நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காய்கறிகளும், பழங்களும் சாப்பிடுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அந்த காய்கறிகளும், பழங்களும் விற்கப்படும் இடங்கள் சுகாதாரமாக இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
உள்ளூர் சந்தையாக இருந்தாலும் சரி... தலைநகரான சென்னையின் கோயம்பேடு சந்தையாக இருந்தாலும் சரி... பெரும்பாலான இடங்களின் நிலைமை சுகாதாரக் கேடுதான். இப்படிப்பட்ட சூழலில் நம் ஆரோக்கியம் காக்க என்ன செய்ய வேண்டும் என்று பொதுநல மருத்துவர் சிவராம் கண்ணனிடம் கேட்டோம்...
‘‘மனித உடலை எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வைத்து இருப்பதற்கு காய்களும், பழங்களும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன. நார்ச்சத்துகள், கால்சியம், இரும்புச்சத்து உள்பட உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களையும் காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக பெற முடியும். ஆனால், காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடங்களும், அதனைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகளும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
காய்கறிகள் விற்பனை செய்யப்படும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பல ஆண்டுகளாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வரும் பிரபலமான பகுதிகள் என எதுவாக இருந்தாலும் சுகாதார சீர்கேட்டுடன்தான் காணப்படுகிறது. இதனால், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டிய காய்கறிகளும், பழங்களும் சுகாதார சீர்கேட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக விற்பனைக்கு வருவதற்கு முன்னரே ரசாயனங்கள், பூச்சி மருந்து, அளவுக்கு அதிகமான உரம் சேர்க்கப்பட்ட நிலையில் நமது உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் விதமாகத்தான் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு லாரி மற்றும் வேன் போன்ற வாகனங்களில் கொண்டு வரப்படும்போது அவற்றை ஏற்றி வருபவர்கள், காய்கறி மூட்டை மீது உட்கார்ந்து கொண்டும், கால்களால் மிதித்தவாறும் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு எடுத்து வருகின்றனர்.
இப்படி சுகாதாரமற்ற நிலையில் கொண்டு வரப்படும் காய்கறிகள் மார்க் கெட்டுக்கு வந்ததும், அவற்றை திறந்தவெளியில் சேறும், சகதியும் அதிகம் உள்ள இடங்களில் மொத்தமாக போட்டு வைக்கின்றனர். பல மணி நேரம் அழுக்குகளும், தூசுகளும், புகைகளும் சேர்ந்த நிலையில் நோய்களைப் பரப்பும் ஈக்கள், கொசுக்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அவற்றின் மீது ஒட்டிக்கொண்டு இருப்பதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை’’ என்றவரிடம் இந்த காய்கறிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டோம்...
‘‘காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி பயன்படுத்தும்போது, முறையாக சுத்தம் செய்வது அவசியம். சுத்தமான தண்ணீரில் அழுக்கு மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் போகும்வரை இரண்டு தடவையாவது கழுவ வேண்டும். அதன்பின்னர், கொதிக்கும் நீரில் நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும்.
ஏனெனில், பெரும்பாலானோர் நாகரிகம் என்ற பெயரிலும், துரித உணவு என்ற பெயரிலும் முழுவதுமாக வேக வைக்காமல் பாதி வெந்த நிலையில் உண்ணும் வழக்கம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக, வயிறு தொடர்பான செரிமான குறைபாடு, வாந்தி, வயிற்றுப்போக்கு, நோய்த்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இது மாதிரியான சத்துக்களற்ற, கெட்டுப்போன காய்கறிகள், பழங்களை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், அடுத்த தலைமுறையினருக்கும் இந்த குறைபாடு பரவும்’’ என்கிற மருத்துவர் சிவராம கிருஷ்ணன் கூறும் நிறைவான கருத்து இது.
‘‘உள்கட்டமைப்புகள் சரியாக இல்லாத வணிக வளாகங்களில் காய்கறி கழிவுகளை சரியாக அகற்ற முடியாத நிலையே காணப்படும். அங்கு மழைக்காலங்களில் நீர் வெளியேறுவதற்குப் போதிய வசதி இல்லாத காரணத்தால், அடிக்கடி தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கும். எனவே ஈக்கள், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, நோய்கள் பரவும் அபாயம் உள்ளதையும் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.
வணிக வளாகங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உணவுப்பாதுகாப்பு சட்டதிட்டங்கள் என்னவென்று நியமன அலுவலர், உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலரான கதிரவனிடம் பேசினோம்...‘‘உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்பவர்களை சிறு வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் என 2 வகையாகப் பிரிக்கிறோம். அதாவது, 12 லட்சத்துக்கு கீழே வியாபாரம் செய்பவர்களைச் சிறு வியாபாரிகள் பிரிவிலும், 12 லட்சத்துக்கும் அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்பவர்களை மொத்த வியாபாரிகள் எனவும் வகைப்படுத்துவோம்.
மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் கடை ஆரம்பிக்க உள்ளவர்கள் முதலில், உணவுப் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரியிடம் கடையை நடத்துவதற்கான லைசென்ஸ் வாங்குவது அவசியம். 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து இது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் எங்களுக்கு வரும்போது, நாங்கள் கடை நடத்தப்படும் இடத்தை முதலில் ஆய்வு மேற்கொள்வோம். அப்போது, காய்கறிகளை வைப்பதற்கென்று காற்றோட்ட வசதியுடன் கூடிய அலமாரிகள் அல்லது பெட்டிகள் தனித்தனியே பொருத்தப்பட்டு உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்வோம். இவற்றோடு, நோய்களைப் பரப்பும் எலிகள், ஈக்கள் மற்றும் கொசுக்கள் கடைகள் உள்ளே செல்லாதவாறு, கம்பி வலைகள், தடுப்புகள் பொருத்தப்பட்டு உள்ளனவா என்பதையும் Pest Control Measurement மூலம் சரி பார்ப்போம்.
சுகாதாரமற்ற முறையில், தரம் இல்லாத காய்கறிகள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தால் பறிமுதல் செய்து அழிக்கிறோம். மேலும், அந்த வியாபாரி மீது, உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006 ன் படி வழக்குப் பதிவு செய்கிறோம். பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன்வாடி மையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
முறையான அனுமதி பெறாத வியாபாரிகளால்தான் பெரும்பாலும் இதுபோன்ற சுகாதாரக் கேடுகள் உருவாகிறது. அவ்வாறு சுகாதாரமற்ற காய்கறிகள், பழங்கள் விற்கப்படுவது தெரிந்தால் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், commfssatn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்’’ என்கிறார்.
கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தொடர்பு அலுவலர் சோமசுந்தரம் தன்னுடைய பார்வையை இந்த பிரச்னையில் முன்வைக்கிறார். ‘‘2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயம் சட்டப்படி காய்கறி கடை ஆரம்பிக்க உள்ளவர்கள் முதலில், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர், அவர்களிடம் கடையை நடத்துவதற்கான லைசென்ஸ் வாங்குவது அவசியம். இதற்கென்று, தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 500 உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர்.
அதிகாரிகள் கடை நடத்தப்படும் இடத்தை முதலில் ஆய்வு செய்வார்கள். அப்போது, கழிவறை, மீதமாகும் காய்கறி கழிவுகளை வைப்பதற்கான தொட்டி, தண்ணீர் வெளியேறுவதற்கான வசதி, பொது மக்களுக்கு இடைஞ்சலாகவும், நோய்களைப் பரப்பும் ஆடு, மாடுகள், நாய், எலி போன்ற விலங்குகள் உள்ளே வராத வகையில் கட்டமைப்பு ஆகியவற்றை சோதனை செய்து, சரியாக உள்ளதா என உறுதி செய்வார்கள்.
குறிப்பாக, குளிர்பதனக் கிடங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்வார்கள். ஏனென்றால், நிறைய இடங்களில் வியாபாரிகள் மறைவான இடங்களில் குளிர்பதன கிடங்கை அமைத்து வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைப் பதப்படுத்தி வைப்பார்கள். இதற்காக, Fungicides என்ற காளான்கொல்லியை உபயோகிப்பார்கள். இதனால், கேன்சர் முதலான உயிர்க்கொல்லி நோய்கள் பரவும்.
சமீபத்தில் பெரம்பூர் காய்கறி மார்க் கெட்டில், Fungicides மூலம் பதப்படுத்தப்பட்ட ஏராளமான வெங்காயத்தை உணவுப் பாதுகாப்பு துறை உயரதிகாரிகளின் துணையுடன் கைப்பற்றி அப்புறப்படுத்தினோம். எனவே, அதிகாரிகளும், பொதுமக்களும் மேற்கண்ட விதிமுறைகள் மீறப்படாமல் இருக்க இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ என்கிறார்.
- விஜயகுமார்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்
|