அதென்ன ஆன்டி ஆக்ஸிடன்ட்?!டிக்‌ஷ்னரி

டயட்டீஷியன்களும்,  டாக்டர்களும், மீடியாக்களும் அடிக்கடி குறிப்பிடுகிற ஒரு வார்த்தை ஆன்டி ஆக்ஸிடன்ட். அதென்ன ஆன்டி ஆக்ஸிடன்ட்? எதற்கு அவசியம்?  ஊட்டச்சத்து நிபுணர் லஷ்மி விளக்கமளிக்கிறார்...

‘‘நம் உடலில் இருந்தும், சுற்றுப்புறச் சூழல்களிலிருந்தும் Oxidants என்ற நச்சுக்குப்பைகள் உருவாகி நம் செல்களைத் தாக்குகின்றன. Free radicals என்ற பெயராலும் குறிப்பிடப்படும் இந்த நச்சுக்கள் முதுமைத் தன்மையை ஏற்படுத்துவதிலும், இதய நோய்களை வரவழைப்பதிலும், புற்றுநோய்களை உண்டாக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.  இந்த Oxidants-க்கு எதிராக செயல்பட்டு நம்மைக் காக்கும் சத்துமிக்க உணவு மூலக்கூறினைத்தான் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்கிறோம். காய்கறிகளிலும், பழங்களிலும், கீரைகளிலும் அதிகம் நிறைந்துள்ளது இந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள்.’’

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் எப்படி  செயல்படுகின்றன?

‘‘ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்கும். செல்களில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள நோய்களை கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும் வல்லமை கொண்டது. இது செல்களை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால் புற்றுநோய் தொடர்பான அனைத்து சிகிச்சைகளுக்கும் உதவுகிறது. செல்கள் தொடர்பான அனைத்து நோய்களை குணப்படுத்துவதிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கியப்
பங்காற்றுகிறது.’’

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் எவற்றில்  மிகுந்து காணப்படுகிறது?

‘‘வைட்டமின் ஏ, இ, சி போன்றவற்றில் இது அதிகமாக காணப்படுகிறது. வைட்டமின் ஏ, இ, சி நிறைந்துள்ள உணவுகளில், காய்கறிகள், பழங்களை உட்கொள்ளும்போது நமக்கு அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கிடைக்கிறது. கேரட், கீரை, ப்ரக்கோலி, முட்டை, பட்டாணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி போன்றவற்றை நாம் தொடர்ந்து உட்கொள்ளும்போது நமக்கு அது அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்டை தருகிறது.’’

ஆன்டி ஆக்ஸிடன்டுகளால் ஏற்படும் நன்மைகள்?

‘‘நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் தேவைப்படுகிறது. எனவே, ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துமிகுந்த உணவுகளை உட்கொள்ளும்போது இந்த நோய்களிலிருந்து தப்பலாம். இதயம் தொடர்பான நோய்களை தடுத்து சேதமடைந்த செல்களுடன் எதிர்த்துப் போராடி அவற்றிலிருந்து நம்மை காக்கவும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உதவுகிறது.

இதுதவிர அழகு சிகிச்சையிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கிய இடம் வகிக்கிறது.

சருமம் மற்றும் முடி சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. தொடர்ந்து ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை உண்ணும்போது சருமத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி முகம் பொலிவு பெறுகிறது.

 அழகு சிகிச்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்தும் போதும் விரைவாகவும் நல்ல பலன் கிடைக்கிறது. உடலுக்கு சோர்வு நீக்கி, புத்துணர்வு தரும் வேலையைச் செய்வதும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள்தான்.’’

எப்போது அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தேவை?

‘‘சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது அனைவருக்கும் நன்மை அளிப்பதால் அனைத்து வயதினருக்கும் இதன் தேவை உள்ளது. புற்றுநோய், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னையின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் தேவைப்படுகிறது. இதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது. குறிப்பாக வயதானவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும் இது அதிகம் தேவைப்படுகிறது.


மிக அரிதாக ஒரு சில நேரங்களில் மட்டுமே நுரையீரல் நோயின் தீவிரத்தைப் பொறுத்து, சிலருக்கு உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அளவை கட்டுப்படுத்த நேரிடும். ஆனால், இது தவிர்த்து அதன் தேவையே உடலுக்கு எப்போதும் அதிகம் உண்டு.

எனவே, ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை எப்போதும் எடுத்துக் கொள்ள வேண்டும். டாக்டர்களும், டயட்டீஷியன்களும் இதற்காகத்தான் காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.’’

- மித்ரா