அமைதி கிடைக்கும்... ஆரோக்கியம் நிலைக்கும்!



ஃபாலுன் தாஃபா தரும் பரவசம்

சீனாவின் தொன்மையான ஆன்மிகப் பயிற்சியான ஃபாலுன் தாஃபாவை, மீண்டும் 1992-ம் வருடம் லீ ஹோங்ஜி என்பவர் சீனாவில் பிரபலப்படுத்தினார். மனநலம், உடல்நலம் மற்றும் சமூகநலம் என்ற மூன்று தளங்களிலும் இந்தப் பயிற்சி பயன்படுகிறது என்பதால் தற்போது உலகம் முழுவதும் பரவி 10 கோடிக்கும் மேலான மக்களால் விரும்பப்படும் பயிற்சியாகிவிட்டது ஃபாலுன் தாஃபா.

சீரான சுவாசம், தியானம், எளிதான உடற்பயிற்சிகள் என்று வித்தியாசமான காம்போவாக அமைந்திருக்கும் இந்த பயிற்சிக்கு Falun Gong என்ற பெயரும் உண்டு. உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள ஃபாலுன் தாஃபா, சமீபகாலமாக இந்தியாவிலும் கால் ஊன்றிவிட்டது. டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் ஃபாலுன் தாஃபா ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், காவல்துறை பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள், புத்தகக் கண்காட்சிகள் போன்ற இடங்களில் இதன் பயிற்சியாளர்களும், பயிற்சி அரங்கங்களும் தென்படுகின்றன

. இத்தனை ப்ளஸ் கொண்ட ஃபாலுன் தாஃபா மீது சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. என்ன காரணத்தாலோ, சீன அரசாங்கம் இந்த பயிற்சியை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்ததுடன் சட்டரீதியாகவும் தடை செய்திருக்கிறது. அரசாங்கத்துக்கு எதிரான ஆன்மிக இயக்கம் என்று அதன் பயிற்சியாளர்களைக் கைது செய்கிற சம்பவங்களும் நடக்கிறது.

இப்படி பாராட்டுகள், விமர்சனங்கள் என்று சரிசமமாக இருப்பதால் ஃபாலுன் தாஃபா பற்றிப் புதிதாகக் கேள்விப்படுகிறவர்கள் அது நல்லதா, கெட்டதா என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். ‘நமக்கு எதுக்குங்க இந்த வம்பெல்லாம்... நம் ஊர் யோகாவும், தியானமுமே போதும். எந்த பக்கவிளைவும் இல்லாத பக்காவான பயிற்சி’ என்று உங்களுக்குள் மைண்ட் வாய்ஸ் ஓடுகிறதா? அதுவும் சரிதான்!

- என்.ஹரிஹரன்