காதலித்தால் அறிவு வளரும்! ஓர் அடடே ஆராய்ச்சி



மகிழ்ச்சி

‘காதலிக்கிறவர்களுக்கு அறிவு கிடையாது... மூளை வேலை செய்யாது என்பதெல்லாம் வயதானவர்கள் கிளப்பும் வதந்தி. உண்மையில் காதலித்தால் ஐ.க்யூ அதிகரிக்கும்’ என்கிறார் ஸ்டெபானி கேஸியோப்போ என்ற பெண் நரம்பியல் விஞ்ஞானி.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியராக பணிபுரியும் ஸ்டெபானி, தன்னுடைய பல வருட ஆராய்ச்சியில் இந்த சுவாரஸ்யமான உண்மையைக் கண்டறிந்திருக்கிறார்.

காதல் சாதாரணமான ஓர் உணர்வு, பழமையானது, ஒரு போதை என்ற ரீதியிலேயே இதுவரை வெளிவந்த மற்ற ஆராய்ச்சியாளர்களின் அணுகுமுறைகள் இருந்தன. ஆனால், காதலைப்பற்றி இதுவரை வெளிவந்த ஆய்வுகளிலிருந்து இவரது முடிவு முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதால் பலரது கவனத்தையும் இந்த ஆராய்ச்சி கவர்ந்திருக்கிறது.

மூளையில் உணர்வுகளை மட்டுமே தூண்டுவதல்ல காதல்... மூளையின் நரம்பு மண்டலங்களில் அதிக அறிவுசார் செயல்பாடுகள் மற்றும் அறிவாற்றலையும் செயல்பட வைப்பதாகவும் இருக்கிறது என்று ஸ்டெபானியின் ஆய்வு கூறியிருப்பதுதான் ஹைலைட். காதலர்களை உணர்வு ரீதியாக இணைக்கும் செயலை மட்டும் காதல் செய்வதில்லை, இருவரின் நடத்தைகளிலும் மாற்றத்தை கொண்டு வருகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

இதற்காக தன்னுடன் இணைந்து பணிபுரிந்த மருத்துவர்கள், மாணவர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் காதலின் போது மூளையின் எந்தப்பகுதி பிரகாசமாகிறது என்பதை MRI ஸ்கேன் தொழில்நுட்பத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார்.

‘காதல் என்பது வெறும் அன்பு, மகிழ்ச்சி, இனப்பெருக்கம் போன்ற அடிப்படை உணர்வுகளை தூண்டுவது உண்மைதான். மூளையின் குறிப்பிட்ட 12 மண்டலங்களையும் முறையாக செயல்படுத்துகிறது. இது என்னுடைய சொந்த அனுபவமும் கூட’ என்று வெட்கத்தோடு புன்னகைக்கிறார் ஸ்டெபானி.

- இந்துமதி