ஆய்வுகள் சொல்வது இதைத்தான்...



பெண்களின் எதிர்பார்ப்பு பற்றிய ஆராய்ச்சிகள் உலகெங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கின்றன. ஆண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்களும் இருக்கின்றன. அதுபோல், சமீபத்தில் டெல்லியில் செயல்பட்டு வரும் திருமண தகவல் இணையதளம் ஒன்று நடத்திய ஆய்வு முடிவு இது.

இவர்கள் சர்வேக்காக எடுத்துக் கொண்ட பிரிவுகளில் சம்பாத்தியம், வேலை, வாழ்விடம் போன்றவற்றை தவிர்த்து, ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்று 5 முக்கிய பண்புகளின் கீழ் தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த தகுதிகளை எதிர்பார்க்கும் பெண்களை சதவிகிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

நடத்தைப் பண்புகள் 84% நேர்மை 10 பெண்களில் 8 பெண்கள், தங்களிடம் ஆண்கள் உண்மையாக இருப்பதை எதிர்பார்க்கிறார்கள். ‘உன்னிடமிருந்து விலகாமல் இருக்கிறேன்’ என்பதை ஓர் ஆண் ஒவ்வொரு நொடியும் உறுதிசெய்வதை அவள் விரும்புகிறாள்.

75% வாக்குத் தவறாமை ஆண், ஒரு செயலை செய்வதாக உறுதி அளித்துவிட்டால், அது சாதாரணமானதாக இருந்தாலும் பொறுப்புடன் முடிக்க வேண்டும் என 4-ல் ஒரு பெண் எதிர்பார்க்கிறாள்.

67% கருணை மனிதர்களிடமோ அல்லது உயிரினங்கள் அனைத்திடமோ கருணையோடு இருக்கும் ஆணை நம்பிக்கைக்கு
உரியவனாக நினைக்கிறாள்.

66% உண்மையைச் சொல்லும் தைரியம் எந்த இடத்திலும் நடந்த உண்மையைச் சொல்லும் தைரியமான ஆண்களை பெண்கள் அதிகம் நம்புகிறார்கள்.

51% நல்ல தந்தை தன் குழந்தை மீதான அக்கறை, கவனிப்பு, அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் கணவனை பெண்கள்
விரும்புகிறார்கள்.

ஆளுமைப் பண்புகள் 77% நகைச்சுவை அலுவலகம், வீடு என இரண்டையும் கவனித்துக் கொள்ளும் நிலையில் இன்றைய பெண்கள் மிகவும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். அவர்களை எளிதில் சிரிக்க வைக்கும் திறனுள்ள ஆண்கள் எக்ஸ்ட்ரா போனஸ் பாயின்ட்டைப் பெறுகிறார்கள். 10-ல் 7 பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ள ஆண்களைப் பிடிக்கிறது.

55% புத்திக்கூர்மை உலக அறிவுமிக்க, சிக்கலான பிரச்னைகளை எளிதில் தீர்க்கக்கூடிய ஆண்களை சுவாரஸ்யமானவர்களாகவும், பாதுகாப்பானவர்களாகவும் பெண்கள் கருதுகிறார்கள்.

46% ஆர்வம் கலை, அறிவியல் போன்றவற்றில் ஆர்வம் உள்ள ஆண்கள் மனிதர்களிடம் அக்கறை எடுத்துக் கொள்பவர்களாக பெண்கள் நினைக்கிறார்கள்.

41% தன்னம்பிக்கை தன்னம்பிக்கை அதிகம் உள்ள ஆணே, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்த முடியும். அவனே ஒரு பெண்ணின் வாழ்வில் பயமின்றி செயல்பட அனுமதிப்பான் என்பது பெண்களின் எண்ணம்.

38% பெருந்தன்மை 35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், பெருந்தன்மைப் போக்கை ஆண்களுடைய முக்கியமான பண்பாக கருதுகிறார்கள். பெண்களின் விருப்பத்தை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற நினைக்கிறார்கள்.

நடைமுறைத் திறமைகள் 53% முழுமையாகக் கேட்பது எப்போதும் மொபைலைப் பார்த்துக் கொண்டிருக்காமல், தான் பேசுவதை காதுகொடுத்து கேட்க வேண்டும். உன்னுடைய பிரச்னைகள் எல்லாவற்றையும் நான் குறைந்தபட்சம் கேட்கவாவது செய்கிறேன் என்ற நம்பிக்கையை உணர்த்த வேண்டும்.

48% காதல் பெண்களின் வலதுபக்க மூளை காதல் வயப்படும்; தர்க்கரீதியான சிந்தனைகளுக்கு அங்கே இடமில்லை. ஆண்கள் தங்கள் காதலை வெளிப்படையாகவும், தைரியமாகவும் வெளிப்படுத்துவதை பெண் விரும்புகிறாள்.

35% பொறுமை எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்படும் ஆணை பெண்களுக்கு பிடிக்கும்.

23% வீட்டு வேலைகளில் பங்கு இன்று பெண்களும் இரவு நீண்ட நேர பணிகளுக்கு செல்கிறார்கள். சிலர் ஆண்களை விடவும் மிக கடினமான பணிகளை செய்கிறார்கள் எனும்போது  வீட்டுவேலைகள், குழந்தை வளர்ப்பில் கணவனின் பங்கை  எதிர்பார்க்கிறார்கள்.

21% சம்பாதிக்கும் திறன் ஒரு பெண்ணை பாதுகாப்பாக உணர வைப்பதற்கு பொருளாதார ரீதியாக பலம் பெற்றிருப்பதும் சிறந்த ஆணுக்கான தகுதி. 5-ல் 1 பெண் இந்த தகுதியை எதிர்பார்க்கிறாள்.

தோற்றம் 30% ஸ்டைலான தோற்றம் ஓர் ஆண் தன் தோற்றத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதும், பெண்களால் கவனிக்கப்படு
கிறது. தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அக்கறை இல்லாத ஆண்களை இன்றைய பெண்கள் விரும்புவதில்லை.

26% வசீகரமான முகம்

சிடுமூஞ்சிகள், காயத் தழும்புகள் கொண்ட ஆண்களைவிட வசீகரிக்கும் புன்னகையோடு, பளிச்சென்று வலம் வரும் ஆண்களை அதிகம்
விரும்புகிறார்கள்.

15% உயரம்

உயரம் பெண்களுக்கு ஒரு பொருட்டில்லை. சொல்லப் போனால் உயரம் குறைந்த ஆண்கள் பெண்களால் பெரிதும்  கவரப்படுகிறார்கள்.

13% தசை கட்டு

சிக்ஸ்பேக், எய்ட் பேக் என்பதைப் பெண்கள் விரும்புகிறார்கள் என்பது மேலோட்டமான முடிவுதான். பார்ப்பதற்கு லட்சணமாகத் தெரியும் ஆண்களையே பெண்களுக்குப் பிடிக்கிறது. அதேநேரத்தில் தொப்பை உள்ள ஆண்களுக்கு நோ.

12% ஃபிட்னஸ்

ஃபிட்னஸ் பற்றித் தெரிந்திருக்கும், அதைப் பின்பற்றும், வழிகாட்டும் ஆண்களைப் பெண்கள் விரும்புகிறார்கள்.

இதேபோல்,  ‘எனக்கான ஸ்பேஸ் கொடுக்கணும்; மாமியாரோட கம்பேர் பண்ணி பேசக்கூடாது; வேலைய விடச் சொல்லக்கூடாது; வேலைக்குப் போக வற்புறுத்தக்கூடாது; குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தக்கூடாது’ என இன்னும் பெரிதாக நீள்கிறது பெண்களின் எதிர்பார்ப்பு பட்டியல்.

- என்.ஹரிஹரன்