ்வொரு நாளும் சாப்பிடுகிறோம்.

*மேலும், அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதால் உடலில் நச்சுக்கள் நிறைய சேர்கின்றன. இவற்றை கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள்தான் வெளியேற்றுகின்றன. இவற்றின் வேலையை தண்ணீர்தான் எளிதாக்குகிறது. இதனால், ஒவ்வொருவரும் தமது உடலில் போதுமான அளவுக்கு நீர்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு நாளில் இரண்டரை லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். இல்லையென்றால், இந்த உறுப்புக்களின் வேலை நேரம் அதிகமாகி, விரைவில் இவை செயல் இழக்கத் தொடங்கும்.

*இரண்டரை லிட்டர் முதல் மூன்று லிட்டர் என்பது பொதுவான அளவுகோல். வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு இந்த அளவுகோல் பொருந்தாது. இதைத்தவிர, ஒருவருக்கு எவ்வளவு நீர் தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, வேறொரு அளவுகோலும் டயட்டீஷியன், டாக்டர் ஆகியோரால் பயன்படுத்தப்படுகிறது.

*சிறுநீர் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அந்த நிறத்தில் இருந்து மஞ்சளாக மாறும்போது, உடலில் பெருமளவு நீர்சத்து குறைந்து விட்டது என சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.

*சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர், போர்வெல் வாட்டர் என எதுவாக இருந்தாலும், நன்றாக கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வருவது ஆரோக்கியம் தரும். ஏனென்றால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் கொதிக்க வைப்பதால்
அழிக்கப்படும்.

* போதுமான தண்ணீர் அருந்தும்போது உடலில் காணப்படும் தேவையில்லாத கொழுப்பு அகற்றப்படும்.

* கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையிலும், நீரைக் காய்ச்சி அருந்துவதுதான் பாதுகாப்பானது. ஏனென்றால், மனித உடலின் சராசரி வெப்பநிலை 98 டிகிரி. குளிர்ச்சியான தண்ணீர் வயிற்றினுள் செல்லும்போது, இயல்பான வெப்பநிலையைத் தக்க வைத்துக்கொள்ள உடல் உறுப்புகள் கூடுதலாக வேலை செய்யும். இதனால்தான் ஐஸ் வாட்டர் குடித்தாலும் தாகம் அடங்குவதில்லை.

* உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் சாப்பிடுவதற்கு முன் 2, 3 டம்ளர் நீர் அருந்தலாம். இதனால், சாப்பிடும் உணவின் அளவு கணிசமாகக் குறையும்.

* வெயில் காலத்தில் நம் தாகம் தீர்க்க பதநீர், இளநீர் என நிறைய கிடைத்தாலும், அவற்றை தண்ணீருக்கு ‘மாற்றுப்பொருள்’ என கொள்ள முடியாது. ஏனென்றால், PH-7 என்ற பொருள் நீரில் மட்டும்தான் இருக்கிறது. அதனால், தண்ணீர் என்பது தண்ணீர்தான். அதற்கு மாற்றே கிடையாது!

தொகுப்பு: விஜயகுமார்