முப்பதிலேயே தொடங்கும் மூட்டுவலிஎலும்பே நலம்தானா?!

முதியோரை மட்டுமே பாதித்துக்கொண்டிருந்த மூட்டுவலி இன்று முப்பது வயதுக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. மாடிப்படிகளில் ஏறி இறங்க சிரமப்படுகிறார்கள். சிறிது தூரம் நடந்தாலே முட்டி வலிக்கிறது என்கிறார்கள்.

இளவயது மூட்டுவலிக்கு மாறிப்போன அவர்களது வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள், உடற்பயிற்சிகளே இல்லாத நிலை, பலமணி நேரங்கள் உட்கார்ந்தபடியே வேலை செய்வது போன்றவையே முக்கிய காரணங்கள்.குறிப்பாக, மூட்டுவலி என்பதை பலரும் முட்டியில் ஏற்படுகிற வலி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அப்படியில்லை.

மனித உடலில் மூட்டுகள் உள்ள இடங்களில் ஏற்படுகிற வலி எல்லாமே மூட்டுவலிதான். அப்படிப் பார்த்தால் உடலில் எங்கெல்லாம் மூட்டுகள் இருக்கின்றன தெரியுமா? கழுத்து எலும்புகளுக்கிடையில், தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு மற்றும் கை, இடுப்பு, முட்டி, கணுக்கால், பாதம், முதுகு என இவ்வாறாக மனித உடலில் பல மூட்டுகள் உள்ளன.

மூட்டுவலிக்கான முக்கிய காரணங்கள் உடற்பருமன், முதுமை, விபத்தின் காரணமாக மூட்டுகளில் அடிபடுவது, மூட்டுகளில் யூரிக் அமிலம் அதிகமாகச் சேர்வது, நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் டிபி நோய்

பெண்களுக்கு அதிக பாதிப்பு... ஏன்?

மாதவிலக்கு நின்றுபோகிறபோது பெண்களுக்கு இயல்பாகச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவு குறைகிறது அல்லது முற்றிலும் நின்றுபோகிறது. அதன் விளைவாக அவர்களது உடலில் கால்சியம் பற்றாக்குறையும் ஏற்படும். எலும்புகளின் அடர்த்தி குறைவதால் அவை பலமிழந்து மூட்டுகளில் வலி உண்டாகிறது. அதேபோல உடற்பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கும் வயது வித்தியாசமின்றி இளவயதிலேயே கூட மூட்டுவலி பாதிக்கலாம்.

எப்படி கண்டறியலாம்?

வலி ஆரம்பிக்கும்போதே விழித்துக் கொள்ள வேண்டும். அது சாதாரண வலியாக இருக்கும் என நீங்களாகவே நினைத்துக்கொண்டு அலட்சியம் செய்யாமல் எலும்பு, மூட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். பிரச்னையில்லாத மூட்டு வலி என்றால் சாதாரண மருந்து, மாத்திரைகளிலேயே குணப்படுத்துவார்.

கூடவே வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கங்களில் ஆலோசனைகள் சொல்வார்.  ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி வரலாம். பரிசோதனை முடிவுகளை பொறுத்து சிகிச்சைகளின் தன்மை வேறுபடும்.

என்ன சிகிச்சைகள்?

மூட்டுவலியின் தன்மை மற்றும் தீவிரத்தை பொறுத்து சாதாரண வலி நிவாரணிகள் முதல் பிசியோதெரபி, ஊசி, அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று சிகிச்சை வரை அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

* கதவுகளின் கைப்பிடிகளைப் பெரிதாக வைக்கவும்.
* தபால் பெட்டி, பால் பெட்டி போன்றவற்றை உங்களுக்கேற்ற சரியான உயரத்தில் வைத்துக் கொள்ளவும்.
* போன்பேசும்போது கூடியவரையில் ஹெட்செட் உபயோகிக்கவும்.
* அடிக்கடி பயணம் செய்கிறவர் என்றால் டச் டைப் சூட்கேஸ் உபயோகிக்கவும்.
* மாடிப்படிகளில் ஏறி இறங்க லிஃப்ட் பயன்படுத்தவும்.
* முன்பக்கமாக வளையவோ, குனியவோ கூடாது. அதிகமான எடை தூக்க வேண்டாம்.
*  சமையலறையில் எல்லாப் பொருட்களையும் உங்கள் கைகளுக்கு எட்டும்படியான இடத்தில் வைத்துக்கொள்ளவும். ட்ராலி பயன்படுத்திப் பொருட்களை நகர்த்துவதையும் செய்யலாம். எடை குறைவான கடாய் மற்றும் பாத்திரங்களைப் பயன்படுத்தவும்.
*  கைப்பிடிகள் உள்ள பாத்திரங்களைப் பயன்படுத்தவும்.
* பாத்ரூம்களில் கழிவறைகளில்  தேவையான இடங்களில் கைப்பிடிகள் வைத்துக்கொள்ளவும்.
* குழாய்களை சரியான உயரத்தில் பொருத்திக்கொள்ளவும். வழுக்காத தரைகளைப் பொருத்தவும்.
* படிக்கிறபோது அடிக்கடி பிரேக் எடுத்துக்கொள்ளவும். கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் Voice activated softwares பயன்படுத்தவும்.
* கார் பயன்படுத்துவோர் பவர் ஸ்டியரிங் உள்ள மாடல்களைப் பயன்படுத்தவும்.
* இருக்கையை உங்கள் உயரத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளவும்.

( விசாரிப்போம்... )