பார்வை அளிக்கும் புதிய சிகிச்சை! நம்பிக்கை

விழித்திரை நோய் காரணமாக பார்வையை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி இது. பரம்பரை விழித்திரை பாதிப்பால்(LCA) பார்வை இழந்தவர்களுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லாமல் இருந்து வந்தது.

அரிதாக 80 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்த பார்வைக் குறைபாடு, குழந்தைப் பருவத்தில் ஏற்பட்டு பின்பு படிப்படியாக முழு பார்வையையும் பறிக்கக் கூடியது. இதுபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் University of iowa ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள ஆய்வொன்றில்தான் இந்த நம்பிக்கை கிடைத்திருக்கிறது. பாதிப்பு கொண்ட நோயாளிகளின் விழித்திரையில் ஆரோக்கியமான மரபணுக்களை எடுத்துச் செல்லும் லட்சக்கணக்கான வைரஸ்களை செலுத்தி ஆய்வு செய்தனர். பாதிப்புக்கு உள்ளான 29 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 27 பேரால் உருவங்களையும், ஒளியையும் பார்க்க முடிந்தது. இயல்பான பார்வை கிடைக்கவில்லை என்றாலும், கம்பு மற்றும் மற்றவர்களின் உதவியின்றி அவர்களால் நடமாட முடிந்தது.

இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலானோருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பார்வை நீடிக்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் 200- க்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சிகிச்சையை FDA-வின் ஆலோசனை குழு கடந்த அக்டோபரில் ஒருமனதாக அங்கீகரித்துள்ளது. எனவே, இந்த மரபணு சிகிச்சைமுறைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூடிய விரைவில்
அனுமதி வழங்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

- க.கதிரவன்