டோன்ட் ஒர்ரி முஸ்தபா...



நட்பு நலம் தரும்

கடைசி பெஞ்ச் கார்த்திக்குகளுக்கும், பள்ளிக்காலத்தில் அதிக நட்பு வட்டாரம் கொண்டவர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தி.கல்வி பயிலும்போது நண்பர்களோடு குழுவாகச் சேர்ந்து இயங்கும் பழக்கம் கொண்டவர்கள், எதிர்காலத்தில் ஆரோக்கியமான மனநலத்துடன் திகழ்கிறார்கள் என்று Child development இதழில் வெளியான ஓர் ஆய்வு கூறியிருக்கிறது.

15 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட மாணவர்களிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவாக இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. ஆய்வில் பங்கு பெற்றவர்களிடம் நட்பைப்பற்றியும், அவர்களிடையே காணப்படும் பதற்றம், சமுதாய ஏற்பு, சுயமதிப்பு, மனச்சோர்வு, தன்னம்பிக்கை போன்ற உணர்ச்சி அறிகுறிகள் பற்றியும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அவர்கள் அளித்த பதிலை ஆராய்ந்தபோது, 17 வயது வரையிலும் நெருங்கிய நட்பு வட்டத்தைக் கொண்டவர்கள் தங்களுடைய 25 வயதில் மன ஆரோக்கியம் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. அதேவேளையில் படிப்பு, விளையாட்டு, கலை போன்றவற்றில்
கல்விக்காலங்களில் பிரபலமாக இருக்கும் மாணவர்கள் நண்பர்களிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும் விலகியே இருப்பதால் அவர்களில் பலர் பின்னாளில் மன அழுத்தம் மிக்கவர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

‘புத்தகங்களில் படிக்கிற கல்வி மட்டுமே ஒருவரின் எதிர்காலத்துக்குப் போதாது என்பது இதன்மூலம் உறுதியாகி இருக்கிறது. கல்வித்திறனோடு சமூகத்தோடும் கலந்து பழகுதல், நல்ல நண்பர்களோடு நேரம் செலவழிப்பது போன்றவற்றின் அவசியத்தையும் இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

- என்.ஹரிஹரன்